என்னை எழுதத் துாண்டிய விதம்!
என் அம்மா, ஓர் எழுத்தாளர் என்பதும், பத்திரிகையாளர் என்பதும் பலர் அறியாத செய்தி.
'உருகுது நெஞ்சம் பெருகுது கண்ணீர்' என்கிற, என் அம்மாவின் நாவலைப் படிப்பவர்கள் நெஞ்சைப் பறி கொடுப்பர். இது ஒரு கண்ணீர் காவியம். பிறகு, 'அருள், திருவருள்' என்கிற இரு ஆன்மிக இதழ்களின் ஆசிரியராகவும் விளங்கி,
12 ஆண்டுகள் ஒன்றன் பின் ஒன்றாக நடத்தினார்.
புலவர் பட்டயப் படிப்பை முறைப்படி பயின்றவர். தமிழை நான் பிழைபட எழுதினால், உடனே சுட்டிக் காட்டுவார்.
நாடறிந்த எழுத்தாளர், அப்பா. இப்படி எழுத்துச் சூழலில் நாங்கள் வளர்ந்ததால், அக்கா லக்ஷ்மி, தம்பி ரவி, தங்கை சகுந்தலா நால்வருமே எழுதும் ஆற்றலை இயல்பாகவே கைவரப் பெற்றிருந்தோம்.
இவர்களுள் நான் மட்டும் தான், எழுத்தை தொழிலாக ஆக்கிக் கொண்டேன். மற்ற மூவரும் ஏனோ, தங்கள் எழுத்தாற்றலை கடிதம் எழுதுவது என்கிற வட்டத்தோடு நிறுத்திக் கொண்டு விட்டனர்.
நான் கூட எழுத்தாளன் ஆனது, திட்டமிட்ட ஒன்றோ, ஆசைப்பட்ட ஒன்றோ அல்ல. ஆக்கப்பட்டேன் என்பதே உண்மை.
அப்பா என்னை எப்படி எழுத்தாளனாக்கினார் என்பதை, தனிப் புத்தகமாகவே எழுதலாம். ஆனால், நீட்டி முழக்க இது அல்ல களம். சுருக்கமாகவே சொல்கிறேன்...
எழுத்து, பத்திரிகை, புத்தகம், பதிப்பகம் என்கிற நான்கு மூலைகள் கொண்ட இனிய சுவர்களுக்குள் போட்டு, நான் உருட்டப்பட்டதால், படிக்கிற பழக்கம் என்பது, எனக்கு இயல்பாகிப் போனது.
அந்தந்த வார, 'கல்கண்டு' இதழை படித்து, என் கருத்தை அம்மாவிடம் சொல்ல, ஒருநாள், 'அப்பாவிடம் நீயே சொல்லு...' என்று, அவரது அறைக்குள் முதுகைப் பிடித்து தள்ளிக் கொண்டு போய் விட்டார்.
எனக்குச் சற்று உதறல் தான். இருந்தாலும், பெருமூச்சு ஒன்றை இழுத்து, நல்லதைப் பாராட்டி விட்டு, 'நீங்க தன்னம்பிக்கைன்னு நினைச்சு எழுதுற கேள்வி - பதில் பகுதியில், சில பதில்களில் தற்பெருமை தொனிக்குதுப்பா...' என்று, ஒரு குறை மட்டும் சொன்னேன்.
'அப்படியா சொல்றே?'
'ஆமாப்பா...'
'எந்தெந்த கேள்விகள்?'
விடவில்லை அவர்; சொன்னேன்.
'அப்படியா, சரி...' என்றவர், அம்மாவிடம், 'லேனா, கரெக்டா பாயின்ட்டைப் பிடிக்கிறான்...' என்று, சொல்லியிருக்கிறார்.
'அப்பா, அப்படியாம்மா சொன்னாங்க?' என்றேன்.
'ஆமா...'
இச்சம்பவத்திற்குப் பிறகு என் பார்வையே மாறிப் போனது. நான்கு பாராட்டு. ஒன்றிரண்டு குறை என்று வாரா வாரம் சொல்ல ஆரம்பித்தேன்.
'என்ன லேனா, இந்த
வார, 'கல்கண்டு' இதழ் படிச்சியா?' என, நான் மறந்த வாரமெல்லாம் கேட்க ஆரம்பித்து விட்டார், அப்பா.
பள்ளி படிப்பை முடிக்காத என்னைப் போய் ஒரு பெரிய மனுஷன் போல மதித்துக் கேள்வி, விமர்சனம் என்று கேட்க ஆரம்பித்தார்; நானும் வாசகன் என்கிற நிலையிலிருந்து பக்குவப்பட்ட விமர்சகன் எனும் நிலைக்கு மாற ஆரம்பித்தேன்.
ஒருமுறை, 'இந்த வாரக் கேள்வி - பதில் எல்லாமே சுமாரா இருக்குப்பா...' என்று வெளிப்படையாக சொல்லப் போக, என்ன மூடில் இருந்தாரோ தெரியவில்லை.
'எழுதிப் பாரு. அதுல உள்ள கஷ்டம் தெரியும்...' என்றார்.
அவரது வாக்கியம் சாதாரணமாக உதிர்க்கப்பட்டதல்ல. சலிப்பின், விரக்தியின், கோபத்தின் வெளிப்பாடுமல்ல அது.
இந்த வாக்கியத்தில் எனக்கான ஒருவித மறைமுகத் துாண்டுதல் இருப்பதாகவே மனதிற்குப் பட்டது.
'வா... என் துறைக்கு. விமர்சிப்பது என்பது, எட்டிப் பார்க்கும் வேலை. எழுதுவது என்பது, அப்படி அல்ல; அது களத்தில் இறங்கும் வேலை. வா, எழுது...' என்று, அவர் அடைப்புக் குறிகளுக்குள் சொன்னது போல் இருந்தது எனக்கு.
என் எழுத்து வாழ்வை, இந்த வாக்கியத்திற்கு முன்; இந்த வாக்கியத்திற்கு பின் என்று இரண்டாகப் பிரித்து விடலாம்.
'எழுதுவதா... என்னத்தை எழுதுவது...' இந்த யோசனையில் காலம் ஏகமாய்க் கரைந்து கொண்டிருக்க, இதற்கும் ஒரு விடிவு காலம் வந்தது.
இப்போது நம்மில் பலர் கண்டு களித்துக் கொண்டிருக்கும், 'நேஷனல் ஜியாக்ரபிக்' சேனல் இருப்பது தெரியும்தானே! இது முதலில் புத்தகமாக வந்து கொண்டிருந்த காலம் அது.
இதில் ஒரு சம்பவம்...
தென்னாப்பிரிக்காவிற்கு ஒரு மிருக வைத்தியர் வேட்டையாடப் போகிறார். ஒரு சிறுத்தையைச் சுடுகிறார். அது, சாகாமலும், ஓடவும் முடியாமல் கிடந்து துடிக்கிறது. மனம் கேட்காமல், அடுத்ததாக ஒரு மயக்க மருந்து ஊசியை செலுத்தி, தன் கூடாரத்திற்கு எடுத்து வருகிறார். குண்டை நீக்கி, முழுவதுமாகக் குணப்படுத்தி, திரும்ப காட்டில் கொண்டு போய் விடுகிறார்.
'தப்பித்தோம் பிழைத்தோம்...' என, ஓடாத அச்சிறுத்தை, இவரது வாகனத்தை பின் தொடர்ந்து வந்து, கூடாரத்தின் வாயிலில் படுத்துக் கொள்கிறது.
ஒரு மனிதனுக்கு, மிருகத்தின் மீது ஏற்பட்ட இரக்கம்; ஒரு மிருகத்திற்கு, மனிதன் மீது உருவான பாசம். இவை இரண்டும் என்னை உலுக்கி விட்டன.
இதை அப்படியே தமிழில் எழுதிக் கொடுத்தேன். அப்பா ஒன்றும் சொல்லாமல் வாங்கிக் கொண்டார். ஆம்... ஒன்றுமே சொல்லவில்லை.
'என்னம்மா... அப்பா இப்படி எதுவுமே சொல்லாம வாங்கி வச்சுகிட்டா எப்படிம்மா?' என்றேன், ஏமாற்றக் குரலில்.
'அப்பா எது செஞ்சாலும் அதுக்குக் காரணம் இருக்கும். பார்ப்போம்...' என்று அம்மா சமாதானம் சொல்ல, இரண்டு வாரங்கள் கழித்து நடந்தது பாருங்கள் ஓர் அதிசயம்...
அப்படி என்ன நடந்தது?
ஒரு வாரம் காத்திருங்களேன்!
வடலுார் வள்ளலாரின் பக்தர், தமிழ்வாணன். பொள்ளாச்சி தொழிலதிபர் அருட்செல்வர் நா.மகாலிங்கத்தின் சன்மார்க்க சங்கக் கூட்டங்களில் தவறாது பங்கேற்று, வள்ளலாரின் கருத்துக்களையும், அவரது ஒளி வழிபாட்டையும் ஆதரித்துப் பேசுவார். வள்ளலாரைப் பின்பற்றி, அவரைப் போலவே துாய வெள்ளை ஆடையை மட்டும் அணிவார், தமிழ்வாணன்.
ஹிந்தி பாடகர் முகமது ரபியின் ரசிகர், தமிழ்வாணன். அடிக்கடி அவரது பாடல்களை, காரில், 'கேசட்' வடிவில் கேட்டு மகிழ்வார். சமயங்களில் ரபியின் பாடல்களை முணுமுணுப்பார். தமிழ்வாணன் மிக நன்றாக பாடுவார் என்பது, பலர் அறியாத செய்தி. 'காக்கைச் சிறகினிலே நந்தலாலா...' என்ற பாடலை, வாய் விட்டுப் பாடுவார். 'குமுதம்' இதழ் அலுவலகத்தில், வெள்ளிதோறும் தமிழ்வாணனின் பாடலும் இடம் பெறும்.
- தொடரும்
லேனா தமிழ்வாணன்