தடம் தந்த தந்தை தமிழ்வாணன்! (15)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 நவ
2020
00:00

ரூ.15 காசோலையின் மூலம் பல பாடங்கள்!
அந்த அதிசயம் என்ன தெரியுமா?
'கல்கண்டு' இதழில், 'சிறுத்தைக்கு ஆபரேஷன்' என்ற தலைப்பில், லக்ஷ்மணன் என்ற பெயரில், என் முதல் படைப்பு வெளியாகியிருந்தது - சற்றும் குறைக்காமல், திருத்தப்படாமல்!
இமயத்தில் கொடி பதித்த சேரன் செங்குட்டுவனாக ஆனேன், நான். தலை கால் புரியவில்லை.
பள்ளி, கல்லுாரி மலர்களில், நம் வீட்டு அழைப்புகளில் நம் பெயரை அச்சு வடிவில் பார்த்தாலே, நமக்குக் கொஞ்ச நேரம் ஒன்றும் புரியாது...
1.58 லட்சம் பிரதிகளில் என் பெயர்! எம்பி எம்பிக் குதிக்கலாம் போல் இருந்தது எனக்கு.
அன்று, என் கண்ணில் பட்டவர்களெல்லாம் ரொம்பப் பாவம்...
'இந்தாங்க பாருங்க, படிங்க. 'கல்கண்டு' இதழில் என் கட்டுரை வந்திருக்கு. எப்படி இருக்குன்னு படிச்சு உடனே சொல்லுங்க...' என்று பாடாய்ப் படுத்தினேன்.
நானே திரும்பத் திரும்ப என் கட்டுரையைப் படித்தேன்.
'எவ்வளவு நல்லா எழுதியிருக்கோம்ல...' என்று, நானே பாராட்டிக் கொண்டேன்.
அடுத்த வாரம், இன்னுமோர் ஆச்சரியம் காத்திருந்தது. ஒரு கனமான கடிதக் கற்றையை என்னிடம் கொடுத்து, 'இந்த வாரம், என்னை விட உனக்குத்தான் நிறையக் கடிதம் வந்திருக்கு...' என்று, பூரிப்புடன் அப்பா கூறினார்.
அந்தப் புன்னகைப் பூரிப்பில், அவரது பெருமிதம் நன்கு வெளிப்பட்டது.
தன்னை விட மிஞ்சுபவர்களைப் பார்த்துப் பொறாமைப்படாதவர்கள், இந்தச் சமூகத்தில் இரு பிரிவினர் மட்டுமே. ஒருவர் அப்பா; மற்றவர் ஆசிரியர்.
கடிதங்களைப் படிக்கப் படிக்க, எனக்கு அழுகையே வந்து விட்டது. கண்களில் நீர் முட்டியதில், கடித எழுத்துக்கள் மங்கலாகத் தெரிய ஆரம்பித்தன. திரும்பத் திரும்பத் துடைத்துக் கொண்டேன். இந்தக் காட்சியை யார் பார்த்திருந்தாலும், 'ஏய்... என்னாச்சு உனக்கு?' என்று தான் கேட்டிருப்பர். மனதிற்குள் அப்படி ஒரு பூரிப்பு.
அப்பா, தன் கருத்தைச் சொல்லாமல் கடிதக் கற்றையை கொடுத்ததில், சில உண்மைகள் எனக்குள் பிடிபட்டன.
இவற்றுள் ஒன்றுதான் தலை துாக்கி நின்றது.
'உன் எழுத்தை சரிவர மதிப்பிடுவதில், என்னை விட, வாசகர்களே சிறந்த நீதிபதிகள்...' என்று, அவர் சொல்லாமல் சொல்லியிருந்தார்.
ஒரு கடிதம் கூட, எதிர்மறைக் கருத்தை வெளிப்படுத்தவில்லை. நெஞ்சைத் தொடும் சம்பவம் என்பதால், அனைவருக்கும் பிடித்துப் போயிருந்தது என நினைக்கிறேன்.
என் பின்னணியை அறியாமல், புது எழுத்தாளனை, வாசகர்கள் மனம் திறந்து பாராட்டிய விதம் இருக்கிறதே, இதை எளிதில் மறக்க முடியாது.
'நீ, நான் - ஏன்... நம் குடும்பமே சாப்பிடுகிற ஒவ்வொரு பருக்கைச் சோறும், வாசகர்கள் தந்தது. எனக்கு, எஸ்.ஏ.பி., என்பவர், தலைமை முதலாளி. நம் வாசகர்களும், என் அடுத்த முதலாளிகள்...' என்பார், அப்பா.
இப்படி அவரால் அவ்வப்போது வடித்துத் தரப்பட்ட கருத்துகள், எனக்கான வாழ்நாள் பாடங்கள். வாசகர்களை அண்ணாந்து பார்க்கும் பார்வையை எனக்குள் பதித்தவர், அப்பா தான்.
கடிதங்களை கொடுத்த அடுத்த வாரத்தில், மற்றுமொரு, 'சர்ப்ரைஸ்!'
ஆம்... 15 ரூபாய்க்கு ஒரு காசோலை! 'கல்கண்டு' இதழில் பெயரைப் பார்த்த மகிழ்ச்சி அடங்குமுன், கற்றைக் கடிதங்கள்! இது அடங்குமுன் மறுபடி பண மழை!
அந்தக் காலத்தில், ஒரு மாணவனுக்கு, 15 ரூபாய் என்பது, எவ்வளவு பெரிய தொகை தெரியுமா...
மாணவப் பணக்காரன் ஆகிவிட்டேன் என்று, உள்ளம் குதித்தது. அது சரி, காசோலையா... இதை வைத்து என்ன செய்வது; காசாகக் கொடுத்திருக்கக் கூடாதா?
தியாகராய நகர், பனகல் பூங்காவிற்கு எதிரே, நான் படித்த, ராமகிருஷ்ணா பள்ளியின் மிக அருகே, சிண்டிகேட் வங்கியின் கிளை இருந்தது. பள்ளியில் படிக்கும் இளம் வயதினரும் கணக்கைத் துவங்கலாம் என்கிற புதிய நடைமுறையை, இவ்வங்கிதான் முதலில் அறிமுகப்படுத்தியது.
பணம், என் புதுக் கணக்கில் ஏறுவேனா என்றது. தினமும் நடப்பேன். ஒருநாள் என் எதிர்பார்ப்பு நிறைவேறியது.
கையில் இருக்கும் ஒரணா, இரண்டணாவுக்கெல்லாம் மனம் பூரிக்கும், என் வகுப்புத் தோழர்கள் மத்தியில், 15 ரூபாய் என்பது, எவ்வளவு பெரிய காசு! அப்போதெல்லாம் உயர்ந்த திரையரங்கு இருக்கைக்கே, 1 ரூபாய் 66 காசு தான்.
'ஆகா... ஏழு சினிமா பார்க்கலாம்...' என்று தான், புத்தி போயிற்று!
ரீட்டா, சேமியா ஐஸ் குச்சிகளெல்லாம் கண்களுக்குள் தோன்றி, ஏகமாய் குதித்துத் தாளமிட்டபடி நடனமாடின.
'உழை - திறமை காட்டு - இன்னும் எழுது - சம்பாதி. என் துறைக்கு வா. உன்னைக் கை துாக்கி விட நான் இருக்கிறேன். உன் திருட்டு வேலைக்கு இனி இடமில்லை...' என்று, ஒரே காசோலையில் ஏகப்பட்ட பாடங்களை எனக்குள் புகுத்தியிருந்தார், அப்பா.
தமிழ்வாணனின் மகனாகப் பிறக்காதிருந்தால், மாணவப் பருவத்தில் தமிழகத்தின் முன்னணி இதழில், என் பெயர், எழுத்து இடம்பெற்றிருக்குமா!
'ஐயா இப்ப ரொம்ப, 'பேமஸ்' ஆயிட்டேன் தெரியுமா?' என்று நண்பர்கள் மத்தியில் காலரைத் துாக்கி விட்டுக் கொண்டேன்.
'போடா ஙொய்யால...' என்று, முதல், 'ராங்க்' மாணவர்களோ என்னை பார்க்க...
'நல்லா படிச்சு மார்க் வாங்காம, கடைசி பெஞ்சுல உட்கார்ந்துக்கிட்டு, 15 ரூபாய்க்கே இந்தத் திமிரா உனக்கு...' என்று சிலர் விமர்சிக்க...
'நம்ம பிரண்டுகிட்ட இனி நல்லா காசு புழங்கும். இனிமேல் இவனை விடக்கூடாது...' என்று ஒட்டிக்கொண்ட நண்பர்களும் உண்டு.
எழுத்தாளராக வேண்டும்; அப்பாவிற்குப் பிறகு அவரது பத்திரிகை இருக்கையில் அமர வேண்டும்; என் பாக்கெட் நிறைய காசு இருக்க வேண்டும் என்பது தான், என் நேக்கம்.
அடுத்த, 15 ரூபாய் காசோலை, என் கண் முன் உலா வர, என்ன தலைப்பில் எழுதலாம் என்று, மூலச் செய்தியை வெறித்தனமாய் தேட ஆரம்பித்தேன்.
அந்தமானின் ஜாரவா இனத்தவர், அந்நியர்களையோ, இந்தியர்களையோ கண்டால், விஷ அம்பு எய்து, கொன்று விடுவர் என்றும், இவர்கள் பிறந்த மேனியுடன் தான் வாழ்கின்றனர் என்றும், நான் கேள்விப்பட்டபோது, மிகவும் அதிசயமாகப் பட்டது.
இவர்களைப் பற்றிய செய்திகளைத் திரட்டி (திருடி?) எழுதினேன். அரைப் பக்கமே தேறியது.
அப்பாவைப் போலவே நானும், கன்னிமரா நுாலகத்திற்குப் போய் நிறைய கிளறினேன். திருப்திப்படும்படி செய்திகள் கிடைத்தன.
மாதம், 60 ரூபாய் ஈட்ட வேண்டும் என்பது, என் நோக்கம். ஆனால், அப்பாவின் எண்ணம் வேறாக இருந்தது.
ஒருநாள், அம்மாவிடம், 'லேனா இந்த வயதிலேயே, வாசகர்களை நன்கு நாடி பிடித்து எழுதுகிறான். என்ன எடுபடும், எப்படி எழுதினால் வாசகர்கள் படிப்பர் என்பது, அவனுக்கு பிடிபட்டு விட்டது. நடையும் நன்றாக இருக்கிறது.
'அவனது தமிழைத் திருத்திக் கொடுக்க, நீ இருக்கிறாய். ஆனால், ஏற்கனவே சுமாராகப் படிக்கிற அவனுக்கு இதிலெல்லாம் கவனம் திரும்பினால், இன்னும், சுமாராகி விடலாம். புகழ் போதை என்பது, மதுவை விட மோசமானது. எனவே, அவன், 'கல்கண்டு' இதழுக்கு எழுதுவதை நிறுத்தச் சொல்லலாம் என்று பார்க்கிறேன்...' என்றாராம், அப்பா.
என் பேனாவுக்கு, அப்பாவின் 144 தடையுத்தரவு வரப்போவது அறியாமல், அடுத்த கட்டுரைக்கென, ஜப்பானில், புல்லட் ரயில் அறிமுகமாகி ஓடிக்கொண்டிருந்தது பற்றிய செய்திகளை, அப்பாவியாய் சேகரிக்க ஆரம்பித்திருந்தேன்.

தமிழ்வாணனுக்கு எம்.ஜி.ஆர்., அனுப்பிய நோட்டீஸ்!
பத்திரிகைகளின் கடுமையான விமர்சனங்களை அதிகம் கண்டுகொள்ள மாட்டார், எம்.ஜி.ஆர்., எந்தப் பத்திரிகையாளர் மீதும் அவர் வழக்கு தொடர்ந்தது இல்லை. ஆனால், தமிழ்வாணன் மீது, இரண்டு லட்சம் ரூபாய் கேட்டு, நோட்டீஸ் அனுப்பினார்.
தமிழ்வாணன், இதற்கு விரிவான விளக்கம் தந்து, பதில் நோட்டீஸ் அனுப்ப, விஷயம் முடிவுக்கு வந்தது.

தொடரும்
லேனா தமிழ்வாணன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X