முன்கதை சுருக்கம்: அத்தை மற்றும் அம்மாவிடம் குல தெய்வ கோவிலுக்கு செல்வதாக பொய் சொல்லி, கார்த்திகேயனை பார்க்க வருகிறாள், ஜோதி. வீட்டிற்கு வந்ததும், கார் டிரைவர் முத்து, ஜோதி சொல்வது போல் நடக்கும்படி கூற, சரி என்ற கார்த்திகேயன், ஆழ்ந்த யோசனையுடன் புவனா, ஜோதி இருக்கும் அறைக்கு சென்றான்-
கார்த்திகேயன் உள்ளே வந்ததும், மூவரும் வசதியாக அமர்ந்து கொண்டனர்.
''இப்போ சொல்லு, ஜோதி... என்ன ஆச்சு...''
''நீங்க போனதும் மாமா...'' என்று ஆரம்பித்த ஜோதி, அனைத்தையும் சொல்லி முடித்தாள்.
''நீங்க ரெண்டு பேரும் உடனடியா திருமணத்தை முடிச்சுக்கிட்டு, இந்த வீட்டை விட்டு போங்க. முடிஞ்சா கொஞ்ச நாளைக்கு ஊரை விட்டே போங்க.''
''அது எப்படி முடியும் ஜோதி. இங்கதானே என் அகாடமி இருக்குது?''
''உசுர விட எதுவும் பெரிசில்ல. அதுவும் அக்காவோட உசுரு.''
''ஜோதி, நிஜமாவே அப்பா அப்படி செய்வாருன்னு நினைக்கறியா?''
''அவரை பத்தி உங்களை விட, எனக்கு நல்லாத் தெரியும். நாம பாதுகாப்பா இருக்கறது நல்லது.''
கலவரத்தோடு பார்த்தாள், புவனேஸ்வரி.
''என்ன கார்த்தி இதெல்லாம்?''
''காலம் காலமா நடக்கிற விஷயம் தான். காதல் தோன்றின காலத்திலிருந்து நடந்துகிட்டு தான் இருக்கு.''
''இப்ப நாம என்ன செய்யப் போறோம்?''
''உங்க வீட்டுக்கு தெரியுமாக்கா?''
''இன்னும் நான் சொல்லல.''
''முதல்ல சொல்லிப்புடுங்க. அவங்க பதில் என்னவாக இருக்குன்னு பார்க்கலாம். ஒரு பக்க ஆதரவாவது நமக்கு வேணுமில்ல...''
''இல்ல, ஜோதி... உன் ஆதரவு தவிர, வேற எந்த ஆதரவும் கிடைக்காது. என்ன... எங்க வீட்ல, உங்க வீடு மாதிரி அருவா துாக்க மாட்டாங்க... இயல்பாகவே பயந்தவங்க... சாத்வீகமானவங்க... எங்க சாப்பாடே சாத்வீகமானது தான்.''
''எதுவானாலும் சொல்லித்தானே ஆவணும்?''
''சொல்லணுந்தான்.''
''இன்னிக்கே சொல்லிடறீங்களாக்கா?''
''நேரம் ஒத்து வந்தா சொல்லிடறேன்.''
''எதுவானாலும் எனக்கு தெரியப்படுத்துங்க. என்கிட்ட மொபைல் இருக்குது. மாமாவுக்கு நம்பர் தெரியும். நீங்களும் பேசுங்க மாமா.''
''சரி, ஜோதி.''
''நா கிளம்பறேன் மாமா.''
''ராத்திரி தங்கலையா?''
''இல்ல மாமா, போயிடறேன். அனாவசியமா மாமாவுக்கு சந்தேகம் வரவேண்டாம். இப்ப கிளம்புனா, ராத்திரி, 10:00 மணிக்கெல்லாம் போயிருவேன்.''
''முத்து எதுவும் சொல்ல மாட்டாரே?''
''நம்பலாம் மாமா... நமக்காக உசுர வுடுவாரு...''
''சரி, கிளம்பு ஜோதி. நீயும் கிளம்பு புவனா. இனிமே, இங்க வேணாம்; வெளியில சந்திக்கலாம். எங்கன்னு யோசிச்சு சொல்றேன்.''
மூவரும் வெளியில் வந்தனர்.
எழுந்து உட்கார்ந்தார், முத்து.
புவனேஸ்வரியை கண்டதும் கையெடுத்து கும்பிட்டார். முகம் மலர்ந்தது.
''உங்கம்மா கூட இப்படித்தான் இருப்பாங்க, சின்னய்யா.''
சிரித்தான், கார்த்திகேயன்.
''ஜோதியை ஜாக்கிரதையா கூட்டிட்டு போயிடுங்க.''
''ஏதாவதொரு கோவிலுக்கு போய், மால, துண்ணுாறெல்லாம் வாங்கிக்கிட்டு போவணும்.''
''அப்ப எங்க கோவிலுக்கே வாங்களேன். எல்லாருமே போகலாம்.''
''வாங்கக்கா போகலாம்.''
மூவரும் காரில் ஏற, வண்டி ஓட்டினார், முத்து. கோவிலுக்கு போக வழி சொன்னான், கார்த்திகேயன்.
கோவில் வாசலில் இறங்கிக் கொண்டனர். காரை ஓரங்கட்டினார், முத்து.
வாசலின் இரு பக்கங்களிலும் பூமாலை, பூச்சரம், அர்ச்சனை தட்டு, பழம் எல்லாம் விற்றனர்.
''உள்ளார எத்தினி சாமி இருக்காங்கக்கா?''
''ம்... பிள்ளையார், முருகன், அம்பாள், ஈஸ்வரன், தட்சிணாமூர்த்தி மற்றும் துர்க்கை என, தனித்தனி சன்னிதிகள் உண்டு. சனி மூலையில் சனீஸ்வரர் சன்னிதி இருக்கு.''
''அப்படின்னா மொத்தம் ஏழு மாலை, அர்ச்சனை தட்டு வாங்கணும்ல்ல?''
''வேணாம்... அம்பாளுக்கும், ஈஸ்வரனுக்கும் வாங்கினால் போதும்.''
''இல்லக்கா... உங்கப்பா இருப்பாரு... பெரியவரு, அவரு கையால எல்லா சாமிக்கும் அர்ச்சனை செய்யட்டுங்கக்கா. சாமிக்கு பூமாலை போடுற நேரம், உங்க ரெண்டு பேர் கழுத்துலயும் பூமாலை விழணும்.''
புவனேஸ்வரிக்கு நெஞ்சம் உருகிற்று. கண்கள் லேசாக கலங்கின.
'எப்பேர்பட்ட மனசு இவளுக்கு...'
''என்னக்கா, அப்படி பார்க்கறீங்க?''
''உன் மனசுக்கு முன்னால உரசிப் பார்த்தா தங்கம் கூட, மாத்து கம்மியாத்தான் இருக்கும்.''
''போங்கக்கா...'' என்றவள், கை நிறைய மாலைகளை சுமந்து, கார்த்திகேயனிடமும், புவனேஸ்வரியிடமும் கொடுத்தாள். அர்ச்சனை தட்டுகளை அடுக்கி எடுத்து வந்தாள்.
''போகலாமாக்கா?''
அன்று, கோவிலில் கூட்டமில்லை. நாலைந்து பேர் மட்டும் சுற்றி வந்தனர். இவர்களை பார்த்ததும், புன்னகையோடு பரமசிவன் சன்னிதி விட்டு வெளியில் வந்த, குருமூர்த்தி சிவாச்சாரியார், முதலில் புவனாவை தான் பார்த்தார்.
''என்னம்மா... இன்னிக்கு ஆபீஸ் போகலையா?''
''சீக்கிரம் கிளம்பி வந்துட்டேம்ப்பா. இவா ரெண்டு பேரும், நம்ம கோவிலை பார்க்கணும்ன்னா... கூட்டிண்டு வந்தேன்.''
''வாங்கோ... அர்ச்சனையா?''
''ஆமாம் சாமி... எல்லா சாமிக்கும் செய்யணும்.''
''பண்ணிடலாம். முதல்ல, ஈஸ்வரனுக்கும், அம்பாளுக்கும் பண்ணிட்டு, அதுக்கப்புறம், கணேசருக்கும், சுப்ரமணியருக்கும் பண்ணலாம். ஒட்டுமொத்த சிவ குடும்பத்தையும் ப்ரீதி பண்ணலாம்.''
''வேற ரெண்டு சாமி கூட அக்கா சொன்னாங்க?''
''தட்சிணாமூர்த்தியும், துர்க்கையும் சொன்னேன்ப்பா.''
''அதுக்கென்ன... பண்ணிட்டா போச்சு...'' தட்டுகளையும், மாலைகளையும் வாங்கிக் கொண்டார்.
''பேரு, கோத்திரம், நட்சத்திரம் சொல்லுங்கோ.''
புவனா பெயரை கூறினாள், ஜோதி.
''என்னம்மா... என் பொண்ணு பேரை சொல்ற?''
''அதான் பேரு ஐயிரே.''
''சரி, நட்சத்திரம், கோத்திரம்?''
''அதெல்லாம் தெரியாது. பேரை மட்டும் வச்சு பண்ணிடுங்க.''
''சரி...'' என்று உள்ளே போனார்.
லிங்கத்திற்கும், அம்பாளுக்கும் அர்ச்சனை செய்து, பின்னர், பிள்ளையார், முருகன், தட்சிணாமூர்த்தி, துர்க்கை அனைவருக்கும் அர்ச்சனை செய்தார். பூமாலைகளும், புஷ்ப சரங்களும், எலுமிச்சை மாலைகளும், தேங்காய் மூடிகள், வாழை பழங்கள், விபூதி, குங்குமப் பிரசாதம் எல்லாம் தந்தார்.
''வாங்க, மாமா... ஐயிரை விழுந்து கும்புட்டுக்கலாம்.''
''அம்மா... அதெல்லாம் வேணாம். கோவில்ல, தெய்வத்தை தவிர, வேற யாருக்கும் நமஸ்காரம் பண்ணக் கூடாது,'' என்று விலகினார்.
''சரிங்க சாமி... இவருக்கு திருமணம் நடக்கப் போகுது... நல்லாருக்கணும்ன்னு ஆசிர்வாதம் பண்ணுங்க.''
''இவருக்கு திருமணம்ங்குற... அப்ப, திருமணம் உன் கூட இல்லையா?''
''இல்லீங்க சாமி... அதான் அர்ச்சனை செய்யிற போது பேரு சொன்னேனில்ல, அந்த பொண்ண தான் கட்டிக்கப் போறாரு.''
''என்ன பேரு சொன்னம்மா?''
''புவனேஸ்வரி.''
சுரீரென்றது அவருக்கு. ஆனால், 'சீ, இருக்காது. வேறு ஒரு பெண்ணாக இருக்கும்... புவனேஸ்வரி என்ற பெயரில் எத்தனை பெண்கள் இல்லை...'
சமாதானப்படுத்திக் கொள்ள முயன்றார்.
— தொடரும்
இந்துமதி