மாலை நேர நீல வானத்தை மெல்ல இருள் சூழ்ந்திருந்தது. மணி, 6:00ஐ கடந்த நிலையில், ஈசான மூலையில் எங்கேயோ வெகுதுாரத்தில் பளிச்சென்று மின்னல். வானம் உருட்டிய இடியோசை, செவிகளுக்கு எட்டியது. மழை நாயகனுக்கு முன்னதாகவே வந்தது ஒரு அதிவேக புழுதிக் காற்று.
மின் வெட்டு ஏற்படும் என்பதை முன்னமே அறிந்திருந்த தீர்க்கதரிசி போல, வீட்டுச் சுவரின் மாடத்திலிருந்த விளக்கிற்கு எண்ணெய் வார்த்துக் கொண்டிருந்தாள், செல்லம்மாள். ஆனால், அவள் பணியை முடிக்கும் முன்பே, மின் வெட்டு தன் பணியை சிறப்பாக செய்து முடித்திருந்தது.
இப்போது ஊர் முழுவதும் கும்மிருட்டு.
''அடச் சே... பாழாப்போன கரன்ட்.''
வலப்பக்க மூலையில் அமர்ந்து வீட்டுப் பாடங்களை செய்து கொண்டிருந்த ஆனந்தன், கணக்கு பாடம் பாதியிலேயே தடைபட்டதை கண்டு, மின்வெட்டை கடிந்து கொண்டான்.
செல்லம்மாளின் செல்ல மகன், ஆனந்தன். பக்கத்தில் உள்ள அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான்.
'திரி முழுவதும் எரிந்து விட்டதே... வேறொரு திரியைத்தான் மாற்ற வேண்டும் போலிருக்கே...' என்று நினைத்த செல்லம்மாள், ''தம்பி, ஆனந்து... சாமி அலமாரியில் இருக்குற திரிய கொஞ்சம் எடுத்துக் கொடு, கண்ணு,'' என, மகனிடம் பாசத்தோடு கட்டளையிட்டாள்.
எள் என்றால் எண்ணெயுடன் வந்து நிற்பவன் போல, திரியுடன் தீப்பெட்டியையும் எடுத்து வந்து கொடுத்தான், ஆனந்தன்.
சற்று நேரத்தில், மாடத்து விளக்கு பிரகாசிக்கத் துவங்கியது.
விளக்கின் வெளிச்சத்தில், வீட்டு வேலைகளை கவனிக்கத் துவங்கினாள், செல்லம்மாள்; விடுபட்ட இடத்திலிருந்து கணக்கு பாடத்தை தொடர்ந்தான், ஆனந்தன்.
மணி, 7:00ஐ கடந்திருந்தது.
வீட்டு வேலைகளை ஓரளவு முடித்து, வாசலுக்கு நேராக இருந்த சுவரில் ஓய்வாக சாய்ந்திருந்தவள், மகள் ஆனந்தியின் வருகைக்காக காத்திருந்தாள்.
செல்லம்மாளின் மகள்; ஆனந்தனுக்கு மூத்தவள், ஆனந்தி. பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்து, பக்கத்து டவுனில் உள்ள கம்பெனியில், 'டைப்பிஸ்ட்'டாக வேலை பார்க்கிறாள்.
வழக்கமாக, 6:00 மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்து விடுபவள், இன்று, 7:00 மணி ஆகியும் இன்னும் வரவில்லை.
'வயசுக்கு வந்த பொம்பள புள்ளைய ஊட்டுல வச்சிருக்குறதும், மடியில நெருப்ப கட்டியிருக்கிறதும் ஒண்ணு தான். சீக்கிரம் மவளுக்கு திருமணத்த பண்ணுற வழிய பாரு...' என்று, அக்கம்பக்கத்து வீட்டார் மற்றும் உறவுகளின் பேச்சு, அவ்வப்போது செல்லம்மாளின் காதுகளில் விழுந்து கொண்டிருந்தன.
'திருமணம் தான் ஒரு பொண்ணோட வாழ்க்கையை தீர்மானிக்குமா... அவ வாழ்க்கையை அவதான் முடிவு செய்யணும். முதல்ல அவளுக்கு தேவை நல்ல படிப்பு. அப்புறம் நல்ல வேலை.
'சுயமரியாதையோட சொந்த கால்ல நிக்குற தன்னம்பிக்கையும், தைரியமும் பொண்ணுங்களுக்கு தேவை. நான் அப்படித்தான் என் பொண்ண வளர்த்துருக்கேன்...' என, தன் மகள் குறித்த பெருமிதம், செல்லம்மாளின் நெஞ்சு முழுக்க நிறைந்திருந்தது. என்றாலும், மணி, 8:00 ஆகியும், மகளின் வருகையை காணாத அவளது நெஞ்சு, பதைபதைக்கதான் செய்தது.
செல்லம்மாள் வைராக்கியக்காரி. இல்லையென்றால் புருஷனை பிரிந்து வந்த பிறகு, இரண்டு குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கியிருக்க முடியுமா என்ன?
செல்லம்மாளின் புருஷன் உயிரோடு தான் இருக்கிறான், வேறொருத்திக்கு புருஷனாக...
வாழ்க்கையில் எல்லாவற்றையும் புருஷனிடம் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று, கழுத்தை நீட்டி கனவுகளோடு வந்தவள். கால ஓட்டத்தில் அவனையே பகிர்ந்துகொள்ள நேரிடும் என்பதை, கனவிலும் கூட எண்ணிப் பார்க்கவில்லை.
இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்த பிறகும் கூட, தன் இச்சையை தீர்த்துக்கொள்ள முடியாதவனாக, வேறொரு கட்டில் துணையை தேடிக் கொண்டான், செல்லம்மாளின் புருஷன்.
குடிகாரனை கூட திருத்தி விடலாம். இன்னொருவளை வைத்துக் கொண்டவனை எப்படி திருத்துவது?
வாழ்க்கையில் எல்லாவற்றையும் விட்டுக் கொடுக்க தயாராக இருந்தாள். ஆனால், தன்மானத்தை இழந்து, தன் புருஷனை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை.
பொறுத்து பார்த்தாள். எதற்கும் பலன் இல்லை என்ற பின், கொண்டவன் கட்டிய தாலியை கழற்றி அவன் முகத்தில் வீசி வெளியேறியவள், இன்று வரையிலும் அந்த வீட்டு வாசலை மிதிக்கவே இல்லை.
புருஷனை விட்டு பிரிந்தபோது, ஆனந்திக்கு, 6 - 7 வயது இருக்கும். ஆனந்தனுக்கு இரண்டு வயது. கண்ணீரும், கம்பலையுமாக கை குழந்தையுடன், பிறந்த வீட்டுக்கு திரும்பினாள், செல்லம்மாள்.
ஆண்டுகள் கடந்தன.
தன் மகளின் வாழ்க்கை பறிபோனதை எண்ணியெண்ணியே கவலையில் படுத்த படுக்கையானார், செல்லம்மாளின் அப்பா.
சில மாதங்களில், அந்த படுக்கையும் காணாமல் போனது.
செல்லம்மாளின் அண்ணனுக்கு, அவள் மீது அலாதிப் பிரியம். ஆனால், 'நல்லதங்காளுக்கு ஒரு கெணறு கெடச்ச மாதிரி, உனக்கு, ஒரு குளமோ, குட்டையோ கெடைக்கலயா... இங்க வந்து எங்க உசுர எடுக்குற...' சாடைமாடையாக பேசிக்கொண்டிருந்த செல்லம்மாளின் அண்ணி, வெளிப்படையாகவே அவளை சாடத் துவங்கி விட்டாள்.
இனியும், பிறந்த வீட்டிற்கு பாரமாக இருக்க விரும்பாத செல்லம்மாள், தன் குழந்தைகளுடன் அந்த ஊரை விட்டே வெளியேறினாள்.
வெளியூருக்கு வந்தவள், தான் அணிந்திருந்த நகைகளை விற்று, வந்த சிறு தொகையில், ஒரு வாடகை வீட்டில் தங்கினாள். இன்று வரையிலும், அந்த வாடகை வீட்டில் தான், தன் பிள்ளைகளுடன் வாழ்க்கை நடத்தி வருகிறாள்.
வந்த புதிதில், பிழைப்பிற்காக ஒரு பஞ்சு நுாற்பாலையில் வேலை பார்த்தாள். இப்போது, தனியாக காய்கறி வியாபாரம். எப்படியும் தன் பிள்ளைகளை ஆளாக்கிப் பார்க்க வேண்டுமென்ற எண்ணத்தை மட்டுமே அவள் நெஞ்சு சுமந்து கொண்டிருந்தது.
மணி, 8:00ஐ கடந்தது.
ஆனந்தி, இன்னும் வரவேயில்லை; மின்சாரமும் தான்.
அடித்த காற்றில், மின் கம்பிகள் அறுந்து விழுந்திருப்பதாக அக்கம் பக்கத்தினர் பேசியது, செல்லம்மாளுக்கு கேட்டது.
நேரம் செல்லச் செல்ல, பயம் தொற்றிக் கொண்டது.
பக்கத்து தெருவில் தான், ஆனந்தியின் கம்பெனியில் வேலை பார்க்கும் காமாட்சியின் வீடு. அவளிடம் விசாரிக்க புறப்பட்டவள், ''ஆனந்து, வீட்ட பார்த்துக்கோ... நான் பக்கத்து தெரு வரைக்கும் போயிட்டு வந்துடறேன்,'' என்றாள்.
மழையில் நனையாமல் இருக்க, முந்தானையை முக்காடாக்கி சென்றவள், காமாட்சியின் வீட்டுக்கதவைத் தட்டினாள்.
''என்னக்கா... அதுவும் இந்த நேரத்துல?''
''ஆனந்தி, இன்னும் வீட்டுக்கு வரல கண்ணு. அதான் விசாரிச்சிட்டுப் போலாம்ன்னு வந்தேன்.''
''என்னக்கா சொல்ற... ஆனந்தி, 'ஆடிட்டிங் ஒர்க்'கா வங்கிக்கு போயிருந்தா... எங்க முதலாளியோட பையன் தான் கார்ல கூட்டிக்கிட்டு போனாரு... இன்னுமா வரல?''
காமாட்சி தந்த பதில், செல்லம்மாளைத் துாக்கிவாரிப் போட்டது.
''நீ பயப்படாம போக்கா... அவ, பத்திரமா வந்துருவா. நானும் விசாரிச்சுப் பாக்குறேன்.''
செல்லம்மாளுக்கு நம்பிக்கையூட்டி அனுப்பினாள், காமாட்சி.
தலைக்குப் போட்டிருந்த முக்காடு நழுவியது கூட தெரியாமல், மழையில் நனைந்தபடியே வீடு சேர்ந்தாள், செல்லம்மாள்.
''அம்மா ஏன் இவ்ளோ நேரம்... எங்க போயிருந்த... ஏன் அக்கா இன்னும் வரல?'' மகனின் விசாரிப்புகளை, அவள் காதில் போட்டுக் கொள்ளவில்லை.
''ஆனந்தி, வேலை பார்க்குற கம்பெனிக்கு போயி பார்க்கலாமா... இல்ல, அவுங்க முதலாளி வீட்டுக்குப் போயி பார்ப்போம். அது, இங்கிருந்து, ரொம்ப துாரமாச்சே... வேண்டாம்... போலீசுல தகவல் சொல்லீடுவோம்...'' செல்லம்மாளை தேற்றினான், ஆனந்தன்.
மணி, 9:00ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. மின்னல் கீற்றொளி, தெருக்களை படம் பிடித்துக் கொண்டிருந்தது. வீட்டு வாசலில், கருப்பும் வெள்ளையுமாக ஓர் உருவம்.
வந்திருப்பது, ஆனந்தி தான். கண்டுபிடித்து விட்டாள், செல்லம்மாள்.
''ஏன்கா இவ்ளோ நேரம்... பாரு, அம்மா பயந்து போயிடுச்சு.''
ஆனந்தியைப் பார்த்த பிறகு தான் செல்லம்மாளுக்கு உசுரே வந்தது. அவள் நெஞ்சுக்குள் இருந்து நீண்ட பெருமூச்சொன்று நாசித் துவாரங்களை எட்டிப் பார்த்தது.
''ஏண்டி இங்கயே நிக்குற... உள்ள வா,'' என, ஆனந்தியின் கையைப் பற்றி உள்ளே இழுத்தாள்.
முழுவதும் நனைந்திருந்தாள், ஆனந்தி.
அவளது குனிந்த தலையின் வகிட்டிலிருந்து மழைநீர் வடிந்து கொண்டிருந்தது; மழையிலும் அனலாய்க் கொதித்தது, ஆனந்தியின் உடம்பு.
''என்னாச்சு... உடம்பு இப்படி கொதிக்குதே?''
தன் புறங்கையை ஆனந்தியின் தொண்டைப் பகுதியில் வைத்ததும், ''ஸ்ஸ்ஸ்... ஆ...'' என்றாள்.
கழுத்தினோரம் கீறல்பட்ட இடத்தில், செல்லம்மாளின் விரல் பட்டதும், எரிச்சல் தாங்க முடியாமல் எதிர்வினையாற்றினாள், ஆனந்தி.
''என்னடியாச்சு... கேட்கிறேனில்ல...''
ஆனந்தியிடம் பதில் இல்லை. வார்த்தைகளை மென்று விழுங்கினாள்.
மழையில் நனைந்த ஆடை, அவள் உடம்போடு ஒட்டியிருந்தது. சில இடங்களில் கிழிந்திருந்ததை, செல்லம்மாவால் கண்டுபிடிக்க முடியவில்லை.
''சீக்கிரம் வாக்கா சாப்டலாம்... பசிக்குது,'' என்றான், ஆனந்தன்.
'கொலைப்பசியைத் தீர்த்துக்கொண்டவளுக்கு, வயிற்றுப்பசி ஒரு கேடா...' தனக்குள்ளே தன்னைத் திட்டிக்கொண்டாள், ஆனந்தி.
'கொலையா... எது கொலை... அது தற்காப்பு. நீ கத்தி எடுக்கலேன்னா, அவன், உன் கற்பை எடுத்திருப்பானே...
'கற்பா... எது கற்பு... என் எலும்புகளின் மீது போர்த்தப்பட்ட இந்த சதையா... இல்லை அந்தச் சதையின் மீது போர்த்தப்பட்ட தோலா?
'பிறகெதற்கு தடுத்தாய் அவனை... தடுப்பதற்கும், மறுப்பதற்கும் கற்பு தான் காரணமாக இருக்க வேண்டுமா... ஏன்... என் மனசு காரணமாக இருக்கக் கூடாதா... என்னை முழுவதுமாக ஒருத்தனுக்கே தரவேண்டும்.
'ஏன்... அந்த ஒருவன் இவனாக இருக்கக் கூடாதா... இவனா? ச்சே... நான் தேடுவது மனிதனை; மிருகத்தை அல்ல.
'அப்போ நீ செய்தது கொலை அல்ல, வேட்டை. ஆமாம், மிருக வேட்டை. அதை இப்படியும் சொல்லலாம்.
'எப்படி... வதம்...'
தனக்குத்தானே நடத்திக் கொண்டிருந்த வாதப் பிரதிவாதங்களை ஒரு வழியாக முடிவுக்குக் கொண்டு வந்தாள், ஆனந்தி.
''முதல்ல உள்ள வந்து தலைய துவட்டு,'' என்ற செல்லம்மாளின் குறுக்கீட்டில், மீண்டும் சுய நினைவுக்கு திரும்பினாள், ஆனந்தி.
உள்ளே வந்தவள், புழக்கடைப் பக்கம் சென்று, மழையில் கரைந்தது போக, கைகளில் ஒட்டியிருந்த மீத ரத்தக் கறையை
கழுவினாள்.
மறுநாள் காலை -
தெருக்களில் மழைநீர் தேங்கியிருந்தது. மின் கம்பங்களில் விளக்குகள் பிரகாசித்தன. மாடத்து விளக்கின் திரியை வழக்கம்போல, தீ தின்று முடித்திருந்தது.
துயில் கலைந்து, தன் இல்லக் கடமைகளை ஆற்றிக்கொண்டிருந்தாள், செல்லம்மாள்; கணக்குப் பாடத்தின் கடைசி கணக்கைப் போட்டுக் கொண்டிருந்தான், ஆனந்தன்; ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள், ஆனந்தி.
ஊருக்கு வெளியே டவுனுக்குப் போகும் நெடுஞ்சாலையின் பாலத்திற்கு கீழ், கேட்பாரற்று நின்றுகொண்டிருந்த காரிலிருந்து கத்தியால் குத்தப்பட்ட நிலையில், ஓர் இளைஞனின் சடலத்தை போலீசார்
மீட்டனர்.
ரா. சிலம்பரசன்
படிப்பு: எம்.ஏ., - பி.எட்., - எம்.பில்.,
(பிஎச்.டி.,) சேலம் பெரியார் பல்கலைக்கழக தமிழ் துறையில், முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர். இலக்கிய சொற்பொழிவாற்றி வருவதுடன், இலக்கிய அமைப்புகளை தொடங்கி, பணியாற்றி வருகிறார். மரபுக்கவிதை, கட்டுரை, சிறுகதைகள் மற்றும் குறுநாவலும் எழுதி உள்ளார்.