முருகப்பெருமானின் அம்மா, பார்வதி தேவி. ஆனால், அவரை வளர்க்கும் பொறுப்பு கார்த்திகை பெண்களுக்கு தரப்பட்டது. இந்தப் பெண்கள் யார் தெரியுமா...
நிதர்த்தினி, அபரகேந்தி, மேகேந்தி, வர்தயேந்தி, அம்பா மற்றும் துலா ஆகியோர், சப்தரிஷிகளில் வசிஷ்டரை தவிர்த்த, மற்ற ரிஷிகளுக்கு, ஒரு பிறப்பில் துணைவியராக இருந்தவர்கள்.
இவர்கள் செய்த புண்ணிய பலன்களின் விளைவாக, சிவனின் நெற்றிக் கண்ணில் உருவான ஆறு பொறிகளில் இருந்து பிறந்த, ஆறு குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு அவர்களுடையது. இதை, அப்பெண்கள் சிறப்பாக செய்து முடித்தனர்.
இதன் பிறகு அந்த ஆறு பெண்களும், சிவனிடம், தங்களுக்கு, அஷ்டமாசித்தி எனப்படும் எட்டு வகை சக்திகளைத் தரும்படி வேண்டினர். அவர்களின் வேண்டுதலை ஏற்று, பயிற்சியைத் துவங்கினார், சிவன். ஆனால், அந்தப் பெண்கள் பாடத்தைக் கவனிக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
கோபமடைந்து அவர்களைக் கண்டித்தார், சிவன். அதன்பிறகு சற்று நேரம் ஒழுங்காகப் பாடம் கேட்ட பெண்கள், மீண்டும் வேடிக்கை பார்க்க துவங்கினர்.
சிவனின் கோபம் அதிகரித்து விட்டது.
'நான் எச்சரித்த பிறகும், கவனக்குறைவாக இருந்த நீங்கள், கல்லாய் மாறுங்கள்...' என, சபித்து விட்டார். அந்தப் பெண்கள் கல்லாக ஆயிரம் ஆண்டுகள், பூமியில் கிடந்தனர்.
தங்களுக்கு விமோசனம் அளிக்க, சிவனை வேண்டினர். சிவனும் மனமிரங்கி, அவர்களை ரோகிணி, பரணி, விசாகம், பூசம், கார்த்திகை மற்றும் உத்திரம் ஆகிய நட்சத்திரங்களாக மாற்றினார்.
இவற்றில், ரோகிணி, கிருஷ்ணனுக்குரியது. பரணி, சிவனுக்குரியது. கார்த்திகைக்கு முந்தைய நாளான இந்த நட்சத்திரத்தில், சிறிய தீப வடிவில் காட்சியளிப்பார், சிவன். இதை, பரணி தீபம் என்பர். கார்த்திகையன்று, மகா தீபமாக திருவண்ணாமலையில் ஒளிர்வார்.
விசாகத்தை, முருகன் அவதரித்த நட்சத்திரமாகவும், தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய தனக்குரிய விழா நாட்களை, தன் மகனுக்குரிய விழாவாகவும் எடுக்க, அங்கீகாரம் தந்தார்.
முருகனை வளர்த்த, இந்த வளர்ப்பு தாய்மார்களை அழகான சிற்ப வடிவில் தரிசிக்க, தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் இருந்து, 10 கி.மீ., துாரத்திலுள்ள பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலுக்கு சென்று வரலாம்.
மலைக்கோவிலான இங்கு, படியேற வசதியுண்டு. கார், ஆட்டோவிலும் செல்லலாம்.
தி. செல்லப்பா