டைட்டானிக் காதல்... (13)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 நவ
2020
00:00

முன்கதை சுருக்கம்:
இரவுக்குள் ஊருக்கு செல்ல வேண்டும் என்பதால், ஏதாவது ஒரு கோவிலுக்கு போய் மாலை, திருநீறு வாங்கி கிளம்புவதாக சொல்கிறாள், ஜோதி. 'எங்கள் கோவிலுக்கே போகலாம்...' என, புவனா அழைக்க, மூவரும் அங்கு செல்கின்றனர். புவனா பெயரில் அர்ச்சனை செய்ய, சற்று கலங்கிய அவளது அப்பா, வேறு யாராவது இருக்கலாம் என, சமாதானமடைகிறார்-

கோவிலை பூட்டி, இடுப்பில் சாவிக் கொத்தை சொருகி, வீட்டிற்கு நடக்க ஆரம்பித்தார், குருமூர்த்தி சிவாச்சாரியார்.
மனது சங்கடப்பட்டுக் கொண்டே இருந்தது. ஆஞ்சநேயர் கோவிலை தாண்டியபோது, கை தானாக கூப்பிற்று.
'என்னப்பா சர்வேஸ்வரா...' என்று முணுமுணுத்தது.
எந்த கடவுளானாலும், எந்த கோவிலானாலும் அவருக்கு ஈஸ்வரன் தான். 'என்னப்பா ஈஸ்வரா, சர்வேஸ்வரா...' தவிர, வேறு பெயர் வாயில் வராது. அதே மாதிரி, லஷ்மி, சரஸ்வதி, துர்க்கை என, எந்த பெண் தெய்வமானாலும், அம்பாள் தான்.
ஆஞ்சநேயரிடம், 'காப்பாத்துப்பா... எந்த தப்பும் நடக்காம பார்த்துக்கோப்பா...' என்று வேண்டிக் கொண்டார்.
கார்த்திகேயன், ஜோதியுடன் கோவிலுக்கு புவனேஸ்வரி வந்தபோது, அவருக்கு ஒன்றும் தோன்றவில்லை. பின்னர், ஜோதி, அர்ச்சனைக்கு பேர் சொன்னபோது மட்டும் மனதிற்குள் முள் தைத்தது.
அதன்பின்பு, 'அந்தப் பெயரில் எத்தனை பேர் இல்லை...' என்று, தன்னை சமாதானபடுத்தி கொண்டாலும், இனம்புரியாத பயம் அவரை சூழ்ந்து கொண்டது.
'ஒருவேளை... அந்தப் பையன், பெயர் என்ன சொன்னாள்... ம்... கார்த்திகேயன். பார்க்க நன்றாக இருக்கிறான். அந்த உயரமும், நிறமும், எடுப்பான தோற்றமும்... முகத்தில் பணக்கார களை வேறு சொட்டுகிறது. ஆனால், நம் ஜாதி பையனில்லை என்பது, கூட வந்த பெண் பேச்சிலிருந்து தெரிகிறது.
'ஒருவேளை அந்தப் பெண், வெறுமனே கூட வந்ததோ... இவனுக்கு சொந்தமில்லையோ... இவன் பிராம்மணனாக இருந்தால்... சீ... என்ன இது... மனசு ஏன் இப்படி அலை பாய்கிறது... அடக்கு... அடங்கு...' என நினைத்தபடி, சட்டென்று லலிதா சகஸ்ரநாமம் சொல்ல ஆரம்பித்தார்.
கபாலீஸ்வரர் கோவிலின் கோபுர வாசலில் நின்று, செருப்பை கழற்றி கன்னத்தில் போட்டுக் கொண்டார்.
''என் அப்பா... ஈஸ்வரா... மானம், மரியாதையோடு என் உயிர் பிரியணும்,'' என்று, வேண்டிக் கொண்டார்.
'ஏன் இப்படி வேண்டிக் கொள்கிறோம்... என்றுமே இப்படியெல்லாம் நினைத்ததில்லையே... இன்று என்ன வந்தது...'
கபாலீஸ்வரர் கோவிலை கடந்து, பாரதிய வித்யா பவன், சிவசாமி கலாலயா பள்ளியெல்லாம் தாண்டி, சித்திர குளத்தின் அருகில் இடதுபுறம் திரும்பி, சோலையப்பன் தெருவை அடைந்தார். வீட்டின் படியேறும்போதே வந்து நின்றான், குமரேசன்.
''என்ன குமரேசா?''
''சாம்பசிவம்ன்னு ஒருத்தர் போன் பண்ணினார்ப்பா.''
''சாம்பசிவமா... எங்கிருந்து?''
''சொல்லலப்பா... வெள்ளிக்கிழமை சாயங்காலம் பொண்ணு பார்க்க வரேன்னார். முடிஞ்சா உங்களை போன் பண்ணச் சொன்னார்.''
குருமூர்த்தி சிவாச்சாரியாரின் முகம் மலர்ந்தது.
''நம்பர் குடுத்திருக்காரா?''
''குடுத்திருக்கார்ப்பா.''

முற்றத்தில் இறங்கி, கை, கால், முகம் கழுவி, மேல் துண்டால் துடைத்தபடி கூடத்திற்கு வந்தார்.
அதற்குள், மொபைல் போனும், சாம்பசிவத்தின் எண்கள் எழுதப்பட்ட காகிதத்துடன் வந்தான், குமரேசன்.
''இந்தாப்பா நம்பர்.''
வாங்கி பார்த்து, எண்களை அழுத்தினார்.
''நமஸ்காரம். குருமூர்த்தி சிவாச்சாரியார் பேசறேன்...''
குமரேசன் பார்த்துக் கொண்டிருக்க, சிவாச்சாரியார் எதிர்பக்க குரலை கேட்டுக் கொண்டிருந்தார். பின்னர், நிம்மதியான குரலில், ''ரொம்ப சந்தோஷம். எல்லாம் ஈஸ்வர சங்கல்பம். வெள்ளிக்கிழமை சாயரட்சைக்கு நான் கோவிலுக்கு போகல. வேற யாரையாவது ஏற்பாடு பண்ணிட்டு, உங்க வருகைக்காக காத்துண்டிருப்பேன்.
''பேஷா வாங்கோ... மூணு பேர் என்ன, 30 பேர் வந்தாக் கூட கூடத்துல இடமிருக்கு. அம்பாள் ஆசிர்வாதம்,'' என, கைபேசியை நிறுத்தி, குமரேசனை ஏறிட்டார்.
''அம்மாவை கூப்பிடு,'' என்றார்.
வந்து நின்ற மனைவியிடம், ''அன்னிக்கு, கோவில்ல ஒருத்தர் வந்து பேசினார்ன்னு சொல்லல?''
''ஆமா.''
''அவர் தான் போன் பண்ணினார். வெள்ளிக்கிழமை சாயங்காலம், புவனாவை பெண் பார்க்க வராளாம்.''
''அவளை, அன்னிக்கு ஆபீஸ் போக வேண்டாம்ன்னு சொல்லிடுங்கோ.''
''என்னிக்கும்மா...'' என்று கேட்டவாறு உள்ளே வந்தாள், புவனேஸ்வரி.
''வர்ற வெள்ளிக்கிழமைடீ.''
முற்றத்தில் கை, கால், முகம் கழுவிய புவனா, ''என்னம்மா விசேஷம்?'' என்று கேட்டாள்.
அந்த அம்மாள் வாய் திறக்கும் முன்பாக முந்திக்கொண்டார், குருமூர்த்தி.
''நீ உள்ள போய் உன் காரியத்தை பாரு, பர்வதம். நான், புவனாகிட்ட பேசிக்கிறேன்.''
குறிப்பறிந்து தாயுடன், குமரேசனும் உள்ளே போனான்.
''அவா, எந்த ஊரும்மா?'' என்று ஆரம்பித்தார், குருமூர்த்தி.
''எவாப்பா?''
''இன்னிக்கு உன் கூட கோவிலுக்கு வந்தாளே...''
''அவாளாப்பா... கம்பம், தேனி பக்கத்துல ஏதோ கிராமம்ப்பா.''
''அந்த பிள்ளையாண்டானுக்கும் அதே ஊரா?''
''ஆமாம்ப்பா.''
''அவா ரெண்டு பேரும் சொந்தமா?''
''ஆமாம்ப்பா... அத்தை பொண்ணு, மாமா பையன்.''
''திருமணம் பண்ணிக்க போறாளா?''
''திருமணமா?''
''அவா ரெண்டு பேரும்மா...''
''இல்லப்பா... அண்ணன், தங்கையா பழகறாங்கப்பா.''
''ஊர் கம்பம், தேனி பக்கம்ங்கிற... உனக்கு, எப்படிம்மா பழக்கம்?''
சட்டென்று அந்த கேள்வியில், அவள் இடறினாள்; கால் விநாடி தயங்கினாள்.
அந்த இடறலும், தயக்கமும் அவருக்கு திக்கென்றது. ஆனாலும், அமைதியாக அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.
''அதுவாப்பா... அது வந்து... அவர் என் கூட வேலை செய்யறார்ப்பா...''
''உன் மேலதிகாரியா... பார்த்தா நல்லவர்களாகத்தான் தெரியறா... இருந்தாலும், பார்த்து பழகும்மா... பெரிய இடம் மாதிரி தோணறது... தள்ளியே நில்லு.''
''ச... சரிப்பா.''
''நம்ம குடும்பம், நம்ம நிலமை, நம்ம கவுரவம்லாம் வேற... அவாளோடது வேற...''
''இப்ப எதுக்குப்பா இதெல்லாம் சொல்றீங்க?''
''எப்பவுமே சொல்லிண்டே தானேம்மா இருக்கேன். சரி, அம்மா சொன்ன மாதிரி வர்ற வெள்ளிக்கிழமை, 'லீவு' போட்டுடறியா?''
''எதுக்குப்பா?''
''உன்னை பொண்ணு பார்க்க வராம்மா.''
அவளுக்கு கலக்கம் ஏற்பட்டது. ஆனாலும், அமைதி காத்தாள்.
''நல்ல இடம்மா... குருக்கள் குடும்பம். பையன் கோவில் பார்த்துண்டே, சி.ஏ., பண்றானாம். திருவண்ணாமலை பக்கத்துல ஊரு. பரம்பரைக் கோவில். அப்பா
பேரு, சாம்பசிவம். பையன் பேரு, ராஜாராமன்.
''அப்பாவே தகதகன்னு நெருப்பு
மாதிரி இருக்கார். பையனும் அப்படித்தான் இருக்கணும். எல்லா வகையிலும்
உனக்கு பொருத்தமான இடமா
இருக்கும்ன்னு தோணறது... என்னம்மா சொல்ற?''
''வரட்டுமேப்பா... பார்க்கட்டும்... இதுல என்ன இருக்கு... இதெல்லாம் சம்பிரதாயம்தானேப்பா.''
அவர் முகம் பளீரிட்டது. 'அப்பாடா' என்றிருந்தது.
'ஒன்றுமே இல்லாததை, நாம்தான் பெரிது பண்ணி விட்டோமோ... பாவம், ஒன்றும் அறியாத குழந்தை... இவளை சந்தேகப்பட்டது தப்பு... ஈஸ்வரா, என்னை மன்னிச்சுடு...' என, மனதுக்குள்
வேண்டினார்.
''என்னப்பா, பேசாமல்
இருக்கீங்க?''
''இல்லம்மா... வெள்ளிக்கிழமை, 'லீவு' எடுத்துக்கறியா... நான் கூட சாயரட்ஷைக்கு போகப் போறதில்ல...''
''சாயங்காலம் தானே வரப்போறா... நான் ஆபீசிலிருந்து, 3:00 மணி வாக்குல வந்துடறேனே.''
''சரிம்மா,'' என்ற அவரது குரல் நிம்மதியுடனும், சந்தோஷத்துடனும் ஒலித்தது.
தொடரும்

இந்துமதி

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X