'சர்வ வல்லமை படைத்த தேவன் ஒரு பெண்ணின் கையில் அவனை ஒப்படைத்தான்' - பைபிள்.
அவ்வாறாக ஜூன் 12, 1955ல், 8ம் வகுப்பு வரை மட்டுமே பயின்ற தென்காசி, இலஞ்சியைச் சேர்ந்த சண்முகவடிவு கையில் பொறியியலாளர் தம்புராஜ் ஒப்படைக்கப்பட்டார்.
ஒரு ப்ளாஷ்பேக்
என்னோட 22 வயசுல சண்முக வடிவை எனக்கு திருமணம் செஞ்சு வைக்க முடிவு பண்ணினாரு எங்கப்பா. அவளோட அப்பா எம்.எல்.ஏ.,வா இருந்ததால எனக்கு தயக்கம். 'பெரிய இடத்து பொண்ணுங்க திமிரா இருப்பாங்க; அதனால எனக்கு இந்த பொண்ணு வேண்டாம்'னு அப்பாகிட்டே சொன்னேன்; அடுத்த வினாடி, என் கன்னத்துல ஒரு அறை! இதோ... 65 வருஷம் ஒண்ணா வாழ்ந்துட்டோம். இன்னைக்கு நினைச்சா, அப்பா என்னை அறைஞ்சதுல தப்பில்லைன்னு தோணுது!
நாடோடியின் காதல்
என் மனைவியை நான் 'பேபி'ன்னுதான் கூப்பிடுவேன். அவங்க அப்பாவுக்கு அடுத்ததா அப்படி கூப்பிடுற உரிமையை எனக்கு கொடுத்திருக்கா! 1955 - 1996, வேலை நிமித்தமா பல ஊர்களுக்கு இடம் மாறிட்டே இருந்தேன். நானும் என் பேபியும் இந்த 41 ஆண்டுகள்ல சந்திச்சுக்கிட்டது ரொம்பவே குறைவு; என் மாமனார் இறப்புக்கு கூட இரண்டுநாள் தாமதமாத்தான் வந்து சேர்ந்தேன்!
எதுக்காகவும், என் பேபி கோவிச்சுக்கிட்டதில்லை. இப்போ, எனக்கு 87 வயசு; அவளுக்கு 82; இன்னைக்கும் அவ துணி காயப்போட போனா துணியை வாங்கி கொடியில காயப்போட எனக்குத் தோணுது; எங்க உறவுல இன்னும் உயிர் இருக்கு!
இதுதான் எங்கள் உலகு
பணி ஓய்வுக்கு அப்புறம் என் பேபி பிறந்த ஊரான இலஞ்சியிலேயே தங்கிட்டேன். இங்கேதான் 'மூத்த குடிமக்கள் மன்றம்' அறிமுகமாச்சு. அதுல உறுப்பினராகி இப்போ தலைவரா இருக்குறேன். எங்க மன்றத்தோட உறுப்பினர்கள் ஊட்டச்சத்து குறைபாடோட இருக்குறது மனசை உறுத்திட்டே இருந்தது. மன்ற உறுப்பினர்கள் எல்லாருக்கும் காலை மற்றும் மதிய வேளைகள்ல சத்தான உணவை சமைச்சு அவங்க வீட்டுக்கே கொண்டு போய் கொடுக்கணும்னு முடிவு பண்ணினேன்.
ஆச்சு... 24 வருஷம். எங்க சொந்த நிலத்துல ஒரு சமையல் கூடம்; செலவை உறுப்பினர்கள் பிரிச்சுக்குறோம். இன்னைக்கு மன்றத்துல, என்னையும் என் பேபியையும் சேர்த்து 120 நபர்கள் இருக்குறோம்!
உங்க மனைவி மனதிலுள்ள ஒரு ரகசியம்?
எங்களுக்கு ஆறு ஆம்பளை பசங்க; பாசத்துல யாரையும் குறை சொல்ல முடியாது. ஆனாலும், ஒரு பொம்பளை புள்ள இருந்திருக்கலாம்னு பேபி மனசுல ஒரு எண்ணம்.
புன்னகைக்கிறார் தம்புராஜின் பேபி.