ஜெயலலிதா நினைவு நாள் டிச., 5
சோ நினைவு நாள் டிச., 7
செல்வி ஜெயலலிதா, 1966ல், 'பொம்மை' இதழுக்கு எழுதிய நட்சத்திரக் கடிதம்: பள்ளிக்கூடத்தில், ஆங்கிலத்திலும், சரித்திர பாடத்திலும் நான் புலி! சாதாரண புலியல்ல, 16 அடி வேங்கை. ஆம்... ஆங்கிலம் மற்றும் சரித்திரப்பாட மதிப்பெண்கள் ஒன்றையொன்று பாய்ந்து துரத்தும்.
'ஜெயாவா... அவதான்டி இங்கிலீஷில் பஸ்ட்...'
சரித்திர, ஆங்கிலப் பாட தேர்வு முடிவுகள் வரும்போது, இந்த வசனங்களை, பள்ளி வளாகத்தில் கேட்கலாம். மற்ற பாடங்களில், நான், 16 அடி வேங்கையல்ல; நல்ல மதிப்பெண் வாங்குவேன். மெட்ரிக் பரீட்சையில், பள்ளியிலேயே முதலாவதாக வந்தேன்.
என்னிடம் இயல்பாகவே அமைந்துள்ள குறும்புத்தனமும், படிப்பில் காட்டிய ஆர்வமும், பள்ளியிலே செல்லப் பிள்ளையாக்கி இருந்தன.
'ஜெயா... அடியே ஜெயா...' என்று, ஐந்து பேர், 'லல்லி லல்லி...' என்று, ஆறு பேர், 'ஜெய்...' என்று ஓரிருவர். ஆக, என்னை சுற்றி எப்போதும் ஒரு டஜன் பேர் இருப்பர்.
வகுப்பில் நுழையும்போதும், வெளியேறும்போதும், விளையாடும்போதும், ஒரு படையுடன் தான் செல்வேன். பாடம் சொல்லித் தருவதில் மட்டும் பிரசித்தி பெற்றதல்ல; நடனங்கள், நாடகங்கள், கதம்ப நிகழ்ச்சிகள் நடத்துவதிலும், தனி பெயர் உண்டு, எங்கள் பள்ளிக்கு. கதம்ப நிகழ்ச்சிகள் என்று வந்து விட்டால், நிச்சயம் அதில் நானும் இருப்பேன்.
'ஜெயா, இன்னிக்கு உன் ஆட்டம் பிரமாதம்...' என்ற நற்சான்றோடு தான், வீடு திரும்புவேன். அம்மா கட்டி அணைப்பார்; நிச்சயம் கன்னத்தில் ஒரு, 'இச்' கிடைக்கும்.
நடிகர் மற்றும் பத்திரிகையாளர் சோ, 1971ல், 'பேசும் படம்' இதழுக்கு எழுதிய, 'சுய விமர்சனம்' கட்டுரையிலிருந்து: நான் பார்த்த முதல் நாடகம், ஒய்.ஜி.பி., மற்றும் பட்டு இருவரும் நடத்தி வந்த, பெண் படுத்தும் பாடு. இதில், ஜெயலலிதாவின் அம்மா சந்தியாவும், சித்தி, வித்யாவதியும் நடித்திருந்தனர்.
அன்று, நண்பன் காத்தாயிகிட்டு என்னை நாடகத்திற்கு அழைத்து சென்றிருக்காவிட்டால், நாடக மேடைப் பக்கமே போயிருக்க மாட்டேன்; நாடக உலகமும் பிழைத்திருக்கும்.
அந்த நாடகம் என்னை கவர்ந்தது. 'நாமும் நாடகம் எழுதினால் என்ன...' என்று, ஒரு நாடகத்தை எழுதி, ஒய்.ஜி.பி., மற்றும் பட்டு இருவரிமுடம் கொடுத்து வந்தேன்.
சில நாட்களுக்கு பிறகு, 'நாடக பிரதி தொலைந்து விட்டது...' என்றனர்.
இரண்டாவதாக ஒன்று எழுதி கொடுத்தேன். அதையும் தொலைத்து விட்டனர். 'இனி, நாடகம் எழுத வேண்டாம்...' என்று இருந்து விட்டேன்.
விவேகானந்தா கல்லுாரியில், என் தம்பி ராஜகோபால் படித்து வந்தான்.
அப்போது, ஒவ்வொரு ஆண்டும் கல்லுாரிகளுக்கிடையில், நாடக போட்டி நடக்கும். அதில், விவேகானந்தா கல்லுாரியும் கலந்து கொண்டது. என் தம்பி ராஜகோபாலும், அவனுடைய நண்பர்கள் சிலரும் சேர்ந்து நாடக போட்டியில் கலந்துகொள்ள முடிவெடுத்தனர்.
என்னிடம், 'நாடகம் ஏதாவது இருக்குமா...' என்று, கேட்டான் தம்பி.
தொலைந்து போன நாடகத்தின் வசனங்கள் நன்றாக நினைவில் இருக்க, அதை எழுதிக் கொடுத்தேன்.
இன்ஜினியரிங் கல்லுாரி நடத்திய, அனைத்துக் கல்லுாரி நாடகப் போட்டியில், நான் எழுதிய நாடகத்திற்கு முதல் பரிசு கிடைத்தது.
அதன்பின், நானும் ஒரு நாடக ஆசிரியனாக, உருவெடுத்தேன்.
நடுத்தெரு நாராயணன்