அன்பு பிளாரன்ஸ்...
கணவரும், நானும் பள்ளி ஆசிரியர்களாக பணிபுரிகிறோம்; ஒரே மகள்; 10ம் வகுப்பு படிக்கிறாள். அவள் பேய்ப்பசிக்காரி; வாலிப வயதுள்ள, மூன்று பேரின் சாப்பாட்டை, இவள் ஒருத்தியே, ஒரே வேளையில் சாப்பிட்டு விடுவாள்.
சாப்பிட்டதும், 'இவ்வளவு சாப்பிட்டேனா... இப்படி சாப்பிட்டால் தடிமாடு ஆகி விடுவேனே... வயிறு, குலுதாடி பானை ஆகி விட்டதே...' என புலம்பியபடி வாந்தி எடுப்பாள்; வலுக்கட்டாயமாக சிறுநீர், மலம் கழிப்பாள். தன்னைத் தானே குற்றம் சாட்டிக் கொள்வாள்.
மருத்துவரிடம் போகலாம் என்றால் வர மறுக்கிறாள். நீங்கள் தான் ஒரு தீர்வை கூற வேண்டும்.
அன்புள்ள அம்மா...
மகளுக்கு வந்திருப்பது, 'புலிமியா' என்ற மனநோய்; இது, அதி தீவிரமான, ஆயுள் முழுக்க பிரச்னை தரக்கூடிய உணவு உட்கொள்ளும் முறையிலான குறைபாடு. இந்தியாவில், ஆண்டுக்கு, 10 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலும், பெண்களை தான் தாக்கும்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டோர், அதிகமாக சாப்பிடுவதை சரிக்கட்ட, இரண்டு அல்லது மூன்று மணி நேர உடற்பயிற்சி எடுப்பர். சில நாட்களில் கொலை பட்டினியும் கிடப்பர். இது குணப்படுத்தக் கூடிய வியாதி; அதே நேரம் மீண்டும் வரக்கூடியது.
மனதை அலைக்கழிக்கும் சீர்கேடுகளில் ஒன்று; சமூக அழுத்தம் கூட ஒரு காரணம். மரபியல் ரீதியாகவும் வரும். அபூர்வமாய் தான் ஆண்களை தாக்கும்.
இந்த நோயாளிகள் சராசரி உடல் எடையுடன் தான் பெரும்பாலும் இருப்பர். ரத்த சோகை, தாழ்வு ரத்த அழுத்தம், தோல் உலர்வு, வயிற்றுப் புண், வயிற்று பிரச்னைகள், ஒழுங்கீனமான மாதவிலக்கு, சிறுநீரக பாதிப்புகளும் கூடுதலாக இருக்கும்.
நோயை குணப்படுத்த கீழ்கண்ட விதங்களில் முயற்சிக்கலாம்...
* மகளை ஒரு மனநல ஆலோசகரிடம் அழைத்துச் செல்; அவர், பல்வேறு மன அழுத்தங்களை கேட்டறிவார். மகளின் தோழிகள் யாராவது அடாவடித்தனம் செய்கின்றனரா... ஆண்கள் பாலியல் தொந்தரவு தருகின்றனரா... போன்ற விஷயங்களை கேட்டறிந்து, தகுந்த ஆலோசனை வழங்குவார்
* உணவு வல்லுநர் மூலம், தினமும் உண்ண வேண்டிய, மூன்று வேளை உணவு அட்டவணையை தயாரித்துக்கொள்ளலாம். உணவுக்கு முன், கால் வயிற்றுக்கு தண்ணீர் குடிக்கலாம். 'டீனேஜ்' பெண்கள், ஒரு நாளைக்கு, 2,200 கலோரி உணவை உட்கொள்ளலாம்
* ஒவ்வொரு உணவும் எவ்வளவு கலோரி இருக்கும் என்ற அறிவு முக்கியம். உணவில், நிறைய பழங்கள், காய்கறிகள் மற்றும் தயிரும் எடுத்துக் கொள்ளலாம்
* பாப்கார்ன், மீன், வெண்ணெய், உருளைக் கிழங்கு, வெள்ளை நிற மாமிசங்கள், தர்பூசணி, ஓட்ஸ், காய்கறி சூப், முட்டை, பருப்பு வகைகள் குறைந்த கலோரி உணவுகளாகும்
* 'நான் சராசரி டீனேஜ் பெண்; பேய் பசியை வெல்வேன்; செயற்கையாய் வாந்தி எடுப்பது அநாகரிகமான செயல்' என, உன் மகளே கண்ணாடி முன், சுய சபதம் செய்து கடைபிடிக்கலாம்
* உணவு மேஜையில் இனிய இசையை ஒலிக்க செய்யலாம்; திட்டமிட்டு, நீயும், உன் மகளும் செயல்பட்டால், 'புலிமியா' என்ற நோயை துரத்தி விடலாம்.
- நம்பிக்கையுடன், பிளாரன்ஸ்.