உழவு முதல் அறுவடை வரை பொறுமை காக்கும் விவசாயிகள் அறுவடை முடிந்த பின்னர், நிதானம் காட்டு வதில்லை. வந்தவிலைக்கு விளைபொருளை விற்று வீடு போய்ச் சேர்ந்தால் போதுமென நினைக்கின்றனர். அறுவடை வரை உற்பத்தி செய்த நாமே அவற்றை மதிப்புகூட்டி விற்க வேண்டும் என நினைத்து சாதித்து காட்டியுள்ளனர்,
அரியலுார் மாவட்டம் காரைப்பாக்கத்தைச் சேர்ந்த விவசாய இளைஞர்கள் சுதர்சன் சேதுராமன், சரவணன் சச்சிதானந்தம். சுதர்சன் இன்ஜினியரிங் பட்டதாரி. ஆனாலும் பரம்பரையாக விவசாய குடும்பம் என்பதால் படித்து முடித்த கையோடு விவசாயத் தொழிலுக்கு வந்துவிட்டார். சரவணன் டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்து, சிங்கப்பூரில் இரண்டாண்டுகள் வேலை செய்தபின், மீண்டும் விவசாயத்துக்கு திரும்பியுள்ளார். இயற்கை விவசாயத்தில் நெல்லை அரிசியாக மாற்றியும், கரும்பை நாட்டு சர்க்கரையாக மாற்றி லாபம் ஈட்டும் அனுபவத்தை விளக்குகின்றனர்.
3 மாத பயிர்கள் முதல் ஆண்டுப் பயிர்கள் வரை ரகம் வாரியாக பயிர் செய்கிறோம். 12 ஏக்கரில் 17 ஏக்கரில் இயற்கை விவசாயம் தான். அதில் வரப்போரம் வாழை நட்டுள்ளோம். இதில் அதிக லாபம் கிடைக்காது. வீட்டுத் தேவைக்கு பயன்படுத்துவோம். உள்கூட்டில் கரும்பு விவசாயம். எட்டடி பட்டத்தில் நடவு செய்துள்ளோம். நடுவில் ஊடுபட்டமாக வெங்காயம், சோளம், குதிரைவாலி, கம்பு பயிரிட்டுள்ளேன். செடி முருங்கைகள் மூலம் காய்கள் நிறைய கிடைக்கின்றன.
நெல்லில் மாப்பிள்ளை சம்பா, கிச்சடி சம்பா, கருப்பு கவுனி பயிரிட்டுள்ளோம். இது 6 மாத பயிர். அறுவடை முடிந்ததும் நெல்லாக விற்பதில்லை. நாங்களே அரிசியாக்கி விற்பதால், போதுமான லாபம் கிடைக்கிறது.
நெல்லை மரக்கலத்தில் சேமித்து தேவைக்கேற்ப அரிசியாக்குகிறோம். கரும்பை ஆலைக்கு அனுப்பாமல் நாங்களே பிழிந்து சாறெடுத்து நாட்டு சர்க்கரை தயாரிக்கிறோம். இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. வெங்காயம், சோளம் போன்றவை 3ம் மாதத்தில் லாபம் கிடைக்கும். வாழை நட்ட ஆறாம் மாதத்திலிருந்து பலன் கிடைக்கும். கரும்பு ஆண்டுப் பயிர். சில நேரங்களில் கத்தரி, வெண்டை, எள் பயிரிடுவோம். குதிரைவாலி, கம்பு எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை.
ஆறு நாட்டுமாடுகள் வளர்க்கிறோம். இதன் சாணம், கோமியத்திலிருந்து ஜீவாமிர்தம், கன ஜீவாமிர்தம் தயாரிக்கிறோம். ஆண்டுக்கு ஒருமுறை அறுவடை முடிந்தபின், மாட்டுச்சாண எருவால் நிலத்தை தயார் செய்கிறோம். பயிர்களின் வளர்ச்சிக்கு பஞ்சகாவ்யம், மீன்அமிலம் உற்பத்தி செய்கிறோம்.
கரும்புக்கு பூச்சித் தொல்லை இல்லை. நெல்லுக்கு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும். இஞ்சி, பூண்டு, நொச்சி இலை, வேப்பிலையுடன் கோமியத்தை கலந்து ஏழு நாட்கள் ஊறவைத்து பூச்சி விரட்டியாக பயன்படுத்தகிறோம்.
இயற்கை விவசாயத்தில் முதலில் லாபமே கிடைக்கவில்லை. வீட்டுச் செலவுக்கு மட்டும் கட்டுப்படியானது. நாங்கள் கூட்டுக்குடும்பம் என்பதால் செலவுகளை சமாளித்தோம். இப்போது லாபம் பார்க்கத் தொடங்கியுள்ளோம் என்றனர்.
தொடர்புக்கு : 95003 01100.
- எம்.எம்.ஜெயலெட்சுமி
மதுரை