சிம்புவின், மறைமுக சவால்!
'இனிமேல், படத்துக்குப் படம், என்னை மாறுபட்ட சிம்புவாக பார்க்கலாம்...' என்று, தன் ரசிகர்களுக்கு, உத்தரவாதம் கொடுத்துள்ளார், சிம்பு. அதன் காரணமாக, தற்போது, ஈஸ்வரன் படத்திற்காக, 20 கிலோ எடை குறைத்து, தன், 'கெட் - அப்'பை மாற்றி நடித்து வருபவர், வெண்ணிலா கபடிக்குழு பட நாயகியான, சரண்யா மோகனிடம், பரத நாட்டியமும் கற்று வருகிறார். இதையடுத்து, 'கூடிய சீக்கிரமே, 'கோலிவுட், 'ஹீரோ'களில், பரத நாட்டியத்தில் சிம்புவை அடிச்சுக்க ஆளில்லை...' என்று சொல்லும் வகையில், ஒரு படத்தில், பரத நாட்டியமாடி கலக்கப் போகிறேன்...' என்று சொல்லி, நடனத்துக்கு பெயர் பெற்ற, சில நடிகர்களுக்கு, மறைமுக சவால் விடும் வகையில், 'தில்'லாக பேசி வருகிறார், சிம்பு.
— சினிமா பொன்னையா
ஆண்ட்ரியாவை அதிர வைத்த, வாணி போஜன்!
'சீரியல்' நடிகையரைக் கண்டு, சினிமா நடிகையர் பயப்படும் காலமாகி விட்டது. அந்த அளவுக்கு, சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்துள்ள, பிரியா பவானி சங்கர் மற்றும் வாணி போஜன் போன்ற நடிகையர், கோலிவுட்டில் தொடை தட்டி திரிகின்றனர். அதிலும், 'நான் தான் ஜூனியர் நயன்தாரா...' என்று, 'பில்ட் - அப்' கொடுத்து வரும், வாணிபோஜன், கோலிவுட்டில் எந்நேரமும் அரைக்கால் சட்டையுடன் திரிபவர், 'ஆண்ட்ரியா போன்ற, 'மிட்நைட்' மசாலா நடிகையரையே, அதிர வைக்கப் போகிறேன்...' என்று, தற்போது ஒரு மிரட்டலான, ஆபாச, 'ஆல்பத்'தை வெளியிட்டுள்ளார்.
ஆனான ஆளெல்லாம் தானானம் போடுறபோது, கோணல் கொம்பு மாடு கொம்பைக் கொம்பை அசைக்கிறது!
— எலீசா
இளவட்ட நடிகையரை வெறுப்பேற்றும், நதியா!
கடந்த, 1980 - 90களில், முன்னணி நடிகையாக வலம் வந்த, நதியா, திருமணத்திற்கு பிறகு, இளமையான அம்மாவாகவும், முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இப்போது, 50 வயதாகும் நிலையிலும், 20 வயது பெண்ணை போலவே இளமையாக காணப்படுகிறார். இதனால், அவர் படப்பிடிப்பு தளங்களுக்கு வந்தாலே, 'இளமையை எப்படி பராமரிக்க வேண்டும் என்ற ரகசியத்தை, நதியாவிடம் கேட்டு தெரிஞ்சிக்கோங்க. உங்க அம்மா வயசு அவங்களுக்கு. ஆனா, அவங்களுக்கு அம்மா மாதிரி நீங்களும், உங்களுக்கு மகள் மாதிரி அவங்களும் இருக்காங்க...' என்று, அழகை சரியாக பராமரிக்காத சில இளவட்ட நடிகையரிடம் சொல்லி வெறுப்பேற்றுகின்றனர், இயக்குனர்கள். ஆட லோகத்து அமுதத்தை ஈக்கள் மொய்த்துக் கொண்டது போல!
— எலீசா
காமெடி நடிகையரை துரத்தும், யோகிபாபு!
சந்தானம், சூரியுடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்த, ஜாங்கிரி மதுமிதா மற்றும் வித்யுலேகா போன்றோர், யோகிபாபுவை அணுகியபோது, நிராகரித்து விட்டார். அதோடு, 'மற்ற காமெடியன்களுடன் நடித்தவர்கள், எனக்கு, 'செட்' ஆகாது...' என்று கூறியவர், தற்போது, வளர்ந்து வரும் சில நடிகையருக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறார். இப்படி, 'கமர்ஷியல் வேல்யூ' உள்ள தங்களை, யோகிபாபு நிராகரிப்பதால், மதுமிதா, வித்யுலேகா போன்ற காமெடி நடிகையர், 'நாங்கள் இல்லாமல், யோகிபாபுவால் புது வரவு நடிகையருடன் நடித்து, காமெடி காட்சிகளில் பிரகாசிக்க முடியாது...' என்று, அவருக்கு எதிராக, கொடி பிடித்து வருகின்றனர்.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
சில, 'ஹிட்' படங்களை கொடுத்தபோது, மெகா இயக்குனர்கள், தன்னை வைத்து படம் பண்ண முன் வருவர் என்று எதிர்பார்த்தார், மெரினா நடிகர். ஆனால், எந்த முன்னணி இயக்குனர்களும் அவரை அணுகவில்லை. இதனால், சிறிய இயக்குனர்களின் படங்களிலேயே நடித்துக் கொண்டிருந்தால், தன், 'கிரேடு' எகிறாது என்பதால், சமீபத்தில், சில மேல்தட்டு இயக்குனர்களை, தன்னை வைத்து படம் இயக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார், மெரினா. ஆனால், நடிகர் அழைப்பு விடுத்த முன்னணி இயக்குனர்களோ, 'எங்கள் இயக்கத்தில் நடிக்கிற அளவுக்கு, நீ இன்னும் வளரல தம்பி...' என்று, கூலாக சொல்லி, அவருக்கு, 'ஷாக்' கொடுத்து விட்டனர். இதனால், 'கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறேன். இன்னும் நான் வளரவில்லை என்றால், எப்போது தான் என்னை வளர்ந்த நடிகராக ஏற்றுக் கொள்வராம்...' -என்று, புலம்பித் திரிகிறார், மெரினா நடிகர்.
'இத பார் சிவகார்த்திகேயா... ரியல் எஸ்டேட் தொழிலில் நீ, எல்.கே.ஜி., மட்டும் தான். இன்னொருத்தர் தோணியில் தான் இன்னும் சவாரி செஞ்சுட்டு இருக்க. ஆனா, நாங்க, பி.எச்.டி., வாங்கிட்டோம். சிட்டியில உள்ள பல பெரிய பெரிய, 'பில்டிங்'குகள் நாங்க கட்டினது தான். எங்களோடு கூட்டு சேர்ந்துக்கலாமான்னு கேட்கறியே... இன்னும் நீ வளரணும் தம்பி. சொந்த காலில் நின்று, சாதித்த பின் வா சேர்த்துக்கறோம்...' என்றார், ஒரு ரியல் எஸ்டேட் அதிபர்.
சினி துளிகள்!
* 'என் படங்களில், காமெடி துாக்கலாக இருக்க வேண்டும் என்பதோடு, முன்னணி காமெடியன்கள் அவசியம் வேண்டும்...' என்று, கதை கேட்கும்போதே இயக்குனர்களிடம் நிபந்தனை விதிக்கிறார், சிவகார்த்திகேயன்.
அவ்ளோதான்!