இது உங்கள் இடம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 ஜன
2021
00:00

தம்பியின் தன்மானம்!
லண்டனில் பணிபுரியும் தன் மகனுக்கு பெண் பார்க்க, அவனுடன் தோழியும், அவள் கணவரும் சென்றுள்ளனர்.
தோழியின் மகனுக்கு, பெண்ணை பிடித்து விட்டது. ஆனாலும், எதற்கோ தயங்கியுள்ளான்.
'பெண் படித்து, நல்ல வேலையில் உள்ளாள். திருமணத்தை சிறப்பாக செய்து, கேட்ட சீர் வரிசைகளையும் தர தயாராக இருக்கிறோம். அப்புறம் என்ன தயக்கம்?' என்று கூறியுள்ளார், பெண்ணின் அப்பா.
'உங்கள் மூத்த பெண்ணுக்கு திருமணமாகி, மூன்று ஆண்டுகள் ஆகியும், குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. அதுபோல், இந்த பெண்ணுக்கும் ஆகிவிடுமோ என்று யோசிக்கிறேன்...' என்றிருக்கிறார், மாப்பிள்ளை.
'லண்டனில் வேலை பார்த்தாலும், உங்களுக்கு நேர்மறை சிந்தனையே கிடையாது. சரியான சந்தேக பேர்வழி. உங்களுக்கு, எங்கள் அண்ணன் பெண்ணை தரமாட்டோம். திருமணமாகி உடனே குழந்தை பிறக்கவில்லை என்றால், இதையே குத்தி காட்டி பேசுவீர்கள்.
'உங்களை திருமணம் செய்து, எங்கள் பெண் நிம்மதியாக வாழ முடியாது. நாங்கள் வேறு இடம் பார்த்துக் கொள்கிறோம். கிளம்புங்கள்...' என்று கூறியுள்ளார், பெண்ணின் சித்தப்பா.
ஆடிப்போய் விட்டார், மாப்பிள்ளை.
தன் தம்பி கூறுவதில் உள்ள நியாயத்தை, பெண்ணின் அப்பாவும் ஆமோதித்துள்ளார்.
இதை என்னிடம் சொல்லி புலம்பினாள், தோழி.
வெளிநாட்டில் இருக்கிறோம். பெண் வீட்டார் நம்மை எதிர்த்து பேச மாட்டார்கள் என்ற தைரியத்தில், சற்றும் யோசிக்காமல் பேசும் மாப்பிள்ளைகளுக்கு, இது சரியான நெத்தியடி!
- இந்திராணி தங்கவேல், சென்னை.

எதிர்பாரா இடத்தில் அரிய நுால்கள்!
ஓசூரில் இருந்து சென்னைக்கு பேருந்தில் வந்தபோது, உணவுக்காக ஓர் இடத்தில் நிறுத்தினர். நெடுஞ்சாலைகளில் உணவுக்காக நிறுத்தப்படும் இடங்கள், கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும் என்பதால், அசுவராஸ்யமாக இறங்கிய எனக்கு, இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது.
டீக்கடை, ஹோட்டல், சினிமா பாடல் குறுந்தகடு கடை, நொறுக்குத் தீனி கடைகளுக்கு மத்தியில், புத்தக கடை இருந்தது.
இலக்கியம், அரசியல், சினிமா, ஆன்மிகம் என, பலதரப்பட்ட புதிய நுால்கள் விற்பனைக்கு இருந்தன. பழைய நுால்களும் குறைந்த விலையில் விற்கப்பட்டன.
வெகுநாள் தேடிய, தற்போது பதிப்பில் இல்லாத நுால்கள், எனக்கு கிடைத்தது. மேலும், பலரும் ஆர்வத்துடன் நுால்களை வாங்கினர்.
வாசிப்பு பழக்கம் குறைந்து வருகிறது என, வருந்தும் சூழலில், நெடுஞ்சாலை ஓரத்தில், நுால்கள் விற்பனை மகிழ்வளித்தது.
உணவகங்கள், தேநீர் கடைகள், சாலையோரக் கடைகள் போன்றவற்றில், பீடி, சிகரெட் விற்பனையை குறைத்து, புத்தகங்களை கொண்டு வந்தால், வாசிப்பு பரவலாகும்; அறிவார்ந்த சமூகம் உருவாகும் என, நினைத்தபடி பேருந்தில் ஏறினேன்.
சாய் ஜயந்த், சென்னை.

திருமண அழைப்பிதழில், 'போன்' எண் தேவையா?
சமீபத்தில், தோழியின் மகளுக்கு திருமணம் நடந்தது. சில வாரங்களிலேயே, கணவர் வீட்டில் ஏதோ பிரச்னை ஏற்பட்டு, பிறந்த வீட்டிற்கு வந்து விட்டாள்.
இதை கேள்விப்பட்ட நான், தோழியின் வீட்டுக்கு சென்று விசாரித்தேன்.
கணவர் வீட்டுக்கு, யாரோ ஒருவர் போன் செய்து, பெண்ணை பற்றி தவறாக பேசி இருக்கிறார். அதை உண்மை என நம்பிய அவரது வீட்டார், இங்கே அனுப்பி வைத்து விட்டதாக கூறினாள், தோழி.
அந்த மர்ம போன் எண்ணை, குறித்து எடுத்து வந்திருந்தாள், தோழியின் மகள்.
அந்த நபர் யார் என்று தெரிந்து கொள்ள, அந்த எண்ணுக்கு போன் செய்து, 'டாஸ்மாக்'கில் இருந்த அவனை மடக்கி பிடித்து விசாரித்தனர், தோழியின் உறவினர்கள்.
'சுண்டல் வாங்கிய போது, அழைப்பிதழின் பாதி பக்கம் இருந்தது. அதில் இருந்த, போன் எண்ணுக்கு, போன் செய்து, முழு போதையில் இருந்த நண்பன், பெண்ணைப் பற்றி, தவறாக சில வார்த்தைகளை பேசினான்...' என, உளறி கொட்டி இருக்கிறான், அந்த குடிகாரன்.
அவனை அடித்து உதைத்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர், உறவினர்கள்.
மணமகன் வீட்டாரிடம், போலீஸ் மூலம் விஷயத்தை கூறியுள்ளனர்.
'அவசரப்பட்டு உண்மை நிலையை தெரிந்து கொள்ளாமல், வாய்க்கு வந்தபடி பேசி விட்டோம்...' எனக் கூறி, மன்னிப்பு கேட்டு, தோழியின் மகளை அழைத்து சென்றனர், மாப்பிள்ளை வீட்டார்.
திருமண பத்திரிகையில் மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் போன் எண்களை அச்சிடுவது பெரிய தவறு என்பதை, அறிய வைத்தது, இச்சம்பவம்.
நண்பர்களே... போன் எண் தேவைபடுவோருக்கு மட்டும், தனிபட்ட முறையில் தாருங்கள். திருமண அழைப்பிதழில் அச்சிடுவதை, தவிர்த்து விடுங்கள்.
- அ. சாரதா, தர்மபுரி.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X