அந்துமணி பா.கே.ப., | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 நவ
2020
00:00

பா - கே
நண்பர் ஒருவர், புதுக் கார் வாங்கியிருந்தார். அதில் அழைத்துப் போக, என்னைக் காண வந்திருந்தார்.
அலுவலகத்திலிருந்து கீழே சென்று பார்த்தேன். கறுப்பு நிறத்தில்,
'டூ - டோர்' கார்; அனைவரையும் மயக்கி விடும் தோற்றத்தில் இருந்தது.
நண்பரிடம், 'இந்தக் கார் பெயர் என்ன?' எனக் கேட்டேன்.
'மசாலா ரொட்டி...' எனக் கூறினார்.
'என்ன... நம்ம திருவல்லிக்கேணியில் தயாரிக்க ஆரம்பித்து விட்டார்களா?' எனக் கேட்டேன்.
'அட போப்பா... கார் வாங்கியதும், சென்னையிலிருந்து சொந்த ஊர் திருச்சிக்கு சென்றேன். கார், 360 கி.மீ., வேகத்தில் போகும் என்றாலும், 70 கி.மீ., வேகத்தில் தான் சென்று கொண்டிருந்தேன்...
'பைக்கில் சென்றவர்கள் உட்பட, காரில் சென்றவர்கள் பலரும், என் காரை மடக்கி, 'சார்... என்ன கார் இது; இதன் பெயர் என்ன?' எனக் கேட்டனர்.
'எனக்கு சந்தோஷம் தாங்கவில்லை.இந்த காரின் பெயர், 'மசராட்டி' எனக் கூறினேன். 'என்ன சார், பாரின் காரின் பெயர், மசாலா ரொட்டியா...' எனக் கேட்டனர். அதன்பின், விளக்கம் கூறினேன்...
'விலை கேட்டதற்கு, 'கொஞ்சம் தான், 2.25 கோடி...' என்றேன். 'அடேங்கப்பா... இந்த விலைக்கு, நம்மூரில், 10 கார் வாங்கி விடலாம் போலிருக்கிறதே...' என, பல காரின் ஓனர்கள் கூறிச் சென்றனர்...' என்றார்.
'சரி நண்பா... நம்மூரில் ஓடும் வெளிநாட்டு கார்களை அந்நாட்டில் எப்படி அழைப்பர்...' எனக் கேட்டேன்.
அவர் கூறியதாவது...
'பலர், பலவிதமான கார்களை வாங்குவர். இரவு வேளைகளில், 'சர்... சர்...' என பறப்பர். இதில், வெளிநாட்டு கார் வாங்குவோரும் அடக்கம். அவை போகும்போது ஏற்படுத்தும் சத்தம், இனிமையாக இருக்கும். இப்படிப்பட்ட சில வெளிநாட்டு கார்களின் பெயர்களை, அந்நாட்டில் எப்படி உச்சரிக்கின்றனர் எனச் சொல்கிறேன்...' என்றவரே தொடர்ந்தார்:
லம்போர்கினி - லம்பெர்கினி;
ஆடி - ஓடி;
செவர்லெட் - ெஷவ்வுர்லே;
ஹூண்டாய் - ஹண்டே;
ரெனால்ட் - ரெனோ;
வோக்ஸ்வாகன் - போக்ஸ்வாகுன்;
மெர்சிடீஸ் பென்ஸ் -
மர் சீடஸ் பென்ட்ஸ்; போர்ஷே - போர்ஷா; பி.எம்.டபிள்யூ - பே.எம்.வே.,
'இப்படித்தான் உச்சரிப்பர்...' என்று முடித்தார்.
நான் நினைத்தேன்... அவரது காரை, 'மசாலா ரொட்டி' என அழைப்பதென்று!
நமது, 'மசாலா ரொட்டி'யோ, 'அட்லஸ்' ஆச்சே!


பல பெற்றோர்களுக்கு, தங்கள் மழலைகளின் பெருமை, ஊர் பூரா கொடி கட்டிப் பறக்க வேண்டும் என்ற பேராசை இருக்கிறது. குழந்தையின் கெட்டிக்காரத் தனத்தை விட, அதற்கு பயிற்சி கொடுத்த தங்கள் பெருமையே அவர்களுக்கு பெரிதாக தெரியும்.
உயர்நிலை பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, நானும் சில மாணவர்களும், சேலத்தில், தனி வீடு எடுத்து, தங்கி படித்தோம். எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டில், ஒரு கன்னட ராயர் மாமா குடும்பம் இருந்தது.
ராயர் மாமிக்கு, ஒன்றரை வயதில், அனந்து என்ற பேரன் இருந்தான். அவன் மீது, மாமிக்கு உயிர். ஒன்றரை வயதிலேயே அவன் உலக மகா அறிவாளியாக இருப்பதாக அவளுக்கு ஒரு பிரமை.
'ரூம் பசங்கள்' என்று அழைக்கப்பட்ட எங்களுக்கு, மாமியின் பேரக் குழந்தை மீது பிரியம். எனினும், அதனுடைய தகுதிக்கு மீறி, ராயர் மாமி புகழ்வதால் நடுநடுவே எரிச்சல் தோன்றும்.
மகாத்மா காந்தி, சுடப்பட்டு இறந்தபோது, ஊர் உலகமே அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது.
தன் பேரனுக்கு, 'காந்தி தாத்தா எல்லி?'
'செத்தோட்ரு...'
'ஏனு ஆயித்து?'
'டுப் டுப்...'
'எஷ்டு குண்டு ஆகினரு?'
'நாகு...'
எல்லாம், மாமி கொடுத்த பயிற்சி.
வீட்டுக்கு யார் வந்தாலும், பேரனை அழைத்து வைத்து, 'துளியூண்டு இருக்கானே இந்தப் பயல். உலக விஷயமெல்லாம் அத்துப்படி. காந்தி தாத்தா பற்றி கேட்கறேன் பாருங்க...' என்று சொல்லி, தன் கேள்விகளை அவன் மீது தொடுப்பாள், மாமி.
அவனும், சரியாக பதில் சொல்லுவான். (ஏற்கனவே மாமி உருவேற்றி வைத்திருக்கிறாளே!)
மாமியின் முதல் கேள்வி, 'காந்தி தாத்தா எல்லி?' என்பாள்.
'செத்தோட்ரு...' என்பான், பேரன்.
மாமியின் அடுத்த கேள்வி, 'ஏனு ஆயித்து?'
'டுப் டுப்...' என்பான்.
மாமியின் அடுத்த கேள்வி, 'எஷ்டு குண்டு ஆகினாரு?'
நான்கு விரல்களை காட்டி, 'நாகு...' என்பான்.
இது, தினசரி நடக்கும் நிகழ்வாக இருந்தது.
ஒருநாள் மாமி வீட்டுக்கு நிறைய விருந்தினர்கள் வந்திருந்தனர்.
'டேய்... இன்னிக்கு ஒரு வேடிக்கை பண்றேன் பாருங்க...' என்று நண்பர்களிடம் சொல்லி, பக்கத்து வீட்டுக்கு சென்றேன்.
பேரனிடம் மாமூல் கேள்விகளை வந்தவர்கள் எதிரில் மாமி கேட்க, அவனும் மாமூலமாக பதில் சொல்ல, வந்தவர்களும், குழந்தையை மாமூலாக மெச்சினர்.
'அனந்துவிடம் நான் கேட்கிறேன்...' என்று மாமியிடம் சொல்லி விட்டு, 'அனந்து... நின்ன தாத்தா எல்லி?' என்றேன்.
'செத்தோட்ரு...' என்றான். (கொட்டாப்புளியாட்டம் அவன் தாத்தா, பக்கத்திலேயே இருந்தார்.)
என் அடுத்த கேள்வி, 'மாடு எப்படி கத்தும்...'
'டுப் டுப்...' என்றான், பேரன் அனந்து.
மூன்றாவது கேள்வி, 'உங்க பாட்டி எத்தனை படி சாதம் சாப்பிடுவாள்...'
நாலு விரலை காட்டி, 'நாகு...' என்றான்.
மாமிக்கு என்னவோ மாதிரி ஆகிவிட்டது.
'பாவம்... குழந்தைக்கு துாக்கம் வந்து விட்டது...' என்று, உள்ளே துாக்கிச் சென்று விட்டாள்.
மறுநாள் முதல் காந்திஜி பற்றிய கேள்விகளை, பேரனிடம் கேட்பதில்லை, மாமி.
- 'அப்புசாமி - சீதா பாட்டி' புகழ்
ஜா.ரா.சுந்தரேசன் என்ற பாக்கியம் ராமசாமி எழுதிய, 'சிரிக்காத மனமும் சிரிக்கும்' என்ற நுாலில் படித்தது.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X