கே.கே. வெங்கடேசன், செங்கல்பட்டு: பள்ளி நாட்களில் ஆசிரியரிடம் அடி வாங்கிய அனுபவம் உண்டா?
இல்லை! மதிய நேர இடைவேளையின்போது, காவிரியில் நீச்சலடித்து விட்டு, வகுப்பிற்கு கால் மணி நேரம் தாமதமாக, ஈர ஜட்டி, டவுசரில் பட்டு சாட்சியம் காட்ட வகுப்பறைக்கு செல்வோம்! கூட வந்த நான்கு பேரை முட்டிக் கரணம் போட செய்வார் ஆசிரியர்; என்னை உள்ளே அனுப்பி விடுவார்!
ஆர். கிருத்திக்குமார், நெய்வேலி: மீண்டும் வன்னியர் இட ஒதுக்கீட்டை கையில் எடுக்கிறாரே ராமதாஸ்... ஏன்?
வன்னியர் சமுதாய ஓட்டை முழுமையாக கவர வேண்டும் என்ற நப்பாசையில் தான்! அது நடக்காது; அவரது மகனின், துணை முதல்வர் கனவும் பலிக்காது!
கே.கே. பாலசுப்பிரமணியன், கோவை: குஷ்புவின் வேல் யாத்திரையால், தமிழகத்தில் பா.ஜ., வலுப்பெறுமா?
வேல் யாத்திரைக்கு செல்லும்போது, அவரது கார், 'ஆக்சிடென்ட்'டில் மாட்டிக் கொண்டது தான் மிச்சம்!
இதனால், எல்லாம் தமிழகத்தில் பா.ஜ., வளராது!
*கே. வேலுச்சாமி, தாராபுரம்: 'கட்சிகள் பதிவு செய்ய, அந்தக் கட்சிக்கு குறைந்தபட்சம், 25 ஆயிரம் உறுப்பினர்களாவது இருக்க வேண்டும்...' என்று, உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதே!
இதையே, ஒரு லட்சம் என்று சொல்லியிருந்தால், சந்தோஷப்பட்டு இருக்கலாம்!
ஆர். கோபால்ஜி, வேலுார்: மனிதன் எப்போது அழுகிறான்; சிரிக்கிறான்?
அவனின் மூளை அசந்து கிடக்கும்போது, அழுகிறான்... அதுவே சுறுசுறுப்பாக இருக்கும்போது, இரண்டாவது நடக்கிறது!
ர. உமாராணி, சென்னை: நேர்மையான அரசு அதிகாரியான சகாயம், ஐ.ஏ.எஸ்.,சின், பதவிக் காலம் 2022 வரை இருந்தும், விருப்ப ஓய்வு கொடுத்துள்ளாரே...
'முடியலடி கோமளம்' என, ஒரு சொலவடை உண்டு! அந்த நிலைக்கு ஆளாகி விட்டார், சகாயம். லஞ்ச ஊழல் அரசியல்வாதிகளிடமும், உடன் பணியாற்றும் அதே போன்ற அதிகாரிகளுடனும் இனி பணிபுரிய முடியாது என்பதை உணர்ந்து விட்டார்.
அதனால் தான், இந்த முடிவு!
* தி.சே. அறிவழகன், உத்திரமேரூர்: தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை, மத்திய - மாநில அரசுகள் கண்டுகொள்வதில்லையே... இது ஏன்?
நமது மீனவர்கள் எல்லை மீறுகின்றனர். அவர்களது எல்லைக்குள் சென்று மீன் பிடிக்கின்றனர். நம்மிடம் தவறு இருக்கும்போது, அரசுகள் எப்படி கண்டுகொள்ளும்!