துாங்காவனம் கிராமத்தில் வசித்தது அழகிய சேவல்; அது, கூவிய பின் தான், சூரியன் உதிக்கும்; மக்கள் விழித்து அன்றாட பணியை கவனிப்பர்.
இதனால் நட்புடன் சேவலை பாதுகாத்து வந்தனர். அதன் அதிகாலை கீதத்தை புகழ்ந்து போற்றினர். இது, சேவலுக்கு தலைக்கனத்தை ஏற்படுத்தியது.
'நான் கூவாவிட்டால் பொழுது விடியாது' என கர்வம் கொண்டது.
அன்று குறட்டை விட்டு துாங்கியது சேவல்.
கண் விழித்தபோது, சூரியன் உதித்திருந்தது. வழக்கம் போல் இயங்கியது உலகம்.
கடும்கோபத்தில், 'நான் கூவும் முன், நீயாக எப்படி உதிக்கலாம்...' என, சண்டை போட்டது சேவல்.
மிக நிதானமாக, 'சரியான நேரத்திற்கு தான் உதித்தேன்; உன் துாக்கத்துடன் எனக்கு தொடர்பு இல்லை... கர்வத்தால் சண்டை போடுவதால் பயன் இல்லை...' என, உண்மையை சொன்னது சூரியன்.
கோபத்தில் சூரியனை பகைத்தது சேவல்.
ஊர் மக்களிடம், 'இனி, நிலா மறையும் போது கூவுகிறேன்...' என்றது.
அதை சில நாட்கள் பின்பற்றியது.
அன்று அமாவாசை -
வானில் வரவில்லை நிலா. எதிர்பார்த்து ஏமாந்தது சேவல்.
மறுநாள் வந்தது பிறை நிலா.
மிகுந்த கோபத்தில், 'நேற்று ஏன் வரவில்லை...' என கேட்டது சேவல்.
'அதுவா... மாதம், ஒருநாள் விடுப்பு....' என்றது நிலா.
'நான் மட்டும் தினமும் வேலை செய்கிறேன்; விடாமல் அதிகாலை கூவுகிறேன்... உனக்கு விடுப்பா...' என்று சண்டை போட்டு புதிய சபதம் ஏற்றது சேவல்.
'நட்சத்திரங்கள் சொல்படி தான் இனி கூவுவேன்' என்பது தான் அந்த சபதம்.
அதிகாலை, விடிவெள்ளியைக் கண்டதும் கூவத்துவங்கியது.
அன்று வானம் மேக மூட்டத்துடன் இருந்ததால், நட்சத்திரங்கள் புலப்படவில்லை. அதனால் கூவவில்லை சேவல்.
மறுநாள், 'அதிகாலை ஏன் கூவவில்லை...' என்று கேட்டனர் மக்கள்.
'நட்சத்திரம் வரும் நேரம் சரியில்லை; நாளை முதல் பசு எழும்போது கூவுகிறேன்...' என்றது சேவல்.
'செய்த தவறுக்கு அடுத்தவர் மீது பழி போடுகிறாயா... எத்தனை முறை வாய்ப்பு கொடுத்தும் திருந்த மறுக்கிறாயே...'
சேவலை விரட்டினர் மக்கள்.
கர்வம் மற்றும் சோம்பலால் நட்புகளை இழந்து தவித்தது சேவல். மனம் வருந்தி மன்னிப்புக்கேட்டது. பின், இயற்கை நியதிப்படி தவறாமல் கூவியது.
குழந்தைகளே... சாக்குப்போக்கு சொல்லாமல், அன்றாட பணிகளை முறையாக செய்து முடிக்க வேண்டும்.
எம்.விக்னேஷ்