நமக்கு பல நண்பர்கள் இருந்தாலும், ஆத்மார்த்தமான நண்பர் என, ஒரே ஒருவர் தான் இருப்பார். அதுபோல, பொங்கல் நாயகனான சூரியனுக்கும், ஒரு நெருங்கிய நண்பர் இருக்கிறார்; அவர் தான் சந்திரன்.
எல்லா சிவாலயங்களிலும் கருவறைக்கு முன்புள்ள மகா மண்டபத்தில் நுழையும்போது, ஒருபுறம் சூரியனும், மறுபுறம் சந்திரனும் இருப்பர். ஆனால், இவர்கள் இருவரும் ஒரே சன்னிதியில் இணைந்து, காட்சி தருவதை தரிசிக்க வேண்டுமானால், கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலுக்கு செல்ல வேண்டும்.
மகாபாரதத்தில் ஒரு காட்சி: பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் போர் உறுதியாகி விட்டது. அக்காலத்தில் போருக்கு முன், நல்ல நாளில், ஒரு வீரரை களப்பலி கொடுப்பது வழக்கம்.
அதாவது, போர்க்களத்தில் அவர் வெட்டப்படுவார். இதற்காக, தலைசிறந்த ஜோதிடரை வைத்து, நல்ல நாள் பார்ப்பர். நல்ல நேரத்தில் களப்பலி கொடுக்கும் அரசர் தான், வெற்றி பெறுவார் என்பது நம்பிக்கை.
தங்கள் கவுரவத்தைப் பார்க்காமல், தங்கள் எதிரியும், பாண்டவர்களில் ஒருவனும், தலை சிறந்த ஜோதிடனுமான சகாதேவனை அணுகி, நல்ல நாள் பார்த்து தர வேண்டினர், கவுரவர்கள்.
தொழில் தர்மப்படி, எதிரியாக இருந்தாலும், தன்னிடம் ஒன்றைக் கேட்டால், அதை செய்து கொடுக்கும் நிலைமையில் இருந்த சகாதேவன், 'வருகிற அமாவாசையன்று களப்பலி கொடுங்கள். உங்களுக்கு வெற்றி உறுதி...' என, நாள் குறித்து கொடுத்து விட்டான்.
இதையறிந்த பாண்டவர்களின் மைத்துனர் கிருஷ்ணர், 'என்ன வேலை செய்தாய், சகாதேவா... எதிரிக்கு நாள் குறித்து கொடுக்கலாமா... நீ குறித்து கொடுத்த நாளில், அவர்கள் களப்பலி கொடுத்தால், வெற்றி அவர்களையல்லவா சேரும்...' என, கடிந்து கொண்டார்.
'கிருஷ்ணா... அவர்கள் ஜோதிடத்தை நம்புகின்றனர். நான் உன்னை நம்புகிறேன்...' என்று பதிலளித்தார், சகாதேவன்; மகிழ்ந்தார், கிருஷ்ணர்.
மிக தந்திரமாக, அமாவாசைக்கு முதல் நாளான சதுர்த்தசியன்றே, ஆற்றுக்கு சென்று தர்ப்பணம் கொடுத்தார்.
இதைக் கண்டு குழம்பிய, சூரிய - சந்திரர் இணைந்து வந்து, 'நாளை தானே அமாவாசை. இன்றே ஏன் தர்ப்பணம் கொடுக்கிறீர்கள்...' என, கேட்டனர்.
'சூரிய - சந்திரர் இணையும் நாள் தானே அமாவாசை. இப்போது இணைந்து தானே வந்திருக்கிறீர்கள். அதனால், இன்று தான் அமாவாசை என்பதை மறுக்க முடியுமா...' என கேட்க, அவர்கள் வாயடைத்து போயினர்.
இவ்வாறு, இருவரும் இணைந்து வந்த கோலத்தை, சிற்பி ஒருவர், சிலையாக வடித்துள்ளார். அதை கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலில், நாம் தரிசிக்க முடியும். இந்த தரிசனத்தால், பிதுர் சாபம் நீங்கும் என்பர்.
பொங்கல் கொண்டாடும் தை மாதத்தில், கும்பகோணம் சென்று, இக்காட்சியை தரிசித்து வாருங்கள்.
தி. செல்லப்பா