களைப்புடன் திரும்பினார் தமிழய்யா. வீட்டுக்குள் நுழைந்ததும், ''ஆங்கில பாட தேர்வை சரியா எழுதலையாம் மகன் தியாகு. அவன் தேர்ச்சி பெறணும்; நீங்க மனசு வைத்தால் தான் முடியும்...'' என்றாள் மனைவி.
குறுக்கிட்டவர், ''ஆங்கில வாத்தியாரிடம் சிபாரிசு செய்ய சொல்றியா... மதிப்பையும், கவுரவத்தையும் விட சொல்றியா... எதற்காகவும் குறுக்கு வழியில் செல்ல மாட்டேன்...'' உறுதியாகச் கூறினார் தமிழய்யா.
''யாரிடமும் கெஞ்ச வேண்டியது எல்லாம் இல்லை; தியாகுவே பேசிட்டான்... ஒரு விஷயம் மட்டும் செய்தால் போதும்...''
''என்ன செய்யணும்...''
''ஆங்கில வாத்தியார் மகன், தமிழ் பரீட்சையை சரியா எழுதலையாம்; அவனோட தமிழ் விடைத்தாளை நீங்க தானே திருத்துறீங்க... தேர்ச்சி பெற வெச்சிட்டா... பிரதி பலனா தியாகுவுக்கு உதவுவதாக சொல்லியிருக்கிறார்...''
''உயிரே போனாலும் செய்ய மாட்டேன்; இப்படி எல்லாம் தேர்ச்சி பெற வைக்கலாம் என்றால், எதுக்காக தேர்வு நடத்தணும்... விடைதாளை தேடி பணத்தோட அலையுற காலம் போச்சு...''
சலிப்படன் சொன்னார் தமிழய்யா.
குறுக்கு வழிக்கு மறுத்ததால் கோபம் அடைந்தான் தியாகு. அப்பாவிடம் பேசி பயனில்லை என எண்ணி, வீட்டின் பின்புறமாக வந்தான்.
காத்திருந்த ஆங்கில ஆசிரியர் மகன், ''உங்க அப்பா சம்மதிக்கலையா... உன் மூஞ்சியைப் பார்த்தாலே தெரியுதே... உங்க அப்பாவுக்கு சங்ககால புலவருன்னு நினைப்பு...'' என கிண்டலாக சொன்னான்.
தவறான முயற்சி வீணாகியதை எண்ணி அப்பா மீது இரட்டிப்பானது கோபம்.
மறுநாள் மாலை -
பள்ளியிலிருந்து, திரும்பினார் தமிழய்யா.
நடையில், தோற்றத்தில், மாறுதல் தெரிந்ததை கவனித்தான் தியாகு.
'எப்போதும், நிமிர்ந்த நடையோடு வருபவர் இன்று தலை குனிந்து, முகம் வாடி, நடை தளர்ந்து வருகிறாரே' என யோசித்தான்.
''நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்கு...''
உடல் முழுதும் வியர்வை பெருக அமர்ந்தார் தமிழய்யா.
பதறியபடி தண்ணீர் எடுத்து வந்தாள் அம்மா.
அக்கறை இன்றி உட்கார்ந்திருந்தான் தியாகு.
'மனுஷன் செத்தாலும் பராவாயில்லை; திரும்பி பார்க்கவே கூடாது'
உறுதியுடன் இருந்தான் தியாகு.
நெஞ்சு வலி அதிகரிக்க துடித்துக் கொண்டிருந்தார் தமிழய்யா.
''என்னடா கல்லாட்டம் உட்கார்ந்திருக்கே... வேகமாக போய் மருத்துவரை அழைத்து வா...''
கண்ணீர் பெருக அழுதாள் அம்மா.
புறப்பட்டான் தியாகு.
திரும்பிய போது அதிர்ச்சி காத்திருந்தது.
அப்பாவின் உயிர் பிரிந்திருந்தது.
தமிழுக்கு புகழ் சேர்த்த தென்றல் ஓய்ந்து விட்டது.
திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர் ஆசிரியர்கள்.
''இதோ பார்... உங்க அப்பா காலையில் தந்த கடிதம்...''
தியாகுவிடம் நீட்டினார் ஆங்கில ஆசிரியர்.
அந்த கடிதத்தில்...
'உங்கள் மகன் தமிழில் சிறப்பான தேர்ச்சி பெற்றுள்ளான்; எந்த கூடுதல் மதிப்பெண்ணும் நான் வழங்கவில்லை. பயத்தால், மாணவர்கள் குறுக்கு வழியில் செல்ல முயல்கின்றனர். அதற்கு ஆசிரியர்கள் துணை போகக் கூடாது...
'தியாகுவின் ஆங்கில விடைத்தாளை நீங்க திருத்துவதாக அறிந்தேன். அவனுக்கு எந்த பரிவும் காட்ட வேண்டாம்; தவறான செயல் நாட்டு வளர்ச்சியை பாதிக்கும்...'
இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.
நேர்மையான அறிவுச் சுரங்கத்தை, இழந்த உணர்வுடன் கண்கள் குளமாக நின்றான் தியாகு.
குழந்தைகளே... நேர்மையாக வாழ்வதை லட்சியமாக கொள்ளுங்கள்.
ஜே.ஜி.நீலகண்டன்