சமீபகாலமாக நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருவதாக கூறும் ராயல்கேர் மருத்துவமனை புற்றுநோய் நிபுணர் டாக்டர் சுஜித், சிறு அறிகுறி தோன்றினாலும் அலட்சியப்படுத்தாமல், பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறார்.
நுரையீரல் புற்றுநோயின் பாதிப்பு என்ன?
ஆண்களுக்கு வரும் முதல் 3 புற்றுநோய்களில், இதுவும் ஒன்றாகும். இந்தியாவில் உள்ள, 28 பி.பி.சி.ஆர்.,மக்கள் தொகை அடிப்படையிலான புற்றுநோய் பதிவேட்டில், 9 பதிவேடுகளில் நுரையீரல் புற்றுநோய், முதல் இடத்தில் உள்ளது. அதிலும், நகர்ப்புற மக்களிடையே நுரையீரல் புற்றுநோயின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சமீபகாலங்களில், பெண்களும் நுரையீரல் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நோயின் அறிகுறிகள் என்னென்ன?
புற்றுநோய் சுவாச பாதையில் இருக்கும்போது, வறட்டு இருமல், மூச்சு திணறலை ஏற்படுத்தும். சில நேரங்களில் நுரையீரலுக்குள், ஒரு சிறிய காற்று பாதையை முற்றிலும் தடுக்கக்கூடும். இதனால், நிமோனியா போன்ற அறிகுறிகள் இருக்கலாம். சில சமயங்களில் மார்பு அல்லது முதுகில் மந்தமான வலி ஏற்படுத்தலாம். முகத்தில் ஏற்படும் வீக்கம், இடைவிடாத இருமல், குரலில் மாற்றம் மற்றும் விழுங்குவதில் சிரமம் ஆகியவையும் இதன் அறிகுறிகள். இந்த அறிகுறிகள் இருந்தால், டாக்டரை அணுகுவது நல்லது.
நுரையீரல் புற்றுநோய், பொதுவாக எந்த கட்டத்தில் கண்டறியப்படுகிறது?
நோயாளிகள் தங்கள் அறிகுறிகளை கவனித்து, மருத்துவமனையை அணுகும்போது, இந்த நோய் வளர்ந்து நுரையீரலுக்கு அப்பால் பரவியிருக்கும். ஏனெனில், இந்த நோய் சிறியதாக இருக்கும்போது எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது. 1.5 முதல் 2.0 செ.மீ., அளவுக்கு வளர்ந்திருக்கும்போதே, ரத்த ஓட்டத்தின் மூலமாக, உடலின் பல பகுதிகளுக்கு பரவும் ஆற்றலை கொண்டது. பொதுவாக, கல்லீரல், எலும்பு, மூளை அல்லது கழுத்தில் நிண நீர்போன்ற தொலைதுார உறுப்புகளில், நோயின் அறிகுறிகளால் நுரையீரல் புற்றுநோய் கண்டறியப்படுகிறது.
இந்நோய் உருவாக ஏதேனும் குறிப்பிட்ட காரணி உள்ளதா?
பல காரணங்கள் உள்ளன. அவற்றில் புகையிலை முக்கியமானது. திரைச்சீலைகள், சோபா, பெட்ஷீட்கள் போன்ற பொருட்களில் புகை எச்சத்தை தொடுதல், கல்நார் துாசி, வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, போன்றவையும் காரணங்கள்.
இந்த நோய்க்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது?
அறுவை சிகிச்சை மூலம் நோய் அகற்றப்படுகிறது. கீமோதெரபி, கதிர் வீச்சு சிகிச்சை தேவைப்படும். சில காரணங்களால் அறுவை சிகிச்சை செய்ய முடியாவிட்டால், ஸ்டீரோயோடாக்டிக், ஆப்லேடிவ் ரேடியோ தெரபி அல்லது ஸ்டீரியோடாக்டிக் பாடி ரேடியோதெரபி ஆகியவற்றை பயன்படுத்தி, கதிர்வீச்சு சிகிச்சை செய்ய இயலும்.
சரி டாக்டர்...ஆரோக்கியமான வாழ்க்கைக்கு என்னதான் செய்வது?
இயற்கையான, சீரான உணவை உண்ண வேண்டும். போதுமான அளவு வெதுவெதுப்பான நீரை குடித்து வர வேண்டும். அனைத்து வயதினரும் தினமும், 20 நிமிடம் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடலில் ஏதேனும் அசாதாரணமான புதிய அறிகுறியை கண்டால், காத்திருக்காமல் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது. கெட்ட பழக்கங்கள், மன அழுத்தம், கோபம், எதிர்மறை உணர்ச்சிகளை தவிர்த்து வாழப்பழக வேண்டும்.
டாக்டர் சுஜித்
கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர்
ராயர்கேர் மருத்துவமனை
drtsujit@gmail.com