அதிநவீன போர் விமானம் ரபேல். வானத்தை வசப்படுத்தி, உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்திய விமானப்படையில் புதிதாக சேர்ந்துள்ளது. இதை, 'மல்டிரோல் காம்பட் பைட்டர்' என அழைக்கின்றனர். நிலத்திலும், நீரிலும், வானிலும் கச்சிதமாக தாக்குதல் நடத்தும் திறனுள்ளது.
ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, ஜெர்மனி இணைந்து, நவீன போர் விமானங்கள் தயாரிக்க, 1980-ல் ஓர் ஒப்பந்தம் போட்டன. கருத்து வேறுபாடுகளால் அந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது பிரான்ஸ். பின், மிகச்சிறந்த போர் விமானத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியது. அதன் விளைவுதான், அதிநவீன ரபேல் விமானம்.
இதை வடிவமைக்கும் பொறுப்பை ஏற்றவர் பொறியாளர் மார்சில் டிசால்ட். சொந்தமாக, 'டிசால்ட்' என்ற விமான தயாரிப்பு நிறுவனம் நடத்திவந்தார். அதனுடன் சேர்ந்தது, பிரான்ஸ் அரசு.
நவீன தொழில் நுட்பத்தில் வானில் சீறிப்பாய்ந்து தாக்கும் விமானம் தயாரானது. போர் விமானங்களில் உலகின், 'நம்பர் ஒன்' என்ற தகுதியை பெற்றுள்ளது. எதிரியின் ரகசிய செயல்பாட்டை அறிந்து அழிக்கும் செயல்திறன் மிக்கது.
இதன் சிறப்பம்சங்கள்...
* எதிரி படையை உளவு பார்த்தல்
* நம் தரைப்படைக்கு பாதுகாப்பு தருதல்
* அதிவேகமாக வானில் பறந்து எதிரியை தாக்கி அழித்தல்
* எதிரி கண்ணில் மண்ணை துாவி திசை திருப்புதல்.
இது போன்று, பன்முகத்திறனுள்ளதாக உருவாக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் நீளம், 15 மீட்டர்; அகலம், 11 மீட்டர். ஒரு டென்னிஸ் விளையாட்டு மைதானத்துக்குள் நிறுத்தி விட முடியும்.
இன்பராரெட், வானொலி அலைவரிசை, ஒளி, ஒலி ஸ்பெக்ட்ரம் என எந்தவித நவீன தொழில் நுட்பத்தாலும், ரபேல் பறப்பதை கண்டுபிடிக்க முடியாது. அதனால்தான் மிகச்சிறந்த, 'மறைவியக்க வானுார்தி' என்ற புகழைப் பெற்றுள்ளது.
* ஓடுதளம் வெறும், 450 மீட்டர் போதும். அதில் ஓடி லாவகமாக வானில் எழும்
* அதே துார ஓடு தளத்திலேயே தயங்காமல் தரை இறங்கும்
* ஒலியை விட அதிவேகமாக பறக்கும்
* தரையிலிருந்து, 60 டிகிரி கோணத்தில் கூட வானில் ஏறும்.
ஓடு தளத்தில் இருந்து, 60- நொடிக்குள் வான் மேகங்களைத் தாண்டிவிடும். பொதுவாக, பூமியில் இருந்து, 15 ஆயிரம் அடி உயரத்தில் தான் மேகக்கூட்டம் இருக்கும்.
அடுத்த, 60 நொடியில், 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து சாகசம் செய்யும். அதிகபட்சமாக, 65 ஆயிரம் அடி உயரம் வரை பறக்க வல்லது.
பலவகை நவீன ஆயுதங்களை உள்ளடக்கியது. மிகத்துல்லியமாக எதிரி இலக்கைத் தாக்கி, மின்னல் வேகத்தில் திரும்பி விடும். தாக்க வரும் ஏவுகணையை திசை திருப்பி ஏமாற்றும். வழிமாறி விழும் வகையில் செயல்படும்.
தந்திர சாகசங்களுக்காக ஏராளமான தொழில் நுட்ப கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றின் இயக்கம் மிகவும் ரகசியமாக நடக்கும்.
ஆகாயத்தில் பறக்கும்போதே எரிபொருள் நிரப்பும் வசதி உண்டு. ஒன்பது டன் எடையுள்ள ஆயுதங்களை சுமக்கும்.
போர் விமானங்களில் மிகக் குறைந்த, 'லேண்டிங் ஸ்பீடு' கொண்டது. மணிக்கு, 2,130 கி.மீ., வேகத்தில் வானில் எழுந்து, வெறும், 200 கி.மீ., வேகத்தில் தரையைத் தொடும். உலகின் எந்த போர் விமானமும் இவ்வளவு வேகத்தில் தரை இறங்கியது இல்லை. விபத்து அபாயமும் பெருமளவு குறைவு.
இதன் விலை, 1600 கோடி ரூபாய்.
நம் விமானப்படையை, மிகவும் பலமிக்கதாக மாற்றியுள்ளது, ரபேல். அண்டை நாடுகளின் அச்சுறுத்தலை தடுத்துள்ளது.
போரற்ற உலகம் உருவாக உழைப்போம். அதே நேரம், ஆபத்து வந்தால் தயக்கமின்றி எதிர்கொள்ள ரபேல் விமானம் போன்றவற்றை கேடயமாக பயன்படுத்துவோம்.
வீராங்கனை ஷிவாங்கி!
இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ள, ரபேல் விமானத்தை இயக்க தேர்வாகியுள்ள முதல் வீராங்கனை, ஷிவாங்கி சிங். உத்தரபிரதேசம் மாநிலம், வாரணாசியை பூர்வீகமாக கொண்டவர். வாரணாசி, இந்து பல்கலைக்கழகத்தில் படித்தவர். சாரணர் இயக்கத்தில் ஈடுபாட்டுடன் பணியாற்றியவர்.
விமானப்படையில், 2017ல் சேர்ந்தார். போர் விமானங்கள் ஓட்ட, 10 பெண்களுடன் பயிற்சி பெற்றார். இதில், 'மிக் - 21 பைசன்' என்ற ரக விமானத்தில் பயிற்சி பெற்றார் ஷிவாங்கி. சிறப்பான செயல் திறனைக் காட்டினார். லெப்டினன்ட் பதவியில் உள்ளார். ரபேல் விமானங்களை நிர்வகிக்கும், 'கோல்டன்
ஏரோ - 17' படைப்பிரிவில் தற்போது சேர்ந்துள்ளார்.
தளிர்களே... ஷிவாங்கி போல், அஞ்சா நெஞ்சுடன் நாட்டைக் காப்போம்.
ஆகாயத்தில் ஆயுதம்!
ரபேல் விமானத்தில் பொருத்தியுள்ள ஆயுதங்களில் முக்கியமானது, இலக்கை தாக்கும் ஏவுகணை. இது, 150 கி.மீ., துாரத்தில் பறக்கும் விமானத்தையும் தாக்கி சிதைக்கும். எதிரி நாட்டு எல்லைக்குள் செல்லாமலேயே, தாக்குதல் நடத்தும் வசதி கொண்டது.
* ரபேல் விமான மூக்குப்பகுதி, 100 கிலோமீட்டர் துாரத்தில் இருக்கும் எதிரி விமானத்தையும் கண்டு உணரும் திறன் கொண்டது. இதற்காக, 'டிரான்சிட் ரிசீவர்' என்ற தொழில்நுட்ப கருவி பொருத்தப்பட்டுள்ளது
* போர் நடக்கும் போது, விமானம் பறந்தால், 'ரேடார்' என்ற கருவி காட்டிக் கொடுத்து விடும். அதை தடுக்கும் விதமாக, 'பாசிவ் ரேடார்' என்ற கருவி பொருத்தப்பட்டுள்ளது. ரபேல் விமானம் ஓட்டுபவருக்கு, எதிரி விமானம் பறப்பது தெரியும். எதிரிக்கு, ரபேல் விமானம் பறப்பது தெரிய வாய்ப்பு ஏற்படாது
* விமானத்தில் பொருத்தியுள்ள அதி நவீன கேமரா சக்தி வாய்ந்தது. விமானம், 65 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் போதும், தரையில் நிகழ்வதை துல்லியமாக படம் பிடிக்கும்
* மின்காந்த அலைகளை வெளியிடும், 'ஸ்பெக்ட்ரா' என்ற கருவி பொருத்தப் பட்டுள்ளது. இது, தாக்க வரும் ஏவுகணையை ஏமாற்றி திசை திருப்பும்
* பேரழிவை தரும் அணு ஆயுதங்களையும் எடுத்துச் சென்று, எதிரி இலக்கு மீது வீசி, துவம்சம் செய்யும். துணிச்சலாக எதிரியை திணறடித்து அழிக்கும் ஆற்றலுள்ளது ரபேல்.
- எல்.மீனாம்பிகா