அன்பு பிளாரன்ஸ் ஆன்டிக்கு...
பிளஸ் 2 படிக்கும் மாணவன் நான். தீவிர கிரிக்கெட் ரசிகன்; எந்த நாட்டில் கிரிக்கெட் போட்டி நடந்தாலும் தவறாமல் கண்டு ரசிப்பேன். தாத்தாவுடன் போட்டிகள் பார்த்ததால், கிரிக்கெட் வீரனாகும் ஆசை சிறு வயதிலே ஏற்பட்டு விட்டது.
என் ஒன்பது வயதில், கிரிக்கெட் பயிற்சியில் சேர்த்து விட, பெற்றோரிடம் கேட்டேன்; மறுத்துவிட்டனர். மனம் தளராமல் நச்சரித்தேன். ஒரு வழியாக, 'பிளஸ் 2 முடித்த பின் சேர்த்து விடுகிறோம்...' என கூறியுள்ளனர். அதுவும் சாத்தியமா என தெரியவில்லை.
குடும்ப வறுமைதான் என் கிரிக்கெட் கனவை சிதைக்கிறது. அதனால் ஒரு முடிவெடுத்தேன்.
நான் நன்றாக கதை எழுதுவேன்; ஞாயிறன்று வெளியாகும், தினமலர் - வாரமலர் இதழில் கதை எழுதினால் பரிசு கிடைக்கும்; அந்த பணத்தில் கனவை பூர்த்தி செய்யலாம் என எண்ணியுள்ளேன்.
ஆனால், பலரும் கேலி செய்கின்றனர்; 'தாமதமான முடிவு... வாய்ப்பு கிடைக்காது...' என்கின்றனர். யாரும் எது சொன்னாலும் கவலைப்படவில்லை.
சரி, உங்களிடம் கேட்கிறேன்...
* கிரிக்கெட் பயிற்சிக்கு, 17 வயதில் சென்றால் தேசிய அணியில் எப்போது சேர முடியும்
* ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் உழைக்க வேண்டும்
* எந்த வயதில் தேசிய அணியில் சேர்ப்பர்.
இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க ஆன்டி.
என்னைப் போல் சாதிக்க துடிக்கும் மாணவர்களுக்கு உங்கள் பதில் ஆறுதல் தரும்!
அன்பு மகனே...
எழுத்தாளராக பிரகாசிப்பது தனிப்பாதை என்றால், கிரிக்கெட் வீரராக சாதிப்பது இன்னொரு பாதை. கிரிக்கெட் வீரன் ஓய்வு பெற்ற பின், எழுத்தாளராக மாறி கிரிக்கெட் அனுபவங்களை சுயசரிதையாக எழுதலாம்.
ஒரு கிரிக்கெட் வீரராக தகுதிபெற கீழ்க்கண்டவை முக்கியம்:
* பயிற்சியை, 8 - 9 வயதில் ஆரம்பிக்க வேண்டும்
* சிறந்த கிரிக்கெட் அகாடமியில் சேர வேண்டும்
* அகாடமி வீட்டுக்கு அருகில் இருக்க வேண்டும்
* அந்த அகாடமியில் பயிற்சி பெற்றவர்கள் சிறந்த வீரர்களாகிய முன்னுதாரணம் வேண்டும்
* மாணவர் எண்ணிக்கைக்கு தக்கபடி, பயிற்சியாளர்கள் அமைய வேண்டும்
* பயிற்சிக்கு தேவைப்படும் கருவிகளை அகாடமி வைத்திருக்க வேண்டும்.
முதல் இரு வாரங்கள் இலவசமாக பயிற்சி மேற்கொண்டு, திருப்தியாக இருக்கிறதா என உறுதி செய்ய அனுமதி இருக்க வேண்டும்.மழைக்காலங்களில், அகடாமி எப்படி பயிற்சி கொடுக்கும் என்பதை அவதானிக்க வேண்டும்; பயிற்சிக்கான கட்டணத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
நான்கு ஆண்டு பயிற்சிக்குப் பின்,
13 - 15 வயதுக்கு உட்பட்டோருடன் விளையாட வேண்டும். இது மாவட்ட அளவிலான போட்டி. பின் எல்லா மாவட்டங்களையும் இணைத்து நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்து, மாநில அளவிலான போட்டிகளில் சென்னையில், நான்கு அணிகள் இருக்கும். அந்த அணிகளுடன், இரண்டு நாள் மேட்ச் விளையாட வேண்டும்; அதில் ஆடும், 200 வீரர்களில், 20 பேரை வடிகட்டி எடுப்பர்.
பின், மாநிலங்களுக்கு இடையேயான, ரஞ்சி ட்ராபி போட்டிகளில் விளையாட வேண்டும்; ஐ.பி.எல்., - டி.என்.பி.எல்., விளையாட கூட வாய்ப்பு கிடைக்கும்.
கடைசியாக, கண்டெடுக்கும் வீரர்களுக்கு சிறப்பான, கடுமையான, தொடர்ச்சியான பயிற்சிகளை தேசிய கிரிக்கெட் அகாடமி கொடுக்கும். எல்லாவற்றிலும் வடிகட்டி எடுக்கப்பட்ட வீரர், சர்வதேச கிரிக்கெட் அணியில் இடம் பெறுவார்.
ஒரு விளையாட்டு தொடரில் விளையாட, 16 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டால், அணியில், 11 பேர் போக மீதியுள்ள, ஐந்து பேர் சப்சிடியூட்டாகவே காலம் தள்ளும் வாய்ப்பும் உண்டு.
சாதாரணமாக, ஒரு கிரிக்கெட் வீரனின் வாழ்வு, ஐந்து ஆண்டுகள்; அபூர்வமாக, சிலருக்கு, 10 -15 ஆண்டுகள் அமைந்து விடுவதும் உண்டு. ஒரு ஆட்டக்காரர் விளையாடும் போதோ, 'பீல்டிங்' செய்யும் போதோ காயம் பட்டு அணியிலிருந்து விலக்கி வைக்க வாய்ப்பிருக்கிறது.
இந்தியாவில், 130 கோடி பேர் உள்ளனர். இதில், 11 பேரில் ஒரு வீரனாகும் வாய்ப்பு கோடியில் ஒருவருக்குத்தான் கிடைக்கும். சர்வதேச போட்டி அணியில் இடம் பெற கிரிக்கெட் வாரிய உறுப்பினர், பயிற்சியாளர், அணித்தலைவர் போன்றோரின் கருணைப் பார்வை மிக அவசியம்.
இவை தான், கிரிக்கெட் விளையாட்டில் பிரபலமாகும் படிநிலைகள். உனக்கு இவை பொருந்துமா என்று நன்றாக யோசித்து பார். பொருந்தாவிட்டால், குழம்பாமல், நல்ல முடிவைத் தேடு.
சரி... இனி கதை எழுதி சம்பாதித்து பயிற்சி பெறுவது பற்றி பார்ப்போம்...
ஆண்டு தோறும்,
தினமலர் - வாரமலர் நடத்தும் டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டிக்கு, குறைந்த பட்சம், 15 ஆயிரம் கதைகள் வருகின்றன.
முதல் மூன்று பரிசுகளுக்கு மூன்று கதைகளும், ஆறுதல் பரிசுக்கு, 10 கதைகளும் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
போட்டியில் முதல் பரிசு தொகை உனக்கே கிடைத்தாலும், அது கிரிக்கெட் அகாடமியில் கட்டணம் செலுத்த போதுமானதாக இருக்குமா என எண்ணிப்பார். ஒருமுறை, போட்டியில் வெற்றி பெற்றவர் மீண்டும் கலந்து கொள்ள விதிகள் உண்டு.
சிறுகதைகள் எழுதி வரும் பரிசு தொகையை வைத்து, நீ இந்திய கிரிக்கெட் வீரனாக வருவது குதிரை முட்டை.
நன்றாக படித்து சிறப்பான வேலைக்குச் செல்ல முயற்சி செய். வேலை செய்தபடியே பொழுது போக்காக கதைகள் எழுது; கிரிக்கெட் ரசிகனாக இருந்து கிரிக்கெட் போட்டிகளை பார்; கிரிக்கெட் பற்றி கதைகள் எழுது! வாழ்க்கையில் முன்னேறும் வழியைப்பார்.
- கொட்டும் அன்புடன், பிளாரன்ஸ்.