தென்காசி, சி.எம்.எஸ்.மெட்ரிக் பள்ளியில், 1964ல், 6ம் வகுப்பு சேர்ந்த போது, வகுப்பு ஆசிரியையாக இருந்தார், தில்லி. மிகவும் கனிவானவர். கற்றல் தவிர தனிப்பட்ட வகையிலும் தாராளமாக உதவுவார். என் பார்வை திறனில் குறைபாடு இருந்தது.
வகுப்பறை கரும்பலகையில் அன்று வினா எழுதிக் கொண்டிருந்தார் ஆசிரியை. அருகில் சென்று உற்று நோக்கியபடி எழுதிக் கொண்டிருந்தேன்.
இதை கவனித்தவர், 'உன் பெற்றோரை சந்திக்க வேண்டும்...' என்றார்.
மறுநாள் அழைத்து வந்தேன். என் பார்வை குறைபாடு பற்றி குறிப்பிட்டு, உரிய மருத்துவ பரிசோதனை செய்ய அறிவுறுத்தினார்.
மருத்துவர் ஆலோசனைப்படி, பார்வை குறைபாட்டை நீக்க கண்ணாடி அணிந்தேன். அன்று தான், 'உலகம் இவ்வளவு வெளிச்சம் மிக்கதா' என்ற எண்ணம் ஏற்பட்டது. துாரத்தில் உள்ள எழுத்துக்களையும், பெயர் பலகையையும் சுலபமாக படிக்க முடிந்தது. அளவிலா மகிழ்ச்சி அடைந்தேன். நன்றாக படித்து உயர்ந்தேன்.
இப்போது, என் வயது 68; உடல் நலனில் அக்கறை செலுத்தி அறிவுரைத்த ஆசிரியையை, மனக்கண்ணில் பதித்துள்ளேன். வாழ்வில் வழி காட்டிய ஒளியாக எண்ணி போற்றுகிறேன்.
- சிவகாமு நாகராஜன், பெங்களூரு.
தொடர்புக்கு: 74060 38153