தவம் செய்து, அண்ணாமலையார் அருளாணைப்படி பிறந்த குழந்தை அது; பிறந்து ஐந்து வயதாகியும் பேசவில்லை என்றால், பெற்றவர்களின் மனம் என்ன பாடு படும்!
திருச்சிக்கு அருகில் உள்ள கீழாலத்துார் எனும் ஊரில், பிறந்து, ஐந்து வயதாகியும், ஒரு குழந்தை பேசாமல் இருந்தது. பெற்றோர் மிகுந்த மன வருத்தம் அடைந்தனர்; என்ன செய்வதென்றே தெரியவில்லை.
'அண்ணாமலை தெய்வமே... உன் அருளால் பிறந்த குழந்தை; நல்வழி காட்டு...' என, உள்ளம் உருகிப் பிரார்த்தனை செய்தனர்.
பலனளித்தது பிரார்த்தனை. ஒருநாள், காவியாடையும், சடைமுடியுமாகத் துறவு கோலம் பூண்டு, குழந்தையின் வீட்டை அடைந்தார், அண்ணாமலையார்.
மனக்குழப்பம் மிகுந்த நேரத்தில், துறவி ஒருவர் வீடு தேடி வந்தது, பெற்றோருக்கு சற்று ஆறுதல் அளித்தது. மனக்குமுறலை விவரித்து, 'ஐந்து வயதாகியும் பேசவில்லை...' என்று கூறி முடித்தனர்.
அமைதியாகக் கேட்ட துறவி, 'வாருங்கள், அக்குழந்தையை யான் பார்க்க வேண்டும்...' என்றார்.
துறவியை அழைத்து சென்று, குழந்தையின் முன் நிறுத்தினர்.
பத்மாசனமிட்டு தியானத்தில் இருந்த குழந்தையின் முன் நின்ற துறவி, அதை ஒருமுறை மேலும் கீழுமாகப் பார்த்தார்.
'தான் பிறந்த வீட்டிற்கும், நாட்டிற்கும் சிறப்பு சேரும்படியாகத் தோன்றியவன் இவன். ஊமை என நினைக்காதீர்... இப்போது பேசுவான் பாருங்கள்...' என்றார், துறவி.
பெற்றோரும் ஆர்வமாக, 'நீ, ஏன் பேசாமல் இருக்கிறாய்...' எனக் கேட்டனர்.
தியான நிலையில் கண்களை மூடியபடி இருந்த குழந்தை, 'சும்மா இருக்கிறேன்...' என்று பதில் சொன்னது.
பெற்றோர் மகிழ்ந்தனர்.
'சும்மாயிருக்கும் நீ யார்...' எனக் கேட்டார், துறவி.
'நீயே நான்; நானே நீ...' என, கண்களைத் திறவாத நிலையிலேயே பதில் சொன்னது, குழந்தை.
'சத்தியம்... சத்தியம்...' என்ற துறவி, அப்படியே மறைந்தார்.
பெற்றோர் வியந்தனர். துறவியாக வந்து துயர் தீர்த்தது, அண்ணாமலையாரான சிவபெருமானே என்பதை உணர்ந்து, ஆனந்தக்கண்ணீர் வழிய, வணங்கினர்.
தேடி வந்து அருள்புரிந்த தெய்வத்திடம், தன்னை உணர்ந்து பேசிய அக்குழந்தை தான், -தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள்.
ஐந்து ஆண்டுகளாக பேசாமல் இருந்த குழந்தையை, பேச வைத்த தெய்வம்; ஐந்தாறு மாதங்களாக அடங்கி ஒடுங்கியிருந்த நம்மை, இப்போது சற்று உலாவ வைத்திருக்கிறது. விரட்டியடிக்கப்பட வேண்டிய நோயை, விருப்பம் போல் சுற்றி, மறுபடியும் பெருகச் செய்யாமல் இருப்போம்.
நம்மை உணர்வோம்; நோயை விரட்ட முயல்வோம்; நாமும் உயர்வோம்; நாடும் உயரும்!
பி. என். பரசுராமன்