முக்கிளியம்பட்டி கிராமத்தில் பல்லாண்டுகளுக்கு முன், அகிலும், முகிலும் வசித்து வந்தனர். இணைபிரியாத நண்பர்களாக இருந்தனர்.
திருமணத்திற்கு பின்பும் நட்பு தொடர்ந்தது; ஊரார் பாராட்டி மகிழ்ந்தனர்.
மீன் பிடிக்கும் வலை ஒன்றை பின்னினர். அதை பயன்படுத்தி மீன் பிடித்து சமமாக பங்கிட்டனர். கிடைத்த மீன்களை கிராமங்களில் விற்பனை செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
ஒரு நாள் -
இருவரும், மீன் பிடிக்க சென்றனர். அப்போது, 'நண்பா... எனக்கு உடல்நிலை சரி இல்லை. சிறிது நேரம் ஓய்வெடுத்து வருகிறேன்; நீ மட்டும் மீன்பிடி...' என, மர நிழலில் படுத்திருந்தான் அகில்.
அப்போது ஆற்றில் வீசிய வலையில் சிக்கியிருந்தது தங்கமீன். அதை வியப்புடன் பார்த்தான் முகில். பளபளப்புடன் மின்னியது; ஆசையுடன் வலையிருந்து மீட்டான்.
அதிசய தங்கமீன் பேச துவங்கியது.
'என்னை ஒன்றும் செய்யாதே; மீண்டும் ஆற்றில் விட்டு விடு. விடுதலை செய்தால், 100 பொற்காசுகளை தருவேன்...' என்றது.
தங்கமீனை ஆற்றில் விட்டான் முகில்; வாக்களித்தபடியே, சற்று நேரத்தில், தங்க காசுகளை கொடுத்து சென்றது.
தொலைவில், ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நண்பனை ஓரக்கண்ணால் பார்த்தான் முகில். துரோக எண்ணம் மனதில் துளிர் விட்டது.
தங்கமீன் தந்த பொற்காசுகளை மறைத்தான்.
அகிலிடம், 'மீன் பிடிக்கும் தொழிலை விட போகிறேன். நீயே தனியாக பிழைத்துக் கொள். நட்பு ரொம்பவே போராடித்து விட்டது... இனி மேல் என்னை தேடி வராதே...' என கூறி, வலையை ஒப்படைத்து புறப்பட்டான்.
முகிலின் செயல் புதிராக தெரிந்தது.
வலையை, ஆற்றில் வீசினான் அகில். அதிலும் அகப்பட்டது தங்கமீன். ஆச்சரியத்துடன் பார்த்தான்.
'மீன் பிடிப்பவரே... என்னை ஆற்று நீரில் விட்டு விடுங்க. விடுதலை செய்தால், 100 தங்க காசுகளை தருவேன்...' என்றது.
'உன் பேச்சை எப்படி நம்புவது...' என கேட்டான் அகில்.
'உன் நண்பனும், இதே இடத்தில் தான் வலையை வீசினான்; அதில் சிக்கி உயிர் பிச்சை கேட்டேன். வாக்கு கொடுத்தது போலவே, தங்க காசுகளை தந்தேனே...' என கூறியது.
உடனே, ஆற்று நீரில் விட்டான். மகிழ்ச்சியாக நீந்தி உடனடியாக திரும்பி, தங்க காசுகளை தந்தது தங்கமீன்.
'நண்பன் முகிலுக்கு, தங்க காசுகளில் சரிபாதியை தருவேன்...' என்றான் அகில்.
'உண்மை நட்பின் இலக்கணம் நீ...' என பாராட்டி மறைந்தது தங்கமீன்.
உதாசீனப்படுத்திய நண்பனை தேடி வந்தான் அகில். அங்கே கண்ட காட்சி திடுக்கிட வைத்தது. உயிர் நண்பனை ஏமாற்றியது பற்றி, மனைவியிடம் பெருமையடித்து, தங்கமீன் கொடுத்த பொட்டலத்தை அவிழ்த்தான் முகில்.
அதில், தங்க காசுகளை காணவில்லை; கூழாங்கற்கள் தான் இருந்தன. அதிர்ச்சியில் நின்ற நண்பன் முகிலை, அரவணைத்து தேற்றினான் அகில். கிடைத்த தங்க காசுகளில், சரிபாதியை பகிர்ந்து கொடுத்தான். கட்டி தழுவி மன்னிப்பு கேட்டான் முகில். மீண்டும் துளிர் விட்டது நட்பு!
குழந்தைகளே... துாய நட்பு துரோகம் நினைக்காது.
எஸ்.டேனியல் ஜூலியட்