அன்புள்ள அம்மாவுக்கு —
எனக்கு வயது, 27. வங்கியில் பணிபுரிகிறேன். திருமணமாகி இரண்டு ஆண்டுகளாகிறது. ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. மனைவி, ஆசிரியை; வயது, 24. மிகவும் நல்லவள். எனக்கு ஒரு தங்கை, அவளுக்கும் திருமணமாகி விட்டது.
எங்கள் திருமணம், பெற்றோர் முடிவு செய்தது. நாங்கள், அப்பா, அம்மா, மாமியார், மாமனார் என, எல்லாரும் ஒரே வீட்டில் வாழ்கிறோம்.
என் மனைவி ஒரே மகள் என்பதால், அவளது பெற்றோரும் எங்களுடன் வாழ சம்மதித்தோம். எந்த பிரச்னையும் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தது, வாழ்க்கை. யார் கண் பட்டதோ, வந்தது வினை.
எனக்கு, 18 வயது இருக்கும்போது, எங்கள் வீட்டின் எதிரில், இரண்டு வயது மகளுடன், திருமணமான, 26 வயது பெண் வசித்தாள். அவள் கணவர், வெளிநாட்டில் பணிபுரிந்தார். இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை வந்து செல்வார். நான், அப்போது, கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன்.
தனியாக இருப்பதால் எங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் தோழமையுடன் பழகினாள். நானும், கடைக்கு செல்வது, வேண்டிய பொருட்கள் வாங்கி தருவது போன்ற உதவிகளை செய்தேன்.
வழக்கம் போல், ஒருநாள், அவள் வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது, திடீரென்று, 'ஐ லவ் யூ' என்று சொல்லி, என் கன்னத்தில் முத்தமிட்டாள்.
எனக்கு கோபம் வந்து, ஓங்கி அறைந்து விட்டேன். அன்றிலிருந்து அவள் வீட்டிற்கு போவதுமில்லை, பேசுவதுமில்லை.
'தெரியாமல் விளையாட்டிற்கு செய்து விட்டேன். என்னை மன்னித்து விடு...' என்று சொன்னாள்.
நடந்த சம்பவத்தை யாரிடமும் நான் சொல்லவில்லை. மூன்று மாதங்கள் அவளை தவிர்த்தேன்.
என் அம்மாவிடம், 'உங்க பையன் என்னிடம் பேச மாட்டேன்கிறான்; கடைக்கு போகணும்...' என்று சொல்லி, என்னை பேச வைத்து விட்டாள். வேறு வழியின்றி, அவளுடன் பேசினேன்.
ஒருநாள், எங்கள் வீட்டில் அனைவரும் வெளியில் சென்று விட்டனர். இதை அறிந்து, வீட்டிற்குள் வந்தவள், வாசற் கதவை அடைத்து, வேகமாக வந்து என்னை அணைத்து உதட்டில் முத்தமிட்டாள்.
வாலிப வயதிலிருந்த எனக்கு, அவள் அப்படி செய்ததும், செய்வதறியாது எங்களுக்குள் எல்லாம் நடந்து முடிந்து விட்டது.
இச்சம்பவத்தை காரணம் காட்டி மிரட்டி, பலமுறை என்னுடன் உடலுறவு கொண்டாள். மூன்று மாதத்திற்கு பின், அவள் கணவர் வெளிநாட்டிலிருந்து வந்து விட, கொஞ்ச நாளில் அவர்கள் வீட்டை காலி செய்து எங்கோ சென்று விட்டனர்.
நானும் அனைத்தையும், கெட்ட கனவாக மறந்து விட்டேன். எட்டு ஆண்டுகளுக்கு பின், என் பிறந்த நாளன்று, 'வாட்ஸ் ஆப்'பிற்கு, என் சிறு வயது புகைப்படத்துடன் வாழ்த்து செய்தி வந்தது. ஆனால், அந்த புகைப்படத்தை இதுவரை பார்த்ததே இல்லை.
எனவே, என் பெற்றோரிடம் காட்டி, 'இது எப்போ எடுத்த புகைப்படம்...' என்று கேட்டேன். அவர்களும் ஆச்சரியத்துடன், 'இது என்னடா புதுசா இருக்கு...' என்றனர்.
சந்தேகப்பட்டு, புகைப்படம் வந்த நம்பருக்கு போன் செய்தேன்.
'என்னை நினைவில் இருக்கிறதா... புகைப்படத்தில் இருப்பது, நீ இல்லை; அது, உன்னைப் போலவே இருக்கும் நம் குழந்தை. எட்டு வயது ஆகிறது. கணவர் இறந்து விட்டார். நானும், மகளும், உன் மகனும் தனியாக வாழ்கிறோம். எனக்கு நீ வேண்டும்...' என்று அழுதாள்.
'எனக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. குடும்பம் தான் எனக்கு முக்கியம்...' என்று, இணைப்பை துண்டித்தேன்.
ஒருநாள், மகனுடன் வங்கிக்கு வந்து விட்டாள். அவனை பார்த்து வியந்து போனேன். நான் சிறு வயதில் எப்படி இருந்தேனோ, அது போலவே இருந்தான்.
'என்னுடன் சேர்ந்து வாழ்; இல்லைன்னா, உன் குடும்பத்தாரிடம் நடந்ததை சொல்லி விடுவேன். டி.என்.ஏ., பரிசோதனை எடுப்பதற்கு கூட தயார். இவன், உனக்கு பிறந்த குழந்தை. என்னை மணந்து கொள்...' என்றாள்.
என் மனைவி பெற்றோரிடம் இதை சொன்னால், குடும்பத்தில் பெரிய பிரச்னை வெடிக்கும். எட்டு ஆண்டுகளுக்கு முன், ரெண்டுங் கெட்டான் வயதில் நான் செய்த தவறுக்காக, ஒவ்வொரு நாளும் இறைவனிடம் மன்னிப்பு கேட்டு வருகிறேன்.
திருமணத்திற்கு முன், மனைவிக்கு ஒருமுறை துரோகம் செய்து விட்டேன். இனிமேலாவது உண்மையாய் இருக்க விரும்புகிறேன். இப்போது, நான் என்ன செய்வது, நரக வேதனை அனுபவிக்கும் உங்கள் மகனுக்கு, நல்ல தீர்வு சொல்லுங்கள் அம்மா.
— இப்படிக்கு,
உங்கள் மகன்
அன்பு மகனுக்கு —
டீனேஜ் ஆணோ, பெண்ணோ தன்னை விட ஏழெட்டு வயது மூத்த ஆண், பெண்ணிடம் தாம்பத்யம் வைத்துக் கொண்டால், பெரும்பாலும் தவறு, வயதில் மூத்தோரிடம் தான் இருக்கும்.
உன் பிரச்னையை எடுத்துக்கொண்டால், தவறு, அந்த, 26 வயது பெண்ணிடம் தான். அவள் உன்னை பயன்படுத்தி, தன் இச்சையை தீர்த்துக் கொண்டாள். அவளுக்கு பல ஆண் நண்பர்கள் இருந்திருக்கக் கூடும்.
எட்டு ஆண்டுகளுக்கு பின், 'வாட்ஸ் - ஆப்'பில் ஒரு குழந்தை படம் அனுப்பி, 'அது உனக்கு பிறந்தது தான்...' என, அந்த பெண், உன் மீது குற்றம் சாட்டியிருக்கிறாள்; 'கணவன் இறந்து விட்டான், என்னை திருமணம் செய்து கொள்...' என, மிரட்டுகிறாள்.
இனி நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
1. உன் கைபேசி மற்றும் 'வாட்ஸ் - ஆப்' எண்ணை உடனே மாற்று. அவளுடன் எக்காரணத்தை முன்னிட்டும் பேசாதே.
2. உனக்கும், திருமணமான பெண்ணுக்கும் இருந்த தவறான உறவை, மனைவியிடம் கூறாதே.
3. 'வாட்ஸ் - ஆப்' குழந்தை, உன் சாயலில் இருக்கிறது என நம்பாதே. அது உன் கற்பனையுடன் கூடிய காட்சி பிழையாக இருக்கலாம்.
4. குற்ற உணர்ச்சியில் உழலாதே.
5. திருட்டு சோறு ருசிக்காது, செரிக்காது. இது ஒரு பாடம். எதிர்காலத்தில் பெண்கள் விஷயத்தில் மிக கவனமாய் இரு.
6. அந்த பெண், உன் மீது வழக்கு போட துணிய மாட்டாள். வெறுமனே மிரட்டி பார்க்கிறாள். மவுனமாக இருந்து விட்டால், ஆறு மாத காலத்தில் உன்னை விட்டு விலகி விடுவாள்.
7. உன் வங்கி பணியை வேறொரு கிளைக்கு மாற்று.
8. 'அவளுடன் தாம்பத்யம் வைத்துக் கொண்டதில் என்னுடைய தப்பும் இருக்கிறது. என் தப்புக்கு பிராயச்சித்தம் தேட விரும்புகிறேன்...' என, நீ நினைத்தாய் என்றால், அவளுடன் பேசு. டி.என்.ஏ., பரிசோதனை செய். உன் குழந்தை என்றால், நஷ்டஈடாக சில லட்சங்களை கொடுத்து விலகு. எக்காரணத்தை முன்னிட்டும், அவளை திருமணம் செய்து கொள்ள முடியாது என்பதை, உறுதிபட கூறி விடு.
9. 'அவளுடன் பேச விரும்பவில்லை. ஆனால், குழந்தை என்னுடையதுதானா என்பதை அறிய விரும்புகிறேன்...' என, நினைத்தாயானால், 'பிரைவேட் டிடக்டிவ்'வை அமர்த்து. அந்த சிறுவனின் தலைமுடி சாம்பிளை அவளின் அம்மாவுக்கு தெரியாமல் எடுத்து வர சொல். டி.என்.ஏ., பரிசோதனை செய். குழந்தை உன்னுடையது இல்லை என்றால், அவளை அலட்சியமாக புறம் தள்ளு. குழந்தை உன்னுடையது என்றால், பையன் கணக்கில் பணம் போடுவதாக பேரம் பேசு.
10. எக்காரணத்தை முன்னிட்டும் வன்முறையில் இறங்கி விடாதே. வன்முறை கொலை வரை கொண்டு போய் விட்டு விடும். 10 ஆண்டு ஜெயிலில் களி தின்பாய்.
மொத்தத்தில் குற்ற உணர்ச்சி தவிர்த்து, விவேகமாக செயல்பட்டு, இந்த அமில சோதனையில் வெற்றி பெறு மகனே!
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.