'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:சார்லஸ் பிராட்லா என்ற ஆங்கிலேய நிர்வாகி, முதலில், இங்கிலாந்து நாட்டின் மக்கள் சபையில் உறுப்பினரானான்.
அச்சபையில் முறைப்படி, பதவிப் பிரமாணம் செய்கையில், எல்லாரும் இறைவனின் பெயரால் என்று உறுதிமொழி எடுப்பது வழக்கம். ஆனால், பிராட்லா
உறுதி மொழி எடுக்கும்போது, இறைவன் பெயரால் என்பதற்கு பதிலாக, 'உளமாற உறுதி கூறுகிறேன்...' என்றான்.
இதை, காமன்ஸ் சபை ஏற்க மறுத்தது. பின்னர், இதனால், பிராட்லா, சிறைச்சாலை வரை செல்ல வேண்டியிருந்தது.
பகுத்தறிவுவாதியாக இருந்த கிரேக்க அறிஞர்களான சாக்ரட்டீஸ், பிளாட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் ஆகியோர் வரிசையில் வைக்கத் தக்க பகுத்தறிவுக்காரன், இந்த பிராட்லா.
ஈ.வெ.ரா., தன் சுற்றுப் பயணத்தின்போது, குழந்தைகளுக்கு பெயர் சூட்டச் சொன்னால், இங்கர்சால், சாக்ரட்டீஸ் மற்றும் பிராட்லா என, பெயர் சூட்டுவது வழக்கம். மேலும், இன்றைய சட்டசபையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளே, உறுப்பினராக முடியும் என்ற சட்டமும் பிராட்லாவால் கொண்டு வரப்பட்டதே.
காமன்ஸ் சபை உறுப்பினரான, பிராட்லாவை, நீதிமன்றத்தின் மூலம் தண்டிக்க நினைத்தபோது, 'சட்டசபை நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது...' என்ற தீர்ப்பும், இவரது வழக்கின் முடிவாக இருந்தது.
அதனால் தான், இன்றும், நம் சட்டசபை நடவடிக்கைகளில், நீதிமன்றம் தலையிட முடியாது என்ற நிலை உள்ளது.
'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து: கண்ணதாசனின் வாழ்நாளில் பல கனவுகள் வந்திருந்தாலும், சில கனவுகள், எதிர்மறை விளைவுகளையும், சில கனவுகள், அப்படியே நடந்ததாகவும் சொல்கிறார்:
ஒருநாள் காலையில், காந்திஜியை சுட்டுக் கொன்று விட்டதாக கனவு வந்தது. அன்று மாலை, வானொலியில், கண்ணீரோடு ஒரு செய்தி சொல்லப்பட்டது.
ஆம், காந்திஜி, சுட்டுக் கொல்லப்பட்டார் என்று.
என் கனவில் மலம் வந்தால், மறுநாள் எங்கிருந்தாவது பணம் வந்து விடும். நுாற்றுக் கணக்கான முறை அந்த கனவை கண்டு, மறுநாளே பலன் அடைந்திருக்கிறேன்.
பல் விழுந்ததாக கனவு கண்டால், மறுநாளே என் மீது கோர்ட்டில், புது வழக்கு வரும். 20 ஆண்டுகளாக, அடிக்கடி நான் படிப்பது போல கனவு காண்கிறேன். ஒவ்வொரு தடவையும் அந்த கனவு வந்த பிறகு, என் புகழ் உயர்ந்து வருகிறது.
பல தடவை ரயிலுக்கு போகும்போது, ரயிலை தவற விடுவதாக கனவு கண்டிருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதாவது ஒரு நல்ல சந்தர்ப்பத்தை இழந்திருக்கிறேன்.
கனவில் வெள்ளம் வந்தால், காலையில் பணம் வருகிறது. வெள்ளம் வடிவது போல் கனவு கண்டால், வந்த பணம் செலவழிந்து போகிறது.
கடந்த, 1971 தேர்தலில், யானை, என்னை துரத்தி ஓடி வந்து, மாலை போடுவது போல் கனவு கண்டேன். அந்த தேர்தலில், நான் சார்ந்திருந்த, 'இந்திரா காங்கிரஸ்' பலத்த, 'மெஜாரிட்டி'யில் ஜெயித்தது.
நிர்மலமான துாக்கத்தில், களங்கமற்ற உள்ளத்தில் தோன்றும் கனவுகள் பலனளிக்கின்றன என்பது, ஹிந்துக்களின் நம்பிக்கை. அது, என் வாழ்விலும் பல முறை மெய்யாகியுள்ளது.
நடுத்தெரு நாராயணன்