தலைநகர் டில்லியில், காற்று மாசு எந்த அளவு ஏற்பட்டு உள்ளது என்ற செய்தியை அவ்வப்போது படிக்கிறோம். டில்லி மட்டுமல்ல; சென்னை, மும்பை, கோவை, மதுரை, பெங்களூரூ போன்ற பெருநகரங்கள் அனைத்திலும் பிரச்னை உள்ளது.
பாதிப்புகள்
கர்ப்பிணியருக்கு...
கரு உருவானதில் இருந்து, முதல் மூன்று மாதங்களில், இதயம், சிறுநீரகங்கள், கல்லீரல் போன்ற பிரதான உறுப்புகளின் அமைப்பு, வளர்ச்சி இருக்கும். மாசு அதிகம் உள்ள சுற்றுச்சூழலில் கர்ப்பிணி வசித்தால், பிறவி கோளாறுகள், எடை குறைவாகவோ, குறை பிரசவத்திலோ குழந்தை பிறக்கலாம்.
பிறவி இதயக் கோளாறுகளுடன் குழந்தை பிறப்பதற்கு, பல காரணிகள் இருந்தாலும், காற்று மாசு பிரதான பங்கு வகிப்பதாக, ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
குறை பிரசவத்தில், எடை குறைவான குழந்தை பிறந்தாலும், எந்த வாரத்தில் பிறக்கிறதோ, அந்த வாரத்திற்கான குறைந்தபட்ச உடல் எடையுடன் இருக்க வேண்டும். 28 வாரத்தில், குறை பிரசவமாக குழந்தை பிறந்தால், 1 கிலோ எடை இருக்க வேண்டும். 34 வாரத்தில் பிறந்தால், 2 கிலோ இருக்க வேண்டும்.
இதற்கு மாறாக, 34 வாரத்தில், 1 கிலோ தான் இருக்கிறது, 28 வாரங்களில், 800, 900, 1,000 கிராம் எடை என்றால், அந்த வயதிற்கான வளர்ச்சி இருக்காது. காற்று மாசால், 'பிளசென்டா' எனப்படும், தாய் - சேய் இணைப்புத் திசுவின் வளர்ச்சி அசாதாரணமாகி, கர்ப்பிணிக்கு, உயர் ரத்த அழுத்தம் ஏற்படலாம்.
பிளசென்டா மூலமே, கருவிற்கு வேண்டிய ஆக்சிஜன், ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றன. இதன் வளர்ச்சி சரியாக இல்லாத பட்சத்தில், கருவின் வளர்ச்சி பாதிக்கப்படும்.
பிறந்த குழந்தை
மாசு அதிகம் உள்ள சூழலில் கர்ப்பிணி இருந்தாலும், பல நேரங்களில் எந்த பிரச்னையும் இல்லாமல், குழந்தை பிறக்கும்; ஆனால், எதிர்பாராத விதமாக, பச்சிளங் குழந்தைகள் இறந்து விடுவர்.
பிறந்த குழந்தை, மாசு காற்றை சுவாசித்தால், மூளைக்கு போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்காமல், உயிரிழப்பதற்கு வாய்ப்பு அதிகம்.
வளர்ந்த குழந்தைகள்
காற்று மாசு, அலர்ஜியை ஏற்படுத்தும். குறிப்பாக, நுரையீரல் பலவீனமாகி, மூச்சிரைப்பு, ஆஸ்துமா போன்றவை ஏற்படும். அடிக்கடி இது போன்று அலர்ஜி ஏற்பட்டால், நுரையீரல் பலவீனமாகி, நோய் எதிர்ப்பு சக்தி தேவையான அளவு இல்லாமல், நிமோனியா வரலாம்.
ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பிற்கு, நிமோனியா தான் முக்கிய காரணி.
டாக்டர் கார்த்திக் பாலசுப்ரமணியம்,
குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்,
மகளிர் மையம், மதர்ஹூட் மருத்துவமனை,
99943 61431