'வழி போக்கன்' என்ற அமைப்பில், மொத்தம், 20 - 30 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர்; இயல்பு வாழ்க்கையிலிருந்து சற்று விலகி, எதையோ தேடும் ஆர்வம் கொண்ட, இளைஞர் கூட்டம், அது.
மாதம் ஒரு கூட்டம் நடக்கும். பிரபலமாக இருக்கும் ஒருவரை, சிறப்பு விருந்தினராக வரவழைத்து கவுரவித்து, பரிசளிப்பர். பொருட் செலவு தான். ஆனால், ஒரு சந்தோஷம்.
கடைசியாக, சமூக சேவகர் ஒருவரை அழைத்து பேச வைத்தனர். அடுத்த கூட்டத்துக்கு யாரை அழைக்கலாம் என்று யோசிக்கும் போது, இயக்குனர் சசிதரனை முன் மொழிந்தான், சுந்தர்.
''சென்ற தலைமுறையில், சக்கைப்போடு போட்டு, சடாரென்று காணாமல் போனவர். அவரை, தற்செயலாக, 'காபி ஷாப்'பில் பார்த்ததும், திகைத்து போனேன். காரில் போய் நட்சத்திர ஓட்டலில் காபி குடிப்பவர். கை குலுக்கிப் பாராட்டி இருக்கிறேன். 'ஆட்டோகிராப்' கூட வாங்கியிருக்கிறேன்.
''சிறிது இடைவெளிக்குப் பிறகு, ரோடு ஓட்டலில் சாதாரணமாக பார்க்க, அதிர்ச்சி, குழப்பம். 'எங்கேயோ இருக்க வேண்டியவர்... ஏன் இப்படி, எதிர்பார்க்கலை சார்...' என்றேன்.
''சோக சிரிப்பொன்றை உதிர்த்து, 'என்னை வசதியான ஆளாக, வெற்றிகரமான இயக்குனராக இருந்த நேரத்தில் பார்த்த உங்களுக்கு, இப்போது பார்க்க அதிர்ச்சியாக தான் இருக்கும். ஆனால், நான் வெற்றி பெறும் முன், இதைவிட மோசமான நிலையில் இருந்தேன். ஆரம்ப கால வாழ்க்கை, விசித்திரமானது. ஏழு வயது வரை, வறுமைன்னா என்னவென்றே தெரியாது. எட்டாம் வயதின் துவக்கத்தில், பிளாட்பாரத்துக்கு தள்ளப்பட்டேன்...' என்றார், அவர்.
''மேற்கொண்டு பேசவிடாமல், 'இந்த கதையை, அப்படியே எங்கள் அமைப்பு நடத்தும் கூட்டத்துக்கு வந்து பகிர்ந்து கொள்ள முடியுமா...' என்றேன். 'கூட்டமா... இந்த கூட்டம், மேடை, விழாவில் எல்லாம் பங்கேற்று எத்தனையோ காலம் ஆகிவிட்டது. யாரும் கூப்பிடுவதும் இல்லை, நானும் போவதில்லை. அபூர்வமாக அழைப்பு வைக்கிறீர். எனக்கு விருப்பமில்லை, என்றாலும் வருகிறேன்...' என்றார்.
''உடனே நான், 'பெரிய மேடை, கூட்டம் எல்லாம் இல்லை. மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, 20 பேர் வட்டமாக உட்கார்ந்து கொள்வோம். விருந்தினர், ஒரு கலந்துரையாடல் போல் பங்கேற்கலாம். மனம் விட்டு பேசலாம். அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம். நல்லா இருக்கும் சார்...' என்று வற்புறுத்தினேன்.
''எனக்காக தலையசைத்தார். சினிமாக்காரர் தான். அவர் வாழ்க்கை, மேடும், பள்ளமும் நிறைந்தது. ஒரே நேரத்தில் வெற்றி, அடுத்த நொடியே தோல்வி. மகிழ்ச்சியும், அதிர்ச்சியும் அனுபவித்தவரிடமிருந்து, நம் சிந்தனைக்கு சிறு தீனி கிடைக்காமலா போகும்,'' என்றான், சுந்தர்.
குரல் ஓட்டெடுப்பில் ஆதரவு கிடைத்தது.
மாலை நேரம் -
கூட்டத்திற்கு ஆட்டோவில் அழைத்து வந்தனர். ஒரு வீட்டின் மொட்டை மாடியில் கூட்டம்.
கை தட்டி வரவேற்றனர். வணக்கம் சொன்னார். வட்டமாக அமர்ந்தனர். சிறு அறிமுகம், கொஞ்சம் பேச்சு. சலசலப்பு அடங்கியதும்...
தொண்டையை செருமியபடி இயக்குனர் சசிதரன் பேச ஆரம்பித்தார்...
''நான், செல்வந்தர் வீட்டில் பிறந்தவன். பெரிய பங்களா. அப்பா, தொழிலதிபர். மாதத்தில் சில நாட்கள் மட்டும் தான், அவரை வீட்டில் பார்க்க முடியும். மீதி நாட்கள், 'பிசினஸ் டூரிலே'யே இருப்பார். வீட்டில், அம்மா, நான், சகோதரன்.
''எங்கள் அனைவருக்கும் தனித்தனி கார். அவரவர் காரில் தான், பள்ளிக்கு போவது, வருவதும். ஏழு வயது வரை, என் பாதங்களை மண் மீது வைத்தது இல்லை. அத்தனை சொகுசு. ஒரு நாள், அப்பா இறந்து போனார்...''
'உச்' கொட்டினர்.
''அதிர்ச்சியில் அம்மாவும் சேர்ந்து போக... இமைக்கும் நேரத்தில், அனைத்து சொத்துகளும் கடன்காரர்கள் வாய்க்குள் போய்விட்டது. எல்லாம் சில தினங்களில் நடந்து விட்டது. அண்ணனையும், என்னையும் வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர், உறவுக்காரர்கள்.
''எனக்கு ஏனோ, அது பிடிக்கவில்லை. எனக்கு அடைக்கலம் கொடுக்க முன் வந்த வீட்டை விட்டு வெளியேறினேன். பிறகு, அந்த உறவினர் வீட்டிற்கு போகவில்லை.''
''அவர்கள், உங்களை சரியாக நடத்தவில்லையா, சார்,'' என்றார், ஒருவர்.
''நல்லவிதமாகதான் பார்த்து கொண்டனர். ஆனால், இன்னொரு வீட்டில் என்னால் பொருந்தி இருக்க முடியவில்லை.''
''அந்த வீட்டிலிருந்து வெளியேறி, வேறு எங்கு போனீர்கள்?''
''தெரிந்தவர் வீடு, நண்பர்கள் வீடு, வேறு எங்கும் போக தோணலை. நேராக, நடைபாதைக்கு வந்துட்டேன். போகிற இடத்தில் எல்லாம் பரிதாபமாக பார்த்தனர். அது, எனக்கு பிடிக்கலை. தனிமை தேவலாம்ன்னு தோணிச்சு.''
''சரி... சாப்பாட்டுக்கு என்ன பண்ணீங்க?''
''பகலில் வேலை கேட்டு அலைந்தேன். பல நாள் பட்டினி. 'பொடிப்பயலே உனக்கு என்ன தெரியும். ஓடிப்போ...' என்று, விரட்டுவர். ஒரு ஓட்டல் முன், நிறைய கார்கள் நிற்கும். காரை துடைத்து விட்டால், காசு கிடைக்குமே என்று தோன்றியது; செய்தேன்.
1 ரூபா, 2 ரூபா கிடைக்கும்.
''அதைக்கொண்டு ஒவ்வொரு வேளையும் இரண்டு இட்லி மட்டும் சாப்பிட்டேன். பொது கழிப்பறை, குளியல் அறையில் குளித்து, துவைத்து, ஈர உடையோடு தான், ஊர் சுற்றுவேன். 'பிட் நோட்டீஸ்' போடுவது, 'டீ கிளாஸ்' கழுவுவது, 'கர்ச்சிப்' விற்பதுன்னு, என் வாழ்க்கை வறுமையில் போச்சு.''
''இப்படி சிரமப்படறத விட, சொந்தக்காரங்க வீட்டிற்கே திரும்பி போயிருக்கலாமே... அவங்க உங்களை தேடலையா?''
''வந்து கூப்பிட்டாங்க. முடியாதுன்னு சொல்லிட்டேன். ஏன்னு இதுவரைக்கும் தெரியலை. ஏற்கனவே சொன்னது போல், மற்றவர் பரிதாபத்துக்கு ஆளாகக் கூடாது என்ற எண்ணமாக இருக்கலாம். மனசுக்குள்ள ஒரு நம்பிக்கை அல்லது ஆசைன்னு சொல்லலாம்.
''மீண்டும் வசதியான வாழ்க்கை எனக்கு கிடைக்கும். அதை நானே உருவாக்குவேன்; என்னைக்காவது ஒரு நாள், பெரிய ஆளா வந்துருவோம்ன்னு. ஆனால், எப்படி என்னன்னு அப்போ எனக்கு தெரியாது.''
''சின்ன வயசு, சாப்பாட்டுக்கு வழி இல்லை. 'கேர் ஆப் பிளாட்பார்ம்!' ஒரு ஆதரவும் இல்லாத நிலையில் உங்களுக்கு பயம்தானே வந்திருக்கணும். எப்படி ஆசைப்பட்டீங்க, பெரிய ஆளா வருவீங்கன்னு?''
''எனக்கு மட்டும் இல்லைங்க. எல்லாருக்குமே ஒரு கனவு, நம்பிக்கை இருக்கும். அதை லேசா எடுத்துக்காம, அதே நினைவா இருந்தால், ஒரு நாள் மேலே வந்துடலாம்.
''வாழ்க்கை அப்போ ஒரு குப்பையாக இருந்திச்சு. இதற்கிடையில் நான் எதையாவது வரைஞ்சுகிட்டும், கிறுக்கிகிட்டும் இருப்பேன். உள்ளே சின்ன சின்னதா கதைகள் ஓடும். அவைகளை குறிச்சு வச்சுக்குவேன். அங்கே, சினிமா பிரமுகர்கள் பலர் வந்து போய்க் கொண்டிருந்தனர்.
''அதில் ஒரு உதவி இயக்குனரிடம், நான் வரைந்திருந்த படங்கள் சிலவற்றை காட்டினேன். அவருக்கு அது பிடித்திருந்தது. ஒரு சினிமா கம்பெனிக்கு, என்னை அழைத்து போனார். என் ஓவியங்களை பார்த்தவர், புதிதாக ஆரம்பிக்கும் படத்திற்கு, ஒரு, 'டிசைன்' வரைய சொன்னார். வரைந்து கொடுத்தேன்.
''வித்தியாசமான அந்த படம், 'போஸ்டராக' வெளி வந்து, மிகுந்த வரவேற்பை கொடுத்ததும், அடுத்தடுத்த படங்களுக்கு, 'போஸ்டர் டிசைன்' செய்யும் வாய்ப்பு வந்தது.
''மனதில் கொஞ்சம் தைரியம், நம்பிக்கை வந்ததும், கதை சொல்ல ஆரம்பித்தேன். ஒரு தயாரிப்பாளர் கிடைச்சார். 'மினிமம் பட்ஜெட்'டில் சம்பளம் வாங்காமல் புதுமுகங்களை போட்டு, படம் முடித்து கொடுத்தேன். படம், 'சூப்பர் டூப்பர் ஹிட்!' வரிசையாக தயாரிப்பாளர்கள் வந்தனர்; கேட்ட சம்பளம் கொடுத்தனர்.
''இந்நிலையில், 'ரிஸ்க்' எடுத்து, சொந்தமாக ஒரு படம் செய்தேன். அது என்னை கோடீஸ்வரனாக்கியது. ஒரே காசோலையில், இழந்த எங்கள் வீட்டை திரும்ப வாங்கினேன். வீட்டின் முன், மூன்று கார்களை வாங்கி நிறுத்தினேன்.
''உறவினர் வீட்டில் இருந்த அண்ணனை, வீட்டிற்கு வரவழைச்சேன். கார், பங்களா, தோட்டம், நிலம் மற்றும் திருமணம், பேர், புகழ் எல்லாம் என் வாழ்க்கையில் வந்தது. அந்த பெரிய வெற்றிக்கு பிறகு பெரிய சறுக்கல். பரமபதத்தில், ஏணியில் உயர்ந்து, பாம்பின் வாயில் விழுந்து சறுக்கி, ஆரம்ப இடத்துக்கு வந்தாச்சு... அதாவது, 'கேர் ஆப் பிளாட்பார்ம்!' ஆனது.''
''தொடர் வெற்றியை கொடுத்து, உச்சிக்கு போன நீங்கள், தோல்வி அடைய என்ன காரணம்ன்னு நினைக்கறீங்க?''
''உயரத்துக்கு செல்வது சுலபம். அங்கேயே நிற்பது கடினம். உயரும்போது என்ன மன நிலையில் இருந்தோமோ, அதே மன நிலை எண்ணம் தொடர்ந்து இருக்க வேண்டும். ஆரம்பம் முதல், உச்சம் தொடும் வரை, என் மனதில் ஒரு தீ இருந்தது. அது, என்னை ஊக்கப்படுத்தி கடுமையாக போராட வைத்தது.
''மனதில் நம்பிக்கை, தொழில் மீது பற்று, சக மனிதர்கள் மீது மரியாதை உள்ளிட்ட நல் குணங்கள். அதனால், உழைப்பு பலன் கொடுத்தது; வெற்றி சுலபமானது. அதன் பிறகு, பரமபத பாம்பின் வாயில் விழுந்தேன். ஏணி மேல் ஏறிய நான், ஒரேயடியாக கீழே இறங்கி, காணாமல் போனேன்.''
''ஆனால், நீங்கள் வெற்றிகரமான இயக்குனராக இருந்தீர்கள். அடுத்தடுத்து வாய்ப்புகளும் இருந்தது. ஆனால்?''
''தலைக்கனம். வெற்றி, அது கொடுத்த களிப்பு தலைக்கு ஏறாத வரையில், ஒரு வேலைக்காரனாக நினைத்து, கிடைத்த வேலையை சிறப்பாக செய்ய வேண்டுமே என்ற, ஒற்றைக் குறிக்கோளுடன் செயல்பட்டேன். ஒரு நொடி, என் வெற்றிகளை கொண்டாட ஆரம்பித்ததும், என்னுள் அகங்காரம் வந்தது. அந்த அகங்காரம் பிறரை அலட்சியமாக பார்க்க வைத்தது.
''கையில் பணத்தை வைத்துக் கொண்டு, வரிசையாக காத்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்களை அலட்சியமாக பார்த்தேன். இவர்கள் தான் வாழ்க்கை கொடுத்த தெய்வங்கள் என்ற நினைப்பு போய், ஏதோ அவர்கள் என்னால் தான் உயர்ந்தனர்; என் தயவுக்காக காத்திருக்கின்றனர். நிற்கட்டும், திருப்பதியில் சாமி தரிசனம் அத்தனை சுலபத்தில் கிடைத்து விடுமா என்ன என்று கொக்கரித்து, காக்க வைத்து, அலட்சியப்படுத்தினேன்.
''அவர்கள் தொல்லையிலிருந்து விடபட வேண்டுமென்று, தோல்வி படங்களை சுருட்டிக் கொடுத்தேன். பலர், தலையில் துண்டு போட்டுக் கொள்ள, சிலர், கடன் தொல்லை தாங்காமல் துாக்கில் தொங்கினர். அந்த துன்பம் எல்லாம் திரண்டு வந்து, என்னை அழித்தது.
''சொந்த செலவில், ஒரு மெகா பட்ஜெட் படம் எடுத்து, கடனாளி ஆகி,
தலை மறைவானேன். இது சினிமா தொழிலுக்கு மட்டுமல்ல, எந்த தொழிலிலும் வளரும்போது இருக்கும் பணிவு, உயர்ந்த போதும் இருந்தால் நல்லது. மறந்தால், என் கதி தான்.
''என் பேச்சு உங்களுக்கு சுவாரஸ்யமாக இருக்காது தான். ஆனால், பயனுள்ளதாகவாவது இருக்கும் அல்லவா... எச்சரிக்கையாக இருங்கள்; பிறர் வாழ்வுக்கு ஆதரவாக இருங்கள்; அழிவுக்கு காரணமாக இருக்காதீர்கள்,'' என்று கூறிமுடித்து எழுந்தார், இயக்குனர் சசிதரன்.
பெரிய பாடத்தை சொல்லிக்
கொடுத்து, புறப்பட்ட அந்த கலைஞனை, கவுரமாக வழியனுப்ப தயாராயினர், அமைப்பினர்.
படுதலம் சுகுமாரன்