* எம். அஹானிகா, சொர்ணபுரி, திருப்பூர்: குடும்பத்தில் ஏற்படும் சொத்து பிரச்னையைத் தீர்க்க, நீதிமன்றத்தை நாடுவது, கட்டப் பஞ்சாயத்து பேசி முடிவு செய்வது எது சரி?
நீதிமன்றம் என்றால், கீழ் கோர்ட்டில் இருந்து உச்சநீதிமன்றம் வரை செல்ல வேண்டும்; அதற்குள் ஆயுளே முடிந்து விடும்!
கட்ட பஞ்சாயத்தில் நிறம் மாறுவோர் உண்டு! பிரச்னை உள்ளோர், தங்களுக்குள்ளாகவே பேசி, விட்டுக் கொடுத்து, பிரச்னையை தீர்ப்பது தான் சரியான வழி!
வி. உமா, விழுப்புரம்: தமிழக கவர்னரை திரும்பப் பெறுமாறு, ஜனாதிபதிக்கு, திருமாவளவன் கடிதம் எழுதி இருக்கிறாரே...
இந்தக் கடிதங்களை எல்லாம் பிரிக்கும் ஆபீஸ் பையனே, தாள்களை துண்டு துண்டாக கிழிக்கும், 'ஷிரேடிங் மிஷினில்' போட்டு விடுவான்; ஜனாதிபதியின் நேரத்தை வீணடிக்க மாட்டான்!
க. வேலாயுதம், மதுரை: எந்த நோயால் நம் நாட்டவர் இப்போது அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்?
'கொரோனா'வால் அல்ல... வேலையின்மை என்ற நோயால் தான், அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்; பட்டினியால் வாடுகின்றனர்!
* த. சிவாஜி மூக்கையா, சென்னை: அதிக குழப்பங்களை சந்திக்கப் போவது, தி.மு.க., கூட்டணியா, அ.தி.மு.க., கூட்டணியா?
இரண்டுமே தான்!
'உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும்...' என, கூட்டணி கட்சிகளை வலியுறுத்துகிறது, தி.மு.க.,
'துணை முதல்வர் பதவி வேண்டும்...' என்று, அ.தி.மு.க.,வை வலியுறுத்துகிறது, பா.ம.க., குழப்பம் முடிய இன்னும் கொஞ்ச மாதங்களாகும்!
க. வேணுகோபால், நாகர்கோவில்: மிக பயங்கர ஆயுதமாக எதைக் கருதுகிறீர்கள்?
ஆட்டம் பாம்மோ, அணுகுண்டோ இல்லை! பெண்கள் வடிக்கும் கண்ணீர் தான், மிக பயங்கரமான ஆயுதம்!
* எஸ். அட்சயா, மதுரை: சரளமாக ஆங்கிலப் பேச்சு வரவில்லை என்பது, முன்னேற்றத்திற்கு தடையாகுமா?
இல்லவே இல்லை... இன்று, தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பெரும் தொழிலதிபர்களாகவும், வியாபாரிகளாக இருப்பவர்களுக்கும் ஆங்கிலத்தில் பேசினால் புரியவே புரியாது, அவர்களாலும் ஆங்கிலத்தில் பேச வராது. இது, அவர்களது முன்னேற்றத்திற்கு தடையாகவா இருந்தது!
ஆர். சுப்பு, திருத்தங்கல்: பொதுத்துறை நிறுவனங்களை, தனியாருக்கு விடுவதை ஆதரிக்கிறீர்களா... எதிர்க்கிறீர்களா?
மத்திய அரசு, தன் வேலையை மட்டுமே பார்க்க வேண்டும்!
ரயில் மற்றும் விமான போக்குவரத்து, எல்.ஐ.சி., போன்ற துறைகள் பலவற்றை, தனியாரிடம் ஒப்படைப்பதை ஆதரிக்கிறேன்.