அஜீத்தின் வித்தியாசமான அடிமுறை!
வலிமை படத்தில், ஈஸ்வரமூர்த்தி ஐ.பி.எஸ்., வேடத்தில் நடிக்கும், அஜீத், இப்படத்தின், 'ஆக் ஷன்' காட்சிகளில், கூடுதல், 'ரிஸ்க்' எடுத்து, நடித்து வருகிறார். குறிப்பாக, இந்த படத்தில் நடிக்கும் போலீஸ் அதிகாரி வேடத்திற்காக, வழக்கமான சினிமா, 'ஸ்டைல்' சண்டைகளாக இல்லாமல், போலீஸ் அடிமுறைகளை வைத்து, ஒரு சண்டை காட்சியில் நடித்துள்ளார், அஜீத். இதற்காக, தன் நண்பரான, உயர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம், பயிற்சி எடுத்து, மாறுபட்ட, 'ஆக் ஷனை' வெளிப்படுத்தியுள்ளார்.
சினிமா பொன்னையா
அகோரியான, அமலாபால்!
ஆடை படத்திற்கு பிறகு, 'சோஷியல் மீடியா'வில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார், அமலாபால். நண்பர்களுடன் சேர்ந்து சரக்கடிப்பது, அவர்களுடன் இணைந்து நடனம் ஆடுவது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு அழிச்சாட்டியம் செய்து வந்தவர், தற்போது, அகோரியாக மாறியுள்ளார். அதாவது, கழுத்தில் ருத்ராட்ச மாலை, நெற்றியில் பிறை நிலா பொட்டு என, அகோரி, 'கெட் - அப்'பில், ஒற்றைக் காலில் நின்றபடி, 'போஸ்' கொடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, இன்னொரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் அச்சிலே வார்; ஆகாவிட்டால் மிடாவிலே வார்
எலீசா
தங்கையை கோதாவில் இறக்கி விட்ட, யாஷிகா ஆனந்த்!
'குத்து' நடிகையான, யாஷிகா ஆனந்த், தன் அடுத்த வாரிசாக, தங்கை ஓஷீனையும் சினிமா களத்தில் இறக்கி விட்டுள்ளார். மேலாடையை கழற்றியபடி, குட்டை டவுசரில் அவர் வெளியிட்டுள்ள, 'அட்ராசிட்டி' புகைப்படங்கள், கோலிவுட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை யாஷிகாவையே, 'செம ஹாட்' என்று, உச்சி கொட்டி வந்த, 'கமர்ஷியல்' இயக்குனர்கள், இப்போது ஓஷீனைப் பார்த்து, 'அக்காள், 8 அடி பாய்ந்தால், தங்கை ஓஷீன், 16 அடி பாய்வார் போலிருக்கு...' என்று சொல்லி, அவரைச் சுற்றி வட்டம் போடத் துவங்கி விட்டனர். 'யாஷிகாவின் மார்க்கெட்டை, தங்கையே காலி பண்ணி விடுவார் போலிருக்கு...' என்கின்றனர். ஆவது அஞ்சிலே தெரியும்; காய்ப்பது பிஞ்சிலே தெரியும்!
எலீசா
விட்டதை பிடித்த, கீர்த்தி சுரேஷ்!
அஜீத்தின், வேதாளம் படத்தில், தங்கை வேடத்தில் நடிக்க, கீர்த்தி சுரேஷிற்கு அழைப்பு விடுத்தபோது, 'அவருடன், 'டூயட்' பாட காத்திருக்கும் என்னை, தங்கையாக நடிக்க அழைப்பதா...' என்று கடுப்படித்தார். இப்போது அதே படம், தெலுங்கில், சிரஞ்சீவி நடிப்பில், 'ரீ - மேக்' ஆவதை அடுத்து, அப்படத்தில், லட்சுமிமேனன் நடித்த, தங்கை வேடத்தை கைப்பற்றி விட்டார். 'இப்போது மட்டும், தங்கை வேடத்தில் நடிப்பது ஏன்...' என்று கேள்வி எழுப்பியவர்களிடம், 'அந்த படத்தில், கதாநாயகி வேடத்தை விட, தங்கை வேடம் தான், 'வெயிட்' ஆனது என்ற உண்மையை, வேதாளம் படம் வெளிவந்த பிறகு தான் தெரிந்து கொண்டேன். அதனால் தான், அப்போது விஷயம் தெரியாமல் விட்டதை, இப்போது பிடித்துக்கொண்டேன்...' என்று கூறியிருக்கிறார், கீர்த்தி சுரேஷ். ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திலே கண்!
எலீசா
ரகசியத்தை சொல்லும், விஜய் சேதுபதி!
ரஜினியுடன், பேட்ட, விஜயுடன், மாஸ்டர் ஆகிய படங்களில் வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதி, 'இந்த இரண்டு ஸ்டார் நடிகர்களிடமும் எந்தவித பந்தாவையும் நான் பார்த்ததில்லை. அதேபோல், 'ஸ்பாட்'டுக்கு வந்து விட்டால் அந்த கேரக்டரை தவிர, வேறு எதைப் பற்றியும் அவர்கள் சிந்திப்பதே இல்லை. அவர்களின் மிகப்பெரிய வெற்றியின் ரகசியம் இதுதான் என்பதை, நான் அப்போதுதான் புரிந்து கொண்டேன். மேலும், நானும், 'ஹீரோ'வாக நடிப்பதால், அவர்களின் படங்களில் எனக்கான இடத்தை முழுமையாக கொடுத்தனர். அதனால் ரஜினி, விஜயுடன் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை, எனக்கு ஏற்பட்டுள்ளது...' என்கிறார்.
சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
* தமிழ் சினிமாவில், பிரபல வில்லனாக இருந்த, செல்லம் நடிகர், மீண்டும் விட்ட இடத்தை பிடித்து விட, திரைமறைவில் முயற்சி எடுத்து வருகிறார். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன், டில்லியில், தமிழ் மாணவர்களுக்கு எதிராக, அவர் குரல் கொடுத்ததால், கோலிவுட்டில், செல்லம் நடிகருக்கு, பலத்த எதிர்ப்பு எழுந்தது. அது, இப்போது வரை நீடிக்கிறது. 'அவருக்கு, யாராவது பட வாய்ப்பு கொடுத்தால், போராட்டம் வெடிக்கும்...' என்று, சில தமிழ் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விளைவு, செல்லத்திற்கு வாய்ப்பு கொடுக்க தயாரான அபிமானிகள், 'எதற்கு வம்பு...' என்று, அவரை ஓரங்கட்டி வருகின்றனர். ஆக, மேற்படி வில்லனின் இனவெறி, இப்போது, அவரது சினிமா மார்க்கெட்டுக்கே இடையூறை ஏற்படுத்தி விட்டது.
* 'டேய் பிரகாஷ்... விஷயம் தெரிஞ்சவனாச்சேன்னு, ஊர் பஞ்சாயத்து நடக்கும்போது, அவ்வப்போது, உன்னோட யோசனையையும் கேட்பாரு, நாட்டாமை. 'கருத்து கந்தசாமி' மாதிரி, நீயும் ஏதாவது சொல்லி வைக்க, அது, பஞ்சாயத்தில் ஏற்றுக்கொள்ளப்படும். அதனால், நீ சொன்னதையெல்லாம், இந்த ஊர் கேட்கும்ன்னு, கற்பனை செஞ்சுகிட்ட...
* 'இப்ப, அடுத்த வீட்டு குடும்ப சண்டையில் தலையிட்டு, கருத்து சொல்றேன்னு, ஏதோ சொல்லப்போக, அது விவகாரமாயிடுச்சு... இனி, எது சொன்னாலும் இந்த ஊர் கேட்காது மவனே. வாயை மூடிட்டு, உன் வேலையை மட்டும் பார்த்துட்டு போனால் பிழைச்சுக்குவே...' என்று, 'அட்வைஸ்' செய்தான், நண்பன்.
சினி துளிகள்!
* கடந்த லோக்சபா தேர்தலின்போது, பெங்களூரு, மத்திய தொகுதியில், சுயேட்சையாக போட்டியிட்டு, தோல்வியடைந்த போதும், மீண்டும், எதிர்காலத்தில், அரசியலில் பெரிய அளவில் கோலோச்சப் போவதாக கூறி வருகிறார், பிரகாஷ்ராஜ்.
அவ்ளோதான்!