மனைவி லட்சுமி கொடுத்த டீயை எடுத்து, ஒரு வாய் உறிஞ்சினார், சுந்தரம். நாக்கு முழுவதும் சுவை பரவியது. பக்கத்திலே மிக்சர். ஒரு வாய் எடுத்து போட்டார். ஒரு வாய் டீ, ஒரு வாய் மிக்சர், மாறி மாறி சுவைத்தார்.
மொபைல் போன் சிணுங்கியது. புது எண்ணாக இருந்தது.
''வணக்கம்... நான், சுந்தரம் பேசுறேன்.''
''நல்ல தமிழுக்கு நன்றி. நான், 'சீறும் கீரி'கள் கட்சியின் மாவட்ட செயலர் பேசுறேன்.''
''சொல்லுங்க... என்ன வேணும் உங்களுக்கு?''
''உங்க, 'வாட்ஸ் ஆப்'பிற்கு சில படங்கள் அனுப்பியிருக்கேன். பாருங்க... திரும்பவும் கூப்பிடுறேன்.''
போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சுந்தரத்தின் உடம்பும், மனசும் பதறியது. படபடப்போடு, தன்னுடன் பேசிய புது எண்ணிலிருந்த பகுதியை, 'ஓபன்' பண்ணினார். சில புகைப்படங்கள். அத்தனையிலும் மகள் நந்தினியின் படங்கள்.
அரை குறை ஆடையோடு, மயங்கிய நிலையில், 21 வயது நிரம்பிய, ஒரே மகள் நந்தினி கூடவே ஒரு இளைஞன்.
'எங்கே, எப்படி, யாரிடம் சிக்கினாள்... தைரியமான பெண் ஆச்சே...' உடம்பு நடுங்கியது.
சிறிது நேரத்திற்கு பின், மொபைல் போன் ஒலித்தது; அதே குரல்.
''என்ன மிஸ்டர், சுந்தரம்... படமெல்லாம் பார்த்தீங்களா... 'வளவள'ன்னு பேச விரும்பல, 40 லட்சம் கொடுத்துட்டு, உங்க பொண்ணை மீட்டுக்கங்க.''
''நாற்பது லட்சத்துக்கு நான் எங்க போறது?''
''என்ன சுந்தரம்... சொந்த பிளாட், கார். கூடுவாஞ்சேரியில் மூன்று பிளாட் வாடகைக்கு... அரக்கோணம் தாண்டி 3 ஏக்கர் வெள்ளாமை... மாதம், 60 ஆயிரம் ஒய்வூதியம்... நான் சொன்னதெல்லாம் சரியா.''
''ஆமாம்; சரி தான்.''
''இதையெல்லாம் நாங்க கேட்கலை... மத்திய அரசில், நீங்க பெரிய அதிகாரி; நேர்மையானவர்; வேலைக்கு, வி.ஆர்.எஸ்., கொடுத்து ஆறு மாசமாச்சு... நாளைக்கு ஓய்வூதிய பணிக்கொடை, 43 லட்சம் உங்களுக்கு வருது... அதுல, 40 லட்சம் கொடுத்தா போதும்.'' பதற்றத்திலும் திகைத்தார், சுந்தரம்.
'எப்படி இவ்வளவு துல்லியமாக... அதுவும் நாளைக்கு, ஓய்வூதிய பணிக்கொடை வருவது வரைக்கும், இவனுக்கு எப்படி தெரியும்...' என, யோசித்தார்.
''சுந்தரம், 'டீல்' ஓ.கே.,வா... நாளைக்கு பணம் கிடைக்குமா... எஸ் ஆர் நோ.''
சப்தநாடியும் ஒடுங்கி, சன்னமான குரலில், ''சரி,'' என்றார்.
''நாளைக்கு உங்க ஆபீசுக்கு போறீங்க... உங்க பேர்ல அந்த பணத்தை, 'செக்'கா தருவாங்க... வெளியில எங்காளு நிற்பான். உங்களுக்கு, வணக்கம் சொல்லி, 'என் பேர் மூர்த்தி'ன்னு சொல்லுவான். அவன் கையில, 'செக்'கை குடுங்க... நீங்க எங்காளுகிட்ட கொடுத்த அஞ்சாவது நிமிஷம், பொண்ணு, உங்க பக்கத்துல இருப்பா.''
''சரி, அதே மாதிரி நடந்துக்கிறேன்.''
''எசகு பிசகா நடந்தா... விளைவுகள் வேறு மாதிரி இருக்கும்.''
இணைப்பு துண்டிக்கப்பட்டது.
''என்னங்க... நேத்து காலையில, வீட்டிற்கு ஒரு பையன் வந்தான். ஏதோ, 'விடியல்' நாடக குழுன்னு சொல்லிட்டு, நந்தினியை கூட்டிட்டு போனான். நந்தினி, உங்களுக்கு போன் பண்ணினாளா?''
''ஆமா... இப்ப தான் போன் பண்ணி, நாளைக்கு வர்றேன்னு சொன்னாள்,'' என்று பொய் சொன்னார்.
துாக்கம் வராமல் தவித்தார், சுந்தரம், நிம்மதியாக துாங்கும் மனைவியை திரும்பிப் பார்த்தார். இரவு மணி, 11:00ஐ தாண்டி இருந்தது. எழுந்து பால்கனி வந்து, வானத்தை வெறித்து பார்த்தவருக்கு, நந்தினியின் முகம் வந்து போனது.
காலை டிபன் முடித்து, அலுவலகம் வந்தார். மணி, 11:00 ஆகியிருந்தது.
சுந்தரத்திடம் நிறைய கையெழுத்து வாங்கி, 'செக்'கை கொடுத்தார், அலுவலக காசாளர். 48 லட்சத்து, 50 ஆயிரத்து, 600 என இருந்தது.
அலுவலகம் முழுவதும் சுந்தரத்தை சூழ்ந்து நலம் விசாரித்தனர். அலுவலகம் விட்டு வெளியே வந்தபோது, மணி, 1:30 ஆகியிருந்தது.
சுந்தரம் எதிரே வந்து நின்ற இளைஞன், ''வணக்கம் சார்... என் பேர் மூர்த்தி,'' என்றான்.
தன்னிடம் இருந்த கவரை, அவனிடம் கொடுத்தார்.
கவரை வாங்கிய இளைஞன், சட்டென மறைந்தான். தளர்வோடு நடக்க ஆரம்பிக்க, அவரை ஒட்டி, ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய நந்தினி, அப்பாவின் தோளில் சாய்ந்தாள்.
மகளின் கோலம், சுந்தரத்தின் மனதிற்குள் வலியை தந்தது.
''என்னம்மா, ரொம்ப, 'டயர்டா' இருக்க?''
''ரெண்டு நாளா, 'ரிகர்சல்'பா... நல்ல பசங்க... ராத்திரி, 2:00 மணி வரை நடக்கும்ப்பா... அப்புறம் அப்படியே துாங்கிடுவேன். இப்பதான் எந்திரிச்சேன்... டீ மட்டும் தான் குடிச்சேன்; பசிக்குதுப்பா.''
மகளை அழைத்து, பக்கத்தில் உள்ள ஓட்டலுக்குள் நுழைந்தார்.
''ஏம்ப்பா... வீட்டுல அம்மா சமைக்கலையா?''
''இன்னிக்கு, பிரதோஷம்... அம்மா, கோவிலுக்கு போயிட்டாங்க. வர ராத்திரி ஆகும். அதான்...''
மகள் சாப்பிட்டுக் கொண்டிருக்க, வெளி வாசலுக்கு வந்து, ''லட்சுமி... ஆபீஸ்ல கொஞ்சம், 'லேட்' ஆகும் போல தெரியுது... நீ, மதியம் சாப்பிட்டு, கோவிலுக்கு போயிட்டு வந்துடு. நான் வரும்போது, நந்தினியை கூட்டிட்டு வந்திடுறேன்,'' என்றார்.
எது சொன்னாலும் நம்பக்கூடிய மனைவி. இதுவரை எந்த கேள்வியும் கேட்காத அன்பு ஜீவன்.
தன்னிடம் இருந்த சாவியில், வீட்டை திறந்து, நந்தினியோடு உள்ளே போனார்.
குளித்து, துாங்க போனாள், நந்தினி.
பலவிதமான யோசனைகளோடு இருந்த சுந்தரம், ஸ்ரீஅரவிந்த அன்னை வரலாறு பற்றி படிக்க ஆரம்பித்தார்.
மொபைல் போன் சிணுங்கியது. அதே எண்.
''சுந்தரம் சார்... சொன்ன மாதிரி நடந்துக்கிட்டீங்க... 'செக்' உங்க பேர்ல இருக்கு... நாளை வங்கிக்கு வந்து மாத்தி கொடுத்துட்டு போங்க.''
வங்கியில், 'செக்'கை, 'டிபாசிட்' செய்து, 'டோக்கனை' வாங்கி காத்திருந்தார். அதே இளைஞன் மூர்த்தி, பக்கத்தில் இருந்தான். பணத்தை வாங்கியதும், அந்த இளைஞன் பின்னாலேயே சென்றார், சுந்தரம்.
கொஞ்ச துாரத்தில் நின்ற காரில், அவன் முன் பக்கம் ஏற, பின் பக்கம் ஏறினார், சுந்தரம். காரில் இருந்தபடியே, வேறு ஒரு பையில், 40 லட்சத்தை மாற்றிக் கொண்டான்.
''சார்... உங்களை இங்கேயே இறக்கி விடவா... வீட்டுல இறக்கி விடவா?''
''இங்கேயே இறங்கிக்கிறேன்.''
இறங்கி, ஆட்டோ பிடித்து, வீடு சேர்ந்தார். துாங்கிக் கொண்டிருந்தாள், நந்தினி. சமையல் அறையில், லட்சுமி.
மீதி பணத்தை பீரோவில் வைத்து, திரும்பியபோது, மீண்டும் மொபைல் ஒலித்தது; அதே எண்.
''சார்... பணம் வந்து விட்டது. இனிமே, உங்களை தொந்தரவு பண்ண மாட்டோம். இந்த எண்ணை, 'டெலிட்' பண்ணிடுங்க... ஒரு சின்ன விஷயம் சொல்ல மறந்துட்டேன்...
''நேத்து நைட்டு, பசங்க கொஞ்சம் தண்ணி போட்டிருந்தாங்க... அதனால, ஏதோ தப்பு நடந்துடுச்சுன்னு சொன்னாங்க... எதுக்கும் உங்க பொண்ணை டாக்டர்கிட்ட, 'செக்கப்' பண்ணிடுங்க...''
ஆயிரம் நாகங்கள், ஒரே நேரத்தில் கொத்தியது போலிருந்தது, சுந்தரத்திற்கு. அசந்து துாங்கிக் கொண்டிருந்த மகளை பார்க்க, பார்க்க, மனது பதறியது.
தெரிந்த மருத்துவரிடம் ஓடினார். நடந்ததை சொல்லி புலம்பினார்.
''நல்லவேளை, நேற்று இரவு நடந்திருக்கு... இன்றே வந்து விட்டீர்கள். பெரிசா எதுவும் வராது. இந்த மாத்திரைகளை சாப்பிடச் சொல்லுங்க... ஒரு மாசம் கழிச்சு கூட்டிட்டு வாங்க,'' தைரியம் சொல்லி அனுப்பினார், மருத்துவர்.
'சீறும் கீரி'கள் கட்சியின் தலைவர், 50 வயதிலும் கம்பீரமாய் இருந்தார். மீசைக்கும், தலைக்கும், 'டை' அடித்து இளமையாக காட்டிக் கொண்டார். கட்சியின் தலைமை அலுவலகம் பரபரப்பாய் இருந்தது.
வந்தவர்களை வரிசையாக எழுதியபடியே, துண்டு சீட்டை நீட்டினான், தலைவரின் உதவியாளன்.
வாங்கிப் பார்த்த தலைவர், தென் சென்னை மாவட்ட செயலர் கதிரவனை முதலில் அழைத்தார்.
உள்ளே நுழைந்தவனிடம், ''என்ன கதிரவா... 'அசைன்மென்ட்' நல்லபடியா முடிஞ்சுதா... முதன் முதலா உன்னை தனியா களம் இறக்கினேன்... எப்படி இருந்துச்சு?''
''முதல்ல கொஞ்சம் பயமா இருந்துச்சு. நம் கட்சியின் பேரை சொன்னதும், அந்தாளு நடுங்கி, சொன்ன மாதிரியே பணம் கொடுத்துட்டான்.''
''எவ்வளவு பணம்?''
''நாற்பது லட்சம்.''
''வாவ்... என்ன கதிரவா, முதல் பால்லேயே சிக்சர் அடிச்சுட்டே... பசங்க எத்தனை பேர்?''
''ரெண்டு பேர்... ஆளுக்கு ஒரு லட்சம் கொடுத்து, 'இந்த பக்கம் வராதீங்க'ன்னு ஊருக்கு அனுப்பிட்டேன். கை செலவு, ஒரு லட்சம் ஆச்சு. மிச்சம், 37 லட்சம் எடுத்து வந்திருக்கேன்.
''பொண்ணோட அப்பா, சரியான பயந்தாங்கொள்ளி. எந்த எதிர்ப்பும் காட்டலை. கட்டப் பஞ்சாயத்து, போலீஸ் ஸ்டேஷன்னு வேலை இல்லாமல் போச்சு.''
''பணம் எங்க இருக்கு?''
''கார்ல இருக்கு தலைவரே.''
உதவியாளனை கூப்பிட்டு, ''கதிரவனின் கார்ல ஒரு பை இருக்கு. எடுத்து வந்து, நம் அறையில வை... கதிரவா, உன் பங்கு கரெக்டா வந்துடும், என்றார்.''
''சரிங்க தலைவரே.''
''கதிரவா, இன்னொரு வேலை பண்ணு... காலேஜ்ல படிக்கிற நம் ஜாதி பசங்க, 10 பேரை தயார் பண்ணு... நம் கட்சி சார்பா நடக்குற விழா ஒண்ணு ஏற்பாடு செஞ்சு, 10 பசங்களுக்கும், ஆளுக்கு, 10 ஆயிரம் ரூபாயை மேடையில் கொடுத்துருவோம்...
''அப்புறம், ஒரு முக்கியமான விஷயம். கவிதை எழுதுற ஒரு பையனை தேடி பிடி. என்னை பாராட்டி, கவிதை எழுதி, விழா மேடையில வாசிக்க வை. திருமணம் செய்து கொள்ளாத, சேவை செய்வதே குறிக்கோளாக கொண்ட, அடித்தட்டு மக்களுக்கு, நான் உழைக்கிறேன் என்ற செய்தி, கவிதையில் வரணும்.''
கதிரவன் வெளியேற, உதவியாளன் ஓடி வந்தான்.
''எல்லாம் தயாரா இருக்கா,'' என்றார்.
அவன் தலையாட்டினான்.
மாதத்தில் இரண்டு நாள், மது, மாது இல்லாமல், தலைவர் துாங்க மாட்டார் என்கிற ரகசியம், இவனுக்கு மட்டுமே தெரியும். திருமணம் செய்யாமல், 50 வயது வரை வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதும், ஊருக்கே தெரியும்.
அடுத்த நாள் காலை -
மிகப்பெரிய அதிர்ஷ்டம், தலைவரை தேடி வந்தது.
குளித்து முடித்து, தலைவர் அலுவலகம் வந்தபோது, காலை மணி, 10:00. கட்சியின் கொ.ப.செ., வந்திருந்தார்.
''தலைவரே... ரொம்ப முக்கியமான விஷயம்; ரொம்ப அவசரம். ஒரு அரை மணி நேரம் உங்களோடு தனியாக பேச வேண்டும். அதான் உடனே கிளம்பி வந்தேன்.''
''விஷயத்தை சொல்லுய்யா... நான் சொல்லாம யாரும் வரமாட்டாங்க.''
''வெளிநாட்டில வாழ்ற பொண்ணுன்னு, 'கன்பார்ம்' ஆயிடுச்சு. 20 வயது பட்சி இருக்கு. 'இன்டர்நெட்' மூலமா பழகியிருக்கு. பையன், நம், 'சீறும் கீரி'கள் இளைஞர் அணியில் இருக்கான். செலவுக்கு பணம் வேணும்ன்னு சொன்னதும், வெளிநாட்டுல இருந்து, பையனோட வங்கி கணக்குக்கு, 5 லட்சம் அனுப்பியிருக்கு.''
''என்னய்யா சொல்லுற?''
''பணம் வந்ததும், பையன் பயந்து போய் என்கிட்ட வந்துட்டான். இவனையே திருமணம் பண்ற நோக்கத்துல, நாளைக்கு அந்த பொண்ணு சென்னை வருதாம்.''
''பையன் என்ன சொல்றான்?''
''நான், 'லவ்' பண்ணல; சும்மா தான் பழகினேன். எனக்கு பயமா இருக்குன்னு பதறுறான்.''
''ஜாக்பாட் கிடைச்சிருக்கு. விடக்கூடாது. நான் சொல்றதை கவனமா கேளு, அந்த பையன் பேர் என்ன?''
''சேரலாதன்.''
''நம்ம பையன் தான். இவன் பேர்ல போலீஸ்ல ஒரு, 'கம்ப்ளையின்ட்' போடு. 'பையனோட நடவடிக்கை சரியில்லாததால், அவனை கட்சியிலிருந்து நீக்கி இருக்கிறோம்'ன்னு சொல்லி, எப்.ஐ.ஆர்., போடச் சொல்லு. 'பிரஸ்'ல செய்தி கொடுத்துடு...
''அந்த பொண்ணு, நாளைக்கு, 'ஏர்போர்ட்ல' வந்து இறங்குனதும், சேரலாதன் போய் கூட்டிக்கிட்டு வரட்டும். ஒரு பெரிய வீட்ட வாடகைக்கு எடு. நம் மகளிர் அணி நேசமலரை, பையனோட அம்மாவா நடிக்கச் சொல்லு. நீ, அப்பாவா நடி...''
''தலைவரே, நான் எப்படி?''
''வேற வழியில்ல... ரகசியமா முடிக்கணும்... ஒரு வாரம் எடுத்துக்கோ, ஒரு நிமிஷத்தை கூட, 'வேஸ்ட்' பண்ணாத... நீயும், நேசமலரும் நடிக்குற நடிப்புல, பொண்ணு, தலையாட்டி பொம்மையா மாறணும்...
''சேரலாதனை, பொண்ணு கூட நெருக்கமா பழக விடு. உனக்கு, நேசமலர், சேரலாதன் மூன்று பேருக்கும், புது மொபைல் போன், புது நம்பர்.
''இந்த, 'டீல்' முடியுற வரைக்கும் என்கிட்ட தொடர்பு வச்சுக்க வேணாம். நேரம் பார்த்து, பொண்ணோட அம்மா - அப்பாகிட்ட பேசு. விலாசம் வாங்கி, 'பேக்ரவுண்டை' விசாரி. 'டீல்' பேசும்போது, கோடிகள்ல பேசு. பணம் வரலைன்னா, பொண்ணு, 'குளோஸ்'ன்னு மிரட்டு...
''குறைஞ்சது, 10 கோடில, 'டீல்' பேச ஆரம்பி. நான் ஒரு வாரம் இங்க இருக்க மாட்டேன். 'நாளை முதல் தமிழகம் முழுக்க தலைவர் ஒரு வாரம் சுற்றுப் பயணம்'ன்னு, எல்லா, 'மீடியா'விற்கும் செய்தி கொடு...'' என, சொல்லி, உள்ளே சென்று திரும்பிய தலைவர் கையில், பணக்கட்டுகள்.
''இதுல, 5 லட்சம் இருக்கு. செலவுக்கு வச்சுக்க. தேவைன்னா, உதவியாளன்கிட்ட கேளு தருவான்.''
பணத்தோடு வெளியேறினான், கொ.ப.செ., மறுநாள், சுற்றுப்பயணம் கிளம்ப தயாரானார், தலைவர்.
ஒரு வாரம் சுற்றுப் பயணம் முடித்து திரும்பிய தலைவருக்கு, கட்சி அலுவலகத்தில் பெரிய வரவேற்பு. மாலைகளும், சால்வைகளும் குவிந்தன.
உதவியாளனிடம் சொல்லி, கொ.ப.செ.,வை அழைத்து வரச்சொன்னார், தலைவர்.
முகம் நிறைய தாடி. அரண்டு போன முகத்துடன், தலைவரின் காலில் விழுந்து, ''தலைவரே, என்னை மன்னிச்சுடுங்க... ரொம்ப கவனமா இருந்தும், தப்பு நடந்து போச்சு. ஆனா, வெளிய தெரியாம நம் கட்சி பேரை காப்பாத்தி வச்சிருக்கேன்,'' என்றான், கொ.ப.செ.,
''மறைக்காம சொல்லு... என்ன நடந்துச்சு...'' தலைவரின் குரலில் கடுமை இருந்தது.
''தலைவரே, எல்லாம் சரியாவே நடந்துச்சு. அந்த பொண்ணுக்கு, 'டிரஸ்' வாங்க, சாயந்திரம், 7:00 மணிக்கு, நானும், சேரலாதனும் வெளியே போய், திரும்பி வந்து பார்த்தா... கை, கால்கள் கட்டிய நிலையில், மயங்கி கிடந்துச்சு, நேசமலர்.
''அந்த பொண்ணு, உயிருக்கு போராடிட்டு இருந்துச்சு. சட்டுன்னு துாக்கிட்டு போய் ஆஸ்பத்திரியில சேர்த்துட்டேன். 'மீடியா' மற்றும் போலீஸ் வராம பார்த்துக்கிட்டேன். மொத்தம் ஏழு பேர் சேர்ந்து, பொண்ணை நாசமாக்கி இருக்காணுக.''
''எப்படி... யார் அவனுங்க...'' கத்தினார், தலைவர்.
''நேசமலர், ராத்திரியானா சரக்கு சாப்பிட்டு தான் படுக்கும். அன்னிக்கு நாங்க வெளியே போனதும், ரெண்டு, 'பெக்' உள்ளே போனதும், 'பாய் பிரெண்டு'க்கு போன் போட்டு வரச்சொல்லி, உளறிடுச்சு... மொத்தம் ஏழு பேர்... பொண்ணை சிதைச்சுட்டு போயிட்டானுங்க... வந்தவங்க எல்லாரும் நம் கட்சி பசங்க தான்.''
''இப்ப பொண்ணுக்கு எப்படி இருக்கு?''
''நிலமை ரொம்ப, 'சீரியஸ்' தான். இதுவரைக்கும், 40 லட்சம் செலவு.''
''என்னய்யா சொல்ற?''
''ஆமா, தலைவரே... வெளிநாட்டு பொண்ணு... செத்தா பிரச்னை... ஆஸ்பத்திரியில கேட்க கேட்க, கொடுத்துட்டேன்.''
''சரி விடு... நான் சொல்ற மாதிரி, செய்தியை எழுதி, 'பிரஸ்'சுக்கு கொடுத்துடு.''
''இன்டர்நெட்டில் மலர்ந்த காதல். வெளிநாட்டிலிருந்து காதலனை தேடி வந்த இளம்பெண். காதலனும், அவனது நண்பர்களும் சேர்ந்து கூட்டு பலாத்காரம். இளம்பெண், 'சீரியஸ்!' இளம்பெண்ணை காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்த, 'சீறும் கீரி'கள் கட்சி தலைவர்.
''காதலனையும், அவனது நண்பர்களையும் போலீஸ் தேடுகிறது. பெண் குழந்தைகளை, பாசத்தோடும், பத்திரமாகவும் பெற்றோர் வளர்க்க வேண்டும். 'சீறும் கீரி'கள் கட்சித் தலைவர் வேண்டுகோள்... இதான் மேட்டர், எல்லா பத்திரிகைகளுக்கும் செய்தியை கொடு.''
மறுநாள் காலை -
'விடியும் கைகள்' பத்திரிகையின் இரண்டாம் பக்கத்தில், வெளிநாட்டு வாழ் பெண்ணின் புகைப்படமும், அதன் கீழே செவ்வந்தி என்ற பெயரும் இருந்தது. புகைப்படத்தையும், பெயரையும் உற்றுப் பார்த்த தலைவர் அதிர்ந்தார். மனது நடுங்கியது. கை, கால் உதறியது. தலைவர் கொடுத்த செய்தி அப்படியே வந்திருந்தது.
பீரோவில் இருந்த, தன், 'பர்சனல்' மொபைல் போனை உயிர்ப்பித்து, துபாயில் உள்ள மனைவி மரகதத்தின் நம்பரை அழுத்தினார்.
''மரகதம்... என்னம்மா...''
''நம் பொண்ணு செவ்வந்தியை, ஒரு வாரமா காணோமுங்க... எனக்கு பயமா இருக்குங்க.''
மரகதம் சொல்லச் சொல்ல, தலைவரின் மொபைல் போன், கை நழுவி கீழே விழுந்தது.
ச. பவானி
வயது: 42, படிப்பு: பிளஸ் 2. பொது சேவைகளில் அதிக ஆர்வம் உண்டு. நிறைய வாசிப்பேன். வாசிக்கும் வாசகரான என்னை, அறிமுக எழுத்தாளராக்கிய, 'தினமலர் - வாரமலர்' இதழுக்கு நன்றி. தொடர்ந்து நிறைய எழுதுவேன்.