''சுமித்ரா... பாத்தியா, என் வாழ்க்கையோட லட்சணத்த,'' என்ற, ரவியின் குரலில் தொனித்த வேதனை, அவளை சங்கடப்படுத்தியது. பதில் சொல்லாமல் மவுனமாக, ரவியின் மனைவியையும், அவன் அம்மாவையும் பார்த்தாள். அவர்கள் இருவரும்
ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி, ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.
தர்ம சங்கடமாய் ரவியை திரும்பிப் பார்த்தாள், சுமித்ரா. அவன் கண்களில் கண்ணீரும், முகத்தில் அவமானமும் தெரிந்தது.
தன் அம்மாவும், மனைவியும் சண்டையிடுவதை, ஒரு கையாலாகாத கணவனாய் வேடிக்கை பார்க்கும் அவலத்தை, தான் நேசித்த பெண் பார்க்க நேர்ந்தால், எந்த ஆணுக்குத்தான் சந்தோஷமாக இருக்கும்.
சுமித்ராவின், அத்தை மகன் தான், ரவி. அண்ணன், தம்பிகளை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டாள், அத்தை. அதனால், அவளை ஒதுக்கி வைத்து விட்டனர், உடன் பிறந்தோர். ஒரே ஊருக்குள் இருந்தாலும், இரு வீட்டினருக்கும் பேச்சு வார்த்தை இல்லை.
சுமித்ராவின் அப்பாவிற்கு சென்னையில் பணி. முக்கியமான விசேஷம் மற்றும் கோடை விடுமுறைக்கு மட்டுமே குடும்பத்துடன் ஊருக்கு வருவார். அப்படி ஒருமுறை குல சாமி திருவிழாவிற்கு வந்த போதுதான், முதன் முதலில் ரவியை பார்த்தாள், சுமித்ரா.
அப்போது அவளுக்கு, 9 வயது; ரவிக்கு, 13 வயது இருக்கும். 20, 25 மாட்டு வண்டிகளில், அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில், மாடுகளின் மணியோசை தாலாட்ட, மேற்கு தொடர்ச்சி மலைக் காட்டுக்குள் இருந்த கருப்பசாமி கோவிலுக்கு சென்றதை, இப்போது நினைத்தாலும் சுமித்ராவிற்கு,'த்ரில்'லாக இருக்கும்.
நடுச்சாமத்தில் நடக்கும் பலி பூஜைக்கான முன்னேற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. பூஜையின் போது யாரும் துாங்கக் கூடாது என்பதால், குமரிகளின் சிரிப்பொலியினாலும், இளைஞர்களின் ஆரவார பேச்சாலும், அந்த வனாந்திரம் தன் அமைதியை இழந்திருந்தது.
சிறுவர், சிறுமியர், 'ஐஸ் பாய்' விளையாடினர். ஒளிந்துள்ளவர்களை, ரவி தான் கண்டுபிடிக்க வேண்டும். மாட்டு வண்டி சக்கரத்துக்கு பின் ஒளிந்திருந்தாள், சுமித்ரா. முதலில் அவளை கண்டுபிடித்த, ரவி, முதுகில் ஓங்கி ஒரு அடி வைத்து, 'ஐஸ் ஒன்...' என்றான்.
அவன் அடித்தது வலிக்கவே, திருப்பி அடித்தாள், சுமித்ரா. பதிலுக்கு அவன் அடிக்கவே, அவன் கையை கடித்தாள். வலியில் அலறிய ரவி, கல்லை எடுத்து, அவள் மண்டையில் ஓங்கி, 'நங்'கென்று அடிக்க, ரத்தம், 'பொலபொல'வென கொட்டியது. அதன்பின், திருவிழா முடியும் வரை, இருவரும் எலியும், பூனையுமாக முறைத்துக் கொண்டனர்.
இரண்டாம் முறை அவனை பார்த்தது, 10 ஆண்டுகளுக்கு பின்!
அப்பாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட, விருப்ப ஓய்வு பெற்று, குடும்பத்துடன் கிராமத்திற்கே வந்து விட்டார். சின்ன அண்ணன் குடும்பத்துடன் ஒட்டி விட தவித்தாள், அத்தை. ஆனால் சுமித்ராவின் அப்பா, தவிர்த்தார்.
அதேநேரம், ரவியின் தங்கை மல்லிகாவிற்கு மட்டும், எந்த தடையும் இல்லை. பள்ளி முடிந்ததும் சுமித்ராவின் வீட்டிற்கு ஓடி வந்து விடுவாள், மல்லிகா.
'உனக்கு என் தங்கச்சிய பிரிய மனம் இல்ல அவ்வளவு தானே... பேசாம எங்க அண்ணன கட்டிக்க; அப்புறம் நீயும், அவளும் எப்பவும் ஒண்ணாவே இருப்பீங்க...' என்பாள், சுமித்ரா கேலியாக!
'யாரு... உங்க பெரியப்பன் மகன், அந்த கருவாயனவா... அவனக் கட்டிக்கிறதுக்கு நான் மொட்டக் கிணத்துல விழுந்து செத்துப் போயிருவேன்...
நீ எங்க வீட்டுக்கு வான்னு சொன்னா, என்னென்னவோ சொல்லிட்டு இருக்கே...' என்று சிணுங்குவாள், மல்லிகா.
'அது என்ன... எங்க பெரியப்பன் மகன்... அவன், உனக்கு மாமன் மகன் இல்லயாக்கும்...' என்று கூறி, பேச்சை மாற்றுவாள், சுமித்ரா. காரணம், கிராமத்திற்கு வந்த இந்த மூன்று மாதத்தில், ரவியை அவள் ஒருமுறை கூட பார்த்ததில்லை.
அன்று, பெரியப்பா, சித்தப்பா மகள்களுடன், 'பம்பு செட்'டில் குளிக்க தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்தாள், சுமித்ரா.
எதிரில் சைக்கிளில் வந்த ரவியை பார்த்து, யார் என விசாரிக்க, 'அவன், நம் அத்தை மகன் ரவி...' என்றாள், பெரியப்பா மகள்.
'ஓ... இவன் தான் மல்லிகாவோட அண்ணனா...' என்று கேட்டவள், திரும்பி அவனைப் பார்த்தாள். அவன் துாரத்தில் மரங்களுக்கு மத்தியில் புள்ளியாய் சைக்கிளில் மறைந்து போனான்.
இச்சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்கு பின், பக்கத்து வீட்டுத் தோழியுடன் கோவிலுக்கு சென்றிருந்தாள், சுமித்ரா. சன்னிதி முன், கண் மூடி சுவாமி கும்பிட்டுக் கொண்டிருந்தான், ரவி.
சுமித்ராவின் இடுப்பை நைசாக இடித்து, கண் ஜாடை காட்டி, 'உங்க அத்தை மகன் ரவியப் பாரு... பக்தி பழமாக சாமி கும்பிடுறான்...' என்றாள், ரகசிய குரலில், தோழி.
அப்போது தான் அவனை நன்றாக கூர்ந்து பார்த்தாள், சுமித்ரா. 25 வயதில் அத்தையை அச்சு எடுத்தது போல இருந்தான். அவனையே விழி அகல சுமித்ரா பார்ப்பதைப் பார்த்த தோழி,
'ஏய்... என்னடி அவன அப்படி பாக்குறே... உங்க அத்தைகிட்டச் சொல்லி நாள் குறிக்க சொல்லவா...' என்று கேலி செய்தாள்.
ஆனால், அதை காதில் வாங்காது அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி நின்றிருந்தாள், சுமித்ரா.
இதை ரவியும் கவனித்து விட்டான்.
'இவள் ஏன் நம்மை இப்படி குறுகுறுன்னு பார்க்கிறா...' என்று நினைத்தாலும், அவள் அப்படி பார்ப்பது அவனுக்கு சந்தோஷத்தையே தந்தது; மனம் இறக்கை கட்டிப் பறந்தது.
அன்று மட்டுமல்ல; அடுத்து வந்த நாட்களிலும் கடைத்தெருவிலோ, எங்காவது வழியிலோ அவனை யதேச்சையாக சந்திக்க நேர்ந்தால், அவனையே ஆர்வத்துடன் பார்ப்பாள், சுமித்ரா. அந்தப் பார்வையில் இருந்த அன்பு, பாசம், கனிவு அவளுக்கு தன் மீதுள்ள காதலை பறைசாற்றுவதாகவே ரவிக்கு தோன்றியது. அவனுக்கும் அவளை மிகவும் பிடிக்கும் என்பதால், அதுபோன்ற சமயங்களில் அவன் முகம் தாமரையாய் மலரும்.
இந்நிலையில் சுமித்ராவின் அப்பா இறந்து விட, இடிந்து போனாள். அப்பாவுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்ட போது, அவள் தான் பிடிவாதமாக அவரை விருப்ப ஓய்வு பெற வைத்ததுடன், 'கிராமத்திற்கே போவோம்; அப்போது தான், சுத்தமான காற்று, அமைதியான சூழ்நிலையில் உங்கள் உடல் நலம் சீராகும்...' என்று சொல்லி, அழைத்து வந்தவள். ஆனால், இதய பலகீனத்துடன், சிறுநீரகமும் செயலற்று போக, கிராமத்திற்கு வந்த சில மாதங்களிலேயே இறந்து போனார்.
எப்போதாவது சுமித்ராவின் பெரியப்பா மகனுடன், வீட்டிற்கு வருவான், ரவி. தாழ்வாரத்தில் உள்ள திண்ணையில் உட்கார்ந்து இருப்பான். அவனிடம், அவள் ஏதும் பேசியதில்லை என்றாலும், அவன் வந்து விட்டால், விழுந்தடித்து, குடிக்க ஏதாவது தயாரித்து வந்து தருவாள். இதனால், ரவியை, சுமித்ராவிற்கும் பிடித்திருக்கிறது என்றே வீட்டினர் அனைவரும் நினைத்தனர்.
ஒருநாள், சுமித்ராவிற்கு தலைவாரிக் கொண்டிருந்த அத்தை, கிணற்றடியில் பாத்திரங்களை துலக்கிக் கொண்டிருந்த அம்மாவிடம், 'மதினி... ரவிக்கு, 25 வயசாச்சு; காலாகாலத்துல திருமணத்தை முடிச்சுடுலாம்ன்னு நினைக்கிறேன். அவன் சுமித்ராவைத் தான் திருமணம் செய்துக்குவேன்னு பிடிவாதமாக இருக்கான். நீ என்ன சொல்றே...' என்றாள்.
அம்மா பதில் சொல்ல வாயை திறக்கும் முன், 'அத்தை... எனக்கு ரவியை திருமணம் செய்துக்க விருப்பம் இல்ல...' என்று, 'பட்'டென்று சொல்லி விட்டாள், சுமித்ரா.
அம்மா, அத்தை, திண்ணையில் அமர்ந்து, பூ கட்டிக் கொண்டிருந்த மல்லிகா மற்றும் சுமித்ராவின் தங்கையும் கூட, இந்த பதிலை கேட்டு, அதிர்ந்து போயினர்.
ரவியை பிடிக்காததற்கு அவர்களுக்கு காரணம் தெரியவில்லை.
'நல்லவன், அழகானவன், 'அக்ரி' படித்தவன், எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவன், முறைப் பையன்; இத்தனைக்கும் மேல் சுமித்ராவை ரொம்பவும் நேசிப்பவன். அவனை ஏன் சுமித்ராவிற்கு பிடிக்கவில்லை...' என்று குழம்பினர்.
எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்த்தனர். பிடிவாதமாக ரவியை திருமணம் செய்ய மறுத்து விட்டாள், சுமித்ரா.
சுமித்ராவின் பார்வையில் தென்பட்ட காதலுக்கும், தற்போதைய நிராகரிப்புக்கும் காரணம் தெரியாமல் குழம்பிப் போனான், ரவி. அவனுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது. அவளின் மறுப்பு, அவன் தன்மானத்தை சீண்டவே, வேறு பெண்ணை பார்க்கும்படி கூறி விட்டான்.
அதன்பின், ரவிக்கு திருமணமாகி ஆண், பெண் என, இரு குழந்தைகள் பிறந்தனர். சுமித்ராவிற்கும் திருமணமாகி பெங்களூரு சென்று விட்டாள். இருவரும் வெவ்வேறு திசையில் சென்று விட்டாலும், ரவியின் மனதில் மட்டும் சுமித்ராவின் அன்பு பார்வையும், நிராகரிப்பும் ஊகா முள்ளாய் மனதின் ஓரத்தில் குத்திக் கொண்டே இருந்தது.
சித்திரை திருவிழாவிற்கு ஊருக்கு வந்திருந்த சுமித்ரா, அத்தை வீட்டிற்கு சென்றிருந்த போது தான், இப்படியொரு கேள்வியை கேட்டு விட்டான், ரவி.
''ஏன் சுமித்ரா... என்னை உனக்கு பிடிக்காமல் போச்சு?'' என்ற ரவியின் குரலால், நினைவுகள் கலைக்கப்பட்டவளாக, அவனையே கனிவுடன் பார்த்த சுமித்ரா, விறுவிறுவென்று வீட்டிற்குள் சென்றாள். அந்த பழைய காலத்து வீட்டுச் சுவரில் வரிசையாக கறுப்பு, வெள்ளை புகைப்படங்கள் மாட்டப்பட்டிருந்தன. அதில் ஒன்றை எடுத்து, வேகமாக அவனிடம் வந்தாள்.
புகைப்படத்தை அவனிடம் கொடுத்து, ''ரவி... இது யார் என்று தெரிகிறதா...'' என்று கேட்டாள், மென்மையாக!
''உங்கப்பா, அதாவது எங்க மாமன்...'' என்றான்.
''புகைப்படத்தில் எங்கப்பாவ பார்க்கும்போது உனக்கு என்ன தோன்றுகிறது, ரவி...'' என்றாள்.
''இளமையில் மாமா என்னை மாதிரியே இருக்கிறார்,'' என்றான், சிறிது பெருமையாக!
''மாற்றிச் சொல்லாதே... எங்கப்பா மாதிரியே நீ இருக்கிறாய்; அதுவும் அச்சு அசலாக! அப்பா சாயலில் இருக்கும் உன்னைப் பார்க்கும்போது, 'எனக்கு ஒரு அண்ணன் இருந்தால் உன்னைப் போல தானே இருப்பான்...' என்ற எண்ணம் ஏற்படும்.
''உன்னைப் போன்று தானே சிரிப்பான்; நடப்பான், கம்பீரமாக இருப்பான்... இப்படியெல்லாம் உன் ஒவ்வொரு செயலையும் ஒப்பிட்டு பார்த்து மகிழ்வேன். அப்பாவின் மரணத்திற்குப் பின், உன்னைப் பார்க்கையில் எனக்கு ரொம்ப ஆறுதலாக இருக்கும்.
''அதெல்லாம் ஒரு சகோதர உணர்வு தானே தவிர, உன்னை ஒருநாளும் அத்தை மகனாக, கணவனாக எண்ணிப் பார்த்ததில்லை. வீட்டினர் உனக்கு மணமுடிக்க பேசிய போது, என் மனம், உடம்பு கூசிப் போனது...
''நீ, என் அத்தையின் வயிற்றில் பிறந்திருக்கலாம்; ஆனால், உன் உருவம், என் உடன் பிறந்தவனாகவே நினைக்கத் தோன்றியது. என்னால் எப்படி உன்னை மணக்க முடியும் சொல்...'' என்றாள்.
''போதும் சுமித்ரா... எனக்கு புரிந்து விட்டது...'' என்ற ரவி, மனதுக்குள், 'அடக் கடவுளே... என் காதலுக்கு வில்லன், இந்த உருவ ஒற்றுமை தானா...' என, நொந்து கொண்டான்!
ப. லட்சுமி