மகாபாரத அம்மன்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
மகாபாரத அம்மன்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 நவ
2020
00:00

மகாபாரதத்துடன் தொடர்புடைய ஒரு பாத்திரம், பிரம்மாண்ட வடிவில், சயன நிலையில் உள்ள கோவில், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் உள்ளது. வண்டி மறிச்ச அம்மன் என்பது, இவளது திருநாமம்.
பாண்டவர்கள், வனவாசம் அனுபவித்துக் கொண்டிருந்தனர். ஒருநாள், பகன் என்ற அசுரன் வசித்த காட்டிற்கு அவர்கள் வந்தனர். இதை, பகாசுர வனம் என்றனர்.
இந்த அசுரன், மனிதர்களைப் பிடித்து தின்பான். எனவே, மக்கள் ஒன்று சேர்ந்து, 'நாங்கள், உனக்கு தேவையான உணவை ஒரு வண்டியில் அனுப்புகிறோம். அதைத் தின்று கொள். மக்களை விட்டு விடு...' என்றனர்.
ஒரு நிபந்தனையுடன் அதை ஒப்புக்கொண்டான், பகன்.
'நீங்கள் அனுப்பும் உணவு எனக்கு போதாவிட்டால், வண்டியை ஓட்டி வரும் மனிதனை, நான் தின்று விடுவேன்...' என்றான்; மக்களும் ஒப்புக்கொண்டனர்.
ஒருமுறை, ஒரே ஒரு மகனை பெற்ற விதவை அம்மாவின் முறை வந்தது. மறுநாள் காலை, உணவு வண்டியுடன் அவன் புறப்பட இருந்தான்.
அன்று தான் பாண்டவர்கள் அந்தக் காட்டிற்கு வந்து, மூதாட்டியின் இல்லத்தில் தங்கினர். அவளது வாடிய முகம் கண்ட பாண்டவர்களின் அம்மா குந்தி, அதற்கான காரணத்தை கேட்டாள்.
மூதாட்டி விபரத்தைச் சொல்லவே, 'கவலைப்படாதே... உன் மகனுக்கு பதிலாக, என் மகன் பீமனை அனுப்பி வைக்கிறேன். அவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வான்...' என்றாள்.
மகிழ்ச்சியுடன் உணவு வண்டியை ஓட்டிச் சென்றான், பீமன். வண்டியிலிருந்த எல்லா உணவையும் தின்றான். வெறும் வண்டியுடன், பகன் முன் போய் நின்றான்.
கோபமடைந்த பகன், தன் முன் மலை போல் நின்ற பீமனைத் தின்ன முயன்றான். அவனை ஒரே அடியில் சாய்த்தான், பீமன்; பகன் இறந்தான்.
தகவலறிந்த பகனின் மனைவி பகாசுரவல்லி, அவன் இறந்து கிடந்த இடத்துக்கு வந்து, சிவனை வழிபட்டாள். தன் கணவன் உயிரை மீட்டுத்தர வேண்டினாள்.
'நீங்கள் இருவரும் தாமிரபரணி நதிக்கரைக்கு செல்லுங்கள். அங்கு உங்களுக்கு தங்க இடம் கிடைக்கும்...' என்றார், சிவன்.
அவர்களும் தாமிரபரணிக் கரையை அடைந்து, ஓரிடத்தில் தங்கினர். அவ்வழியாக உணவுப் பொருட்கள் ஏற்றி வரும் வண்டிகளை கவிழ்த்தனர்.
ஊர் மக்கள், தங்கள் குல தெய்வமான முனியப்பனிடம் முறையிட, சிவனின் அவதாரமான அவர், இருவரையும் மல்லாக்க தள்ளி, பூமியிலிருந்து அவர்கள் எழ முடியாதபடி, தலையை தரையில் பதித்து விட்டார். அதன்பின் அவர்களால் வண்டிகளைக் கவிழ்க்க முடியவில்லை.
அதன்பின் மக்கள், அவர்களை தெய்வமாகக் கருதி, 'வண்டி மலையன், வண்டி மலைச்சி' என, பெயரிட்டனர். காலப்போக்கில், வண்டி மறிச்ச அம்மன் என, பெயர் மாறியது.
தை கடைசி செவ்வாயில் கொடை நடக்கும்போது, ஊர் மக்கள் வீடுகளில் இருந்து கொழுக்கட்டை சேகரித்து இவர்களுக்கு படைக்கப்படும். அத்துடன், படையலும் உண்டு. இதன் மூலம் விபத்துகளிலிருந்து தப்பலாம் என, பக்தர்கள் நம்புகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து அம்பாசமுத்திரம், 35 கி.மீ., இவ்வூர் பேருந்து நிலையத்தில் இருந்து தென்காசி செல்லும் சாலையில், 1 கி.மீ., துாரத்தில் கோவில் உள்ளது.

தி. செல்லப்பா

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X