பா-கே
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நண்பர், அவர். பரம்பரை பரம்பரையாக விவசாயம் தான் முக்கிய தொழில். ராமசாமி அண்ணாச்சிக்கு மிகவும் வேண்டப்பட்டவர். அவர் மூலமாக தான் நானும், லென்ஸ் மாமாவும் பழக்கமானோம். திடீரென அவரிடமிருந்து போன் அழைப்பு...
'மணி... ஒரு முக்கியமான வேலையா சென்னை வந்திருக்கிறேன். இன்று, வந்த வேலை முடிந்து விடும். நாளை, சேலம் திரும்புகிறேன். இந்த புத்தாண்டுக்கு நீயும், லென்ஸ் மாமாவும் என் வீட்டுக்கு வரவேண்டும். நாளை தயாரா இருங்கள். நானே வந்து அழைத்துச் செல்கிறேன்...' என்று, அன்பு கட்டளையிட்டார்.
தகவல் அறிந்ததும், 'குஷி'யாகி விட்டார், மாமா.
'வெளியூர் சென்று, பல மாதங்கள் ஆச்சுப்பா... போலாம்பா...' என்றார்.
நண்பரது இல்லம், சேர்வராயன் மலையை ஒட்டி, இயற்கை சூழலில் அமைந்திருக்கும். இந்த மார்கழி குளிரை அனுபவிக்கும் ஆசை எனக்கு ஏற்படவே, 'சரி, மாமா... ஆசிரியரிடம் இப்போதே, 'பர்மிஷன்' வாங்கி விடுகிறேன்...' என்றேன்.
இரண்டு நாட்களுக்கு தேவையான, 'டிரஸ், ஸ்வெட்டர், மப்ளர்' ஆகியவற்றை எடுத்து, தயாராகி விட்டோம்.
டிச., 31, 2020, காலை, 9:00 மணி. மகேந்திரா தயாரிப்பு, 'தார்' ஜீப்பில், சரியான நேரத்துக்கு வந்து விட்டார், சேலம் நண்பர்.
நண்பர் வண்டி ஓட்ட, அவர் அருகில் மாமா அமர, பின் இருக்கையில் நான் உட்கார்ந்து கொண்டேன்.
வேலுார் தாண்டி, 'பை - பாசில்' ஆம்பூர் போகும் வழியில் வண்டியை திருப்பி தெரு ஓரம் இருந்த டீக்கடையில் நிறுத்தினார். சூடான டீ குடித்து, பயணத்தை தொடர்ந்தோம்.
'நல்லதாயிற்று, சரக்கு போடாமல், டீயோடு நிறுத்தினாரே மாமா...' என்று நினைத்துக் கொண்டேன்.
'மணி... பசிச்சா சொல்லு... ஓட்டலில் சாப்பிட்டுட்டு போவோம். இல்லையென்றால், ஊருக்கு சென்று சாப்பிடுவோம்...' என்றார், நண்பர்.
'நேரா வீட்டுக்கே சென்று விடலாம்...' என்று நான் கூற, எக்ஸ்பிரஸ் வேகத்தில் பறந்தது, வண்டி.
மாலை, 4:00 மணி அளவில் சேலம் அடைந்தோம்.
நண்பரது வீடு, பெரிய தோட்டத்துக்கு நடுவே, பிரமாண்டமாக இருந்தது. 'டிபிக்கல்' கிராமத்து பண்ணை இல்லம் போல காணப்பட்டது.
'ஜீப்' போய் நின்றதும், நாலு கால் பாய்ச்சலில், 'கொழு கொழு'வென கம்பீரமான, காங்கேயம் காளை, தன்னை பிடித்திருந்த பணியாளரை தள்ளி விட்டு, நண்பரை நோக்கி ஓடி வந்தது.
பயத்தில் நானும், மாமாவும் வண்டிக்குள்ளேயே அமர்ந்திருந்தோம்.
''டேய்... காளி... நில்லுடா... நில்லுடா...' என்று, பின்னாடியே ஓடி வந்தார், பணியாளர்.
நண்பர், அதன் மூக்கணாங்கயிறை பிடித்து, ஆறுதலாக முகத்தில் தடவி கொடுத்ததும் தான், நிதானத்துக்கு வந்தது, காளை.
'பிடிச்சு கட்டுடா... நான் அப்புறமா வர்றேன்...' என்று உத்தரவிட்டு, எங்களை உள்ளே அழைத்துச் சென்றார்.
'வாங்கண்ணா...' என்று வரவேற்றார், நண்பரின் மனைவி.
அன்புடன் நலம் விசாரித்து, மாடியில் எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு சென்றோம்.
'மணி, மாமா... வெந்நீர் தயாரா இருக்கு... குளிச்சுட்டு, சாப்பிட வாங்க...' என்று கூறி, கீழே இறங்கிச் சென்றார், நண்பர்.
சாப்பிட சென்றபோது, ஆரவாரமாக வரவேற்றார், ராமசாமி அண்ணாச்சி.
'அடடே... நீங்க எங்க இங்கே...' என்றேன்.
'நான் இல்லாமல், புத்தாண்டு கொண்டாட விடுவேனா... சரி... சரி... வாங்க சாப்பிடுவோம்...' என்றார்.
மாலை நேரமானதால், சூடாக அடை, சாம்பாரில் ஊற வைத்த மினி இட்லி, தயிர் வடை, தோசை, கார சட்னி என, பல வகைகள் அணி வகுத்திருந்தன.
பசியில் ஒரு பிடி பிடித்தோம்.
தோட்டத்தை சுற்றிப் பார்க்க அழைத்துச் சென்றார், நண்பர்.
'தொம்... தொம்...' என்று சத்தம் வர, திரும்பி பார்த்தேன். காளி தான். தோட்டத்தை சுற்றி ஓடிக்கொண்டிருந்தது.
ஓட்டப் பயிற்சி கொடுப்பதாக கூறினார், நண்பர்.
'எதற்கு?' என்றேன்.
'ஜல்லிக்கட்டு போட்டி வருதுல்ல... அதில கலந்துக்கத்தான். இரண்டு மாசத்துக்கு முன்பிருந்தே, ஓட்டப் பயிற்சி, நடை பயிற்சி, நீச்சல், மண்ணை குத்தி கிளறுதல் போன்ற பயிற்சிகளை அளிக்க ஆரம்பித்து விடுவோம்...
'சேலம் சுற்றுவட்டாரத்தில், இதுவரை நடந்த ஜல்லிக்கட்டில், என் காளி தோற்றதே இல்லை தெரியுமா...' என்றார்.
'இந்த காளைக்கு, என்ன உணவு கொடுப்பீங்க...' என்றேன்.
'வழக்கமான புல், வைக்கோல், புண்ணாக்கு தவிர, பொட்டுக்கடலை, பாதாம், முந்திரி மற்றும் பருத்திக்கொட்டை அரைத்து தருவோம். கடலை புண்ணாக்கை வேக வைத்து, கழுநீரில் கலந்து வைப்போம்.
'இது தவிர, என் காளி, பால்கோவா விரும்பி சாப்பிடுவான் என்பதால், அதையும் அவ்வப்போது தருவதுண்டு. பனியில் ஜலதோஷம் பிடிக்காமல் இருக்க, வெற்றிலையில் வெல்லம் சேர்த்து கொடுப்பதுண்டு...' என்றார், நண்பர்.
'அடேங்கப்பா... ராஜ உபசாரமா இல்ல இருக்கு...' என்றார், மாமா.
நேரம் ஆக ஆக, மாமாவுக்கு இருப்பு கொள்ளவில்லை. மொட்டை மாடிக்கு செல்வதும், அறைக்கு திரும்புவதுமாக இருந்தார்.
'ஏய்... லெஞ்சு... எதுக்கு இப்படி குட்டிப் போட்ட பூனையாய் உலாத்திட்டு இருக்கே. எல்லாம் தயாரா இருக்கு. நமக்கு வேண்டியதை எடுத்துட்டு வர்றேன்னு, போயிருக்கான். நீ கொஞ்சம் அமைதியா இரு...' என்றார், ராமசாமி அண்ணாச்சி.
அதேநேரம், கை நிறைய நொறுக்ஸ் வகைகள், 'டபுள் பிளாக்' ஒரு பாட்டில் எடுத்து வந்தார், நண்பர்.
'ஏங்க... அளவோடு நிறுத்திக்கங்க... உடம்புக்கு ஆகாது...' என்று, நண்பரை, அவரது மனைவி எச்சரித்து அனுப்பியது, காதில் விழுந்தது.
இவர்கள் தங்கள் வேலையில் மும்முரமாக, நான், மீண்டும் தோட்டத்தை சுற்றி பார்த்தேன்.
இரவு, புத்தாண்டை வரவேற்கும் விதத்தில், 'கேக்' வெட்டி, 'செம' விருந்தும் வைத்தார், நண்பர். காளிக்கும், 'கேக்' ஊட்டி விட்டார்.
சனிக்கிழமை அதிகாலை, 'தொம்... தொம்...' என்ற சத்தம் கேட்டு, விழித்தெழுந்தேன்.
லென்ஸ் மாமாவும், ராமசாமி அண்ணாச்சியும், கம்பளியை இழுத்து போர்த்தியபடி, அசந்து துாங்கிக் கொண்டிருந்தனர்.
'ஜெர்கின்' அணிந்து, தோட்டத்துக்கு வந்தேன். துாரத்தில் தெரிந்த மலை, பனி மூட்டத்துடன் ஓவியமாக தெரிந்தது.
இரவு பெய்த பனியில், மரம், செடிகளில், பனித் துளிகள் படர்ந்து, ரம்மியமாக காட்சியளித்தது.
காளியின் ஓட்டப் பயிற்சி முடிந்து, நீச்சல் பயிற்சி ஆரம்பமாயிற்று.
அதற்காக வெட்டப்பட்ட குளத்தில், நீர் நிறைந்திருக்க, துள்ளிக் குதித்து நீந்தியது, காளி. அடுத்து, மண்ணை குத்தி, கிளறி, வானத்தை நோக்கி வீசியெறிய, மண் நாலாபுறமும் சிதறியது.
ஒவ்வொரு முறை, கொம்பால் மண்ணை குத்தி, கிளறி வீசும்போதும், ஒரு குரல் கொடுத்து, பெருமையாக சுற்றியிருந்தவர்களை பார்த்தது. நண்பரும் அதற்கு சமமாக உற்சாக குரல் எழுப்பி, அதற்கு பயிற்சியளித்தது, வேடிக்கையாக இருந்தது.
'ஜல்லிக்கட்டுக்கு காளையை தயார் செய்வதில் இவ்வளவு சிரமம் உள்ளதா...' என்று நினைத்துக் கொண்டேன்.
டிபன் முடித்து, ஊர் திரும்ப கிளம்பினோம்.
'ஜல்லிக்கட்டுக்கு மறக்காம வந்துடுங்க... காளியின் ஆட்டத்தை பார்க்கலாம்...'
என்று கூறி, டிரைவரை, 'ஜீப்' எடுக்கச் சொல்லி, எங்களை வழியனுப்பி வைத்தார், நண்பர்.