மன அழுத்தம் என்பது நேரடியாகவும், மறைமுறைமாகவும் குழந்தையின்மைக்கு காரணமாகலாம். உடல் ரீதியிலான பல்வேறு காரணங்களுடன், மன அழுத்தமும் சேரும் போது, குழந்தையின்மை ஏற்படுகிறது.
'குழந்தையின்மைக்கான சிகிச்சை எடுத்துக் கொள்ளும் போது, மன அழுத்தத்துடனேயே இருப்பவர்களுக்கு சிகிச்சை வெற்றி தருவதில்லை' என, பல்வேறு ஆய்வுகள் உறுதி செய்கின்றன.
மன அழுத்தம் ஏற்படும் போது, மூளையில் உள்ள, 'ஹைப்போதாலமஸ்' என்ற பகுதியை பாதிக்கும். இதனால், ஹார்மோன் செயல்பாட்டில் சமச்சீரற்ற தன்மை நிலவுவதால், பெண்ணுக்கு கரு முட்டை வளர்ச்சியும், ஆணுக்கு விந்தணுக்களின் உற்பத்தியும் வெகுவாக குறைகின்றன.
மன அழுத்தம், குழந்தையின்மைக்கு இது போன்று நேரடி யாகவும், வாழ்க்கை முறை மாற்றத்தால் மறைமுகமாகவும் பாதிப்பையும் ஏற்படுத்தலாம்.
வாழ்க்கை முறை மாற்றம்
சரியான நேரத்திற்கு சாப்பிடுவது, மிதமான உடற்பயிற்சி, போதுமான அளவு துாக்கம் தான், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகவும் அடிப்படையான விஷயங்கள். ஐ.டி., நிறுவனங்கள் உட்பட, பல நிறுவனங்களில் இரவு நேரத்தில் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.
இரவு நேரத்தில் பணி செய்யும் போது, உணவு, துாக்கம் இரண்டின் நேரமும் மாறுபடும்; இதனால், பெண்ணின் உடலில் ஹார்மோன் சுரப்பு, சமச்சீரற்ற நிலைக்கு செல்லும். இதனால், இயல்பாகவே மனச் சோர்வு, மனப் பதற்றம் உட்பட, உளவியல் ரீதியலான பிரச்னைகள் ஏற்படும்; இதன் காரணமாக, கரு முட்டை வளர்ச்சி பாதிக்கப்படும்.
மன அழுத்தத்தில் இருந்தால், நிறைய சாப்பிட வேண்டும் என்ற உணர்வு ஏற்படலாம். எப்போதெல்லாம் மன அழுத்தம் அதிகமாகிறதோ, அந்த சமயங்களில் எல்லாம், பிரியாணி, 'சீஸ், பர்கர்' போன்ற அதிக கலோரி உள்ள உணவுகளை சாப்பிடத் தோன்றும்.
இப்படி சாப்பிட்டு சாப்பிட்டு, உடல் பருமன் அதிகமாகி, குழந்தையின்மை பிரச்னைக்கு, மன அழுத்தம் மறைமுக காரணமாகிறது. தம்பதியர், தொடர்ந்து இரவுப் பணியில் வேலை பார்க்கும் நிலையும் சகஜமாகி உள்ளது. இது, அவர்களுக்குள் அன்னியோன்யம் இல்லாமல் செய்து, தாம்பத்தியத்தின் மீது வெறுப்பு, எரிச்சல் ஏற்படவும் வாய்ப்பாக உள்ளது.
பெற்றோரின் சண்டை, சச்சரவுகளையே பார்த்து வளர்வது உட்பட, சிறு வயதில் ஏற்படும் பல பிரச்னைகளால், உறவுகளின் மேல் நம்பிக்கை இல்லாமல் வளரும் குழந்தை, திருமணமான பின், 'இந்த உறவு நீடிக்குமா...' என்று, தன் வாழ்க்கைத் துணை மீது சந்தேகத்துடனேயே இருப்பர்.
திருமண உறவில், ஆணுக்கோ, பெண்ணுக்கோ ஒருவர் மேல் மற்றவருக்கு நம்பிக்கை இல்லாமல், இருவருக்குள்ளும் பாதுகாப்பற்ற உறவே தொடரும்; இதனால் ஏற்படும் மன அழுத்தமும், குழந்தை யின்மைக்கு காரணமாகிறது.
இந்த பயம், பதற்றத்தால், தாம்பத்திய உறவில் திருப்தி இல்லாமல், தம்பதி ஒருவரிடம் மற்றவர் விலகிப் போவதற்கான வாய்ப்போ, வேறு ஒருவருடன் கூடுதலாக உறவு வைத்துக் கொள்ளும் விருப்பமோ வரலாம்.
கருத்து வேறுபாடு
மனப் பதற்றம், மன அழுத்தம் போன்ற எதிர்மறை உணர்வுகள் இருந்தால், எதிர்மறையான எண்ணங்கள் அதிகமாக வரும்; ஆரோக்கியமான மனநிலையில் இருக்க முடியாது. இதனால், தம்பதியர் இடையே எப்போதும் கருத்து வேறுபாடு இருக்கும்.
நம்முடைய சமுதாய சூழலில், ஆண் தான் பெண்ணிடம் தாம்பத்திய விருப்பத்தை தெரியப்படுத்த வேண்டும் என்ற பிம்பத்தை ஏற்படுத்தி உள்ளது. தாம்பத்திய உறவில், பெண்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவே கூடாது என்ற கட்டுப்பாடுடன் வளர்வதால், தாம்பத்திய உறவு குறித்த நிறைய தவறான எண்ணங்கள், பெண்கள் மனதில் இருக்கின்றன.
கருச்சிதைவு ஏற்படுவது, குழந்தையின்மைக்கான சிகிச்சை முதல்முறை தோல்வியில் முடிவது, இந்த இரண்டும் பல சமயங்களில் பெண்கள் மனதில் தோல்வி பயத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதனால், அடுத்த முறை மருத்துவ ஆலோசனை பெறும் போது, ஒருமுறை தோல்வி அடைந்தால், மீண்டும் தோல்வி தான் என்ற மனநிலையுடனேயே இருக்கின்றனர். இதனால், டாக்டர் சொல்வதை முறையாகப் பின்பற்றுவதில்லை. இப்படி, பலவிதங்களிலும் குழந்தையின்மைக்கு மன அழுத்தம் காரணமாகிறது.
டாக்டர் சித்ரா அரவிந்த்
மன நல ஆலோசகர்,
சென்னை.
95660 75474