பயிர் சாகுபடியில் ரசாயன உரங்களின் செலவு மூன்றில் ஒரு பங்காக உள்ளது. எளிய தொழில் நுட்பங்களை கடைப்பிடித்து உரச்செலவை குறைக்கலாம்.
பயிரின் விளைச்சல் மற்றும் பயிர் எடுத்துக்கொள்ளும் சத்துக்களின் மூலம் உரங்களின் பயன் கணக்கிடப்படுகின்றது. தழைச்சத்தின் உபயோகத் திறன் 20 முதல் 40 சதவீதம், மணிச்சத்து 20 மற்றும் சாம்பல்சத்தின் உபயோகத்திறன் 60 சதவீதமாக உள்ளது. நுண்ணூட்ட சத்துகளின் உபயோகத்திறன் மிகவும் குறைவாக உள்ளது. இதில் துத்தநாகச் சத்து மட்டும் 10 சதவீதமாக உள்ளது.
பருவத்தில் பயிர் செய்தல், உயர் விளைச்சல் ரகங்களை தேர்வு செய்தல், சரியான பயிர் எண்ணிக்கையை பராமரித்தல், களைக் கட்டுப்பாட்டில் நவீன தொழில் நுட்பங்களை கடைப்பிடிப்பதன் மூலம் உர உபயோகத்திறனை அதிகப்படுத்தலாம்.
மிகுதியான தழைச்சத்து பயன்பாடு பூச்சி, நோய் தாக்குதல்களுக்கு வழிவகுக்கும். எனவே உரங்களை சரிவிகிதத்தில் பயன்படுத்துவது நல்ல பலனை தரும்.
தழைச்சத்து செயல் திறனை அதிகரிக்க தட்பவெப்ப நிலைக்கும், மண்ணுக்கும், பயிருக்கும் ஏற்ற உர வகைகளை தேர்ந்தெடுப்பது அவசியம். பாசன நெல்லுக்கு அம்மோனியம் சல்பேட், அம்மோனியம் குளோரைடு உரங்களை தேர்தெடுக்கலாம். நைட்ரேட் உரவகைகளை தவிர்க்க வேண்டும்.
களர் நிலங்களில் சோடியம் உப்புகள் அதிகம் உள்ளதால் கால்சியம் அம்மோனியம் நைட்ரேட் உரத்தை பயன்படுத்தினால் அதிக பலன் கிடைக்கும். கரிசல் நிலங்களில் அடியுரம் மட்டுமே இட வேண்டும். நெல் பாசன பயிருக்கு யூரியாவை ஜிப்சத்துடன் கலந்து இடுவதால் கரையும் திறனை குறைத்து உரம் வீணாவதை தவிர்க்கலாம்.
வேப்பம் புண்ணாக்குடன் கலந்தும் பயன்படுத்தலாம். மணிச்சத்து செயல்திறனை அதிகரிக்க களர், உவர் மற்றும் நடுத்தர கார அமில நிலை உள்ள சாதாரண மண்ணுக்கு சூப்பர் பாஸ்பேட், டி.ஏ.பி. உரங்களை இடலாம்.
களி அதிகமுள்ள நிலங்களுக்கு டி.ஏ.பி, மணற்சாரிக்கு சூப்பர் பாஸ்பேட் தூள் உரங்கள் கைகொடுக்கும். பாஸ்போ பாக்டீரியா உயிர் உரத்தை தனியாக இட வேண்டும். சுண்ணாம்பு வகை நிலத்திற்கு ராக் பாஸ்பேட் உரமிட்டால் பலன் கிடைக்கும்.
சாம்பல் சத்தின் செயல் திறனை அதிகரிக்க தழைச்சத்துடன் சாம்பல் சத்தை கலந்து விட வேண்டும். நுண்ணூட்டச் சத்து பற்றாக்குறையை கண்டறிந்து பொட்டாஷ் உரத்தின் உபயோகத்திறனை அதிகரிக்கலாம்.
மண் ஆய்வின் அடிப்படையில் பயிரின் தேவை, நிலத்தின் தன்மை அறிந்து தேவையான உரங்களை இடுதல், ரசாயன உரங்களை மட்டும் இடாமல் இயற்கை உரங்களை இட்டு ஒருங்கிணைந்த உர மேலாண்மை திட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும். இதன் மூலம் உர செலவை குறைத்து அதிக மகசூல் பெறலாம்.
-கண்ணையா
துணை இயக்குனர்
பரமக்குடி உழவர் பயிற்சி நிலையம், 82489 80944