மொய் பணத்தில், கள்ள நோட்டு!
சமீபத்தில், நெருங்கிய உறவினர் மகன் திருமணத்திற்கு சென்றிருந்தேன். திருமணத்தில், மொய் பணம் வாங்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார், உறவினர்.
ஒவ்வொருவரிடமும் பணத்தை வாங்கி, பெயர், ஊர், மொய் பணம் பெற்ற விபரத்தை, தனி நோட்டில் எழுதிக் கொண்டிருந்தேன்.
கூட்ட நெரிசலின்போது, சிலர், 2,000 ரூபாய் கொடுத்து, 500 ரூபாய் மொய் பணம் எடுத்துக் கொண்டு, மீதி தருமாறு வாங்கிச் சென்றனர். திருமணம் முடிந்த பின், ரூபாயை எண்ணி பார்த்தபோது, நோட்டில் எழுதிய படி சரியாக இருந்தது.
உறவினரிடத்தில் ஒப்படைத்தேன். நண்பர் வாங்கி, எண்ணிப்பார்த்தார். அதில், 2,000 நோட்டுகள் மூன்று மட்டும் வித்தியாசமாக இருந்ததால், சந்தேகத்துடன் புரட்டிப் பார்த்தோம். 'கம்ப்யூட்டரில் போட்டோ காபி' செய்து, 'பிரின்ட்' எடுக்கப்பட்டது என, தெரிய வந்தது. இதைப் பார்த்த நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.
ஒயின் ஷாப், பெட்ரோல் பங்க், ஜவுளி மற்றும் பெட்டி கடைகளில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டால், அவர்களிடம் இருக்கும் கருவி மூலம் கண்டுபிடித்து விடுவர் என்பதால், திருமண நிகழ்வுகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, புழக்கத்தில் விடுகின்றனர்.
எனவே, மொய் பணம் வாங்குவோர் ஜாக்கிரதையாக சரிபார்த்து வாங்கவும்.
- என். செல்வராஜ், வந்தவாசி.
நண்பரின் மனிதாபிமானம்!
நண்பரின் வீடு, நெடுஞ்சாலையை ஒட்டி, கடை வீதியில் இருக்கிறது. வீட்டின் எதிரில் இருந்த காலி இடத்தில், வாடகைக்கு விடுவதற்கென்று, மூன்று கடைகளை கட்டினார்.
அதிக வாடகை கொடுப்பதாக அணுகியவர்களை நிராகரித்து, மாற்றுத் திறனாளி, திருநங்கை மற்றும் கணவனை இழந்த பெண் ஒருவர் என, மூவருக்கும் தலா ஒரு கடையை, மிகக் குறைந்த வாடகைக்கு விட்டார்.
நண்பரின் மனிதாபிமான செயலால், மாற்றுத் திறனாளி நபர், பஞ்சர் ஒட்டும் கடையும்; திருநங்கை, பெட்டி கடையும்; கணவனை இழந்தவர், இட்லி கடையும் வைத்து நடத்தி வருகின்றனர்.
முதல் நாளிலிருந்தே மூவருடைய தொழிலும் நன்றாகவே நடக்கிறது. மூவரின் குடும்பமும், முந்தைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு, மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.
நண்பரிடம், இதுகுறித்து கேட்டதற்கு, 'பணத் தேவை என்பது, நம் வாழ்க்கையின் நிம்மதியை பறித்துக் கொள்வது; போதும் என்று மன நிறைவு அடையாதது.
'அப்படிப்பட்ட சுயநல மனதை வெல்ல வேண்டுமானால், வாழ வழியின்றி தவிக்கும் ஓரிருவருக்காவது, இயன்ற அளவில் உதவி செய்ய வேண்டும்; அதில் கிடைக்கும் நிம்மதியை பணம் தராது...' என்றார்.
நெகிழ்ந்து, பாராட்டினேன் நண்பரை!
- ஆர். ஜெயசங்கரன், வானுார்.
மேடை ஏறும் முன்...
என் அலுவலகத்தில் பணிபுரியும், சக பணியாளரின் திருமண விழா வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றிருந்தேன். மேடைக்கு சென்று, மணமக்களை வாழ்த்தி, பரிசு பொருட்களையும், மொய் கவரையும் கொடுத்த வண்ணம் இருந்தனர், விருந்தினர்கள்.
இந்த நிகழ்வை வரவேற்பு விழா அரங்கில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த, 'டிவி'யில், ஒளிபரப்பினர்.
மணமக்களுக்கு பரிசளிக்க சென்றிருந்த ஒரு பெண், மேடையில் நின்றபடியே, தன் உடையை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்.
மணமக்களுக்கு பரிசு பொருட்களை கொடுத்து, வாழ்த்திக் கொண்டிருந்த விருந்தினர்களை, படம் பிடித்து ஒளிபரப்பிய அந்த காணொளியில், இந்த பெண் உடையை சரி செய்யும் காட்சியும் பதிவாகி, ஒளிபரப்பானது.
'டிவி' பதிவை பார்த்துக் கொண்டிருந்த சிலர், இதை வக்கிரமாக ரசித்தாலும், இக்காட்சி பார்ப்போரை முகம் சுளிக்க வைக்கும் விதமாகவே அமைந்திருந்தது.
மணமக்களுக்கு வாழ்த்து சொல்வோர், மேடைக்கு செல்லும் முன்பே, தம் உடை ஒழுங்காக அமைந்துள்ளதா என்பதை சரி பார்த்து, பின் செல்வது உத்தமம். இலையேல், இதுபோன்ற நேரடி ஒளிபரப்புகள் நிகழ்ந்து, முகம் சுளிக்க வைக்கும். நமக்கும் தர்ம சங்கடமாக இருக்கும்.
— லோகநாயகி, கோவை.