''அந்த செவலக்கன்ற இங்கிட்டு எடுத்து வந்து கட்டு, சின்னா. கொஞ்ச நேரம் காலை வெயில் படட்டும்,'' என்ற வேங்கையம்மா, இரண்டு நாள் முன்பு, கன்று போட்டிருந்த லெட்சுமியையும் அதன் குட்டியையும் தடவிக் கொடுத்தாள்.
''இந்த கன்றோட நெத்தியில பாத்தியா, நாமம் போட்டாப்புல வெள்ளை கோடு, எம்புட்டு அழகா இருக்குது,'' என்றாள்.
உண்மையாகவே லெட்சுமியும், அதன் கன்றும் அவ்வளவு அழகு. உடல் முழுவதும் நல்ல வெள்ளை. நெற்றியில் மட்டும் கறுப்பு பொட்டு வைத்தது போல, ஒரு வட்டம் லெட்சுமிக்கு; அதன் குட்டிக்கு, நாமம் போட்டது போல கோடு.
நன்கு செழித்த புல்லையும், வைக்கோலையும் தின்று வளர்ந்தது; அது கொடுக்கும் பாலும், குடம் நிறையச் செய்யும்.
கன்று ஈன்றிருந்ததால், சீம்பாலை, தெருவில் இருப்பவர்களுக்கு, சின்னாவிடம் கொடுத்தனுப்பினாள், வேங்கையம்மா.
அந்தத் தெருவில் யார் வீட்டில் குழந்தை பிறந்தாலும், தினமும் காலை - மாலையென, ஒரு லிட்டர் பால் இங்கிருந்து போகும். குழந்தை பெற்ற பெண், மீண்டும் கணவன் வீடு போகும் வரை, இது தொடரும்.
ஜாதி, மதம் பார்க்காமல், வேங்கையம்மா வீட்டுப் பாலை குடிக்காமல், எந்த பிள்ளையும் வளர்ந்ததில்லை. இது, அவள் மாமியார் காலத்திலிருந்தே நடக்கும் நிகழ்ச்சி.
சீம்பாலை கொடுத்து விட்டு வந்த சின்னா, ஏதோ சொல்ல முற்பட்டு, வேலை செய்தபடி இருவர் இருப்பதை பார்த்ததும், புல்லுக்கட்டை பிரிக்க ஆரம்பித்தான்.
கைகளை கழுவி, தென்னை மர நிழலில் இருந்த கயிற்றுக் கட்டிலில் வந்தமர்ந்தாள், வேங்கையம்மா.
வேலைக்கார பெண் கொடுத்த காபியை வாங்கியபடி, ''பெரியய்யாவுக்கு காபி கொடுத்தியா, சின்னய்யா எந்திரிச்சிட்டாரா... காபியா, டீயான்னு கேட்டு கொடு,'' என்றவாறே, குடிக்க ஆரம்பித்தாள்.
துாரத்தில் வேலை செய்பவர்கள் இருப்பதை உறுதி செய்த, சின்னா, தலையில் கட்டியிருந்த முண்டாசை அவிழ்த்தவாறே, ''ஆத்தாகிட்ட ஒரு முக்கியமான சமாசாரம் சொல்லணும்,'' என்றான்.
அவனை நிமிர்ந்து பார்த்தாள், வேங்கையம்மா.
சின்னாவுக்கு, 50 வயது இருக்கும். வேங்கையம்மாவின் அப்பா வீட்டில் அனாதையாக வந்து சேர்ந்தவன். அவள் அப்பா இறந்ததும், வேங்கையம்மா வீட்டோடு தங்கி உழைத்தான். பெரியவர், சிறியவர் அனைவரும், சின்னா என்று தான் அழைப்பர்.
''சின்னா, என்ன விஷயம்?'' என்றாள்.
''ஆத்தா, நாஞ்சொல்றத நிதானமா, கோவப்படாம கேட்கணும்,'' என்றான்.
புருவங்கள் நெறிய, கண்கள் சுருங்க, ''முதல்ல விஷயத்தை கூறு சின்னா,'' என்று அடிக்குரலில் கூறினாள், வேங்கையம்மா.
''ஆத்தா... சின்னையாவும், நம் தெருவுல, மூணு வீடு தள்ளியிருக்கிற ராவுத்தர் பொண்ணும், சினேகமாக இருக்காங்களாம். அடிக்கடி ஒண்ணா வெளிய சுத்துறாங்களாம்,'' என்று, படபடப்போடு கூறினான்.
''யாரு, அந்த சைக்கிள் கடை வச்சிருக்காரே பாயி... அவரு மகளையா,'' என்று கர்ஜித்தாள்.
''ஆமாந்தாயி. அந்தப் பொண்ணு, நம் தம்பி படிக்கிற காலேஜில தான் படிக்குதாம்.''
வேங்கையம்மாளின் கண்கள், கோவைப் பழம் போல சிவந்தது.
''சின்னா, உனக்கு இது எப்படி தெரியும்?''
''இப்ப சீம்பால் கொடுக்க போனேன்ல, அப்ப என் பிரெண்டு சொன்னான் ஆத்தா. அதோடு, ராவுத்தர் வீட்டுலயும் இப்பத்தான் விஷயம் தெரியும் போலிருக்கு. அவுங்க சொந்தக்காரங்கள்லாம் வந்திருக்காங்களாம்.
''நாளைக்கு அவசர அவசரமா திருமணம் பண்ணி, ஊருக்கு அனுப்பப் போறாங்களாம். பள்ளிவாசல்ல இருந்தும் ஆளெல்லாம் நிறைய வந்திருக்காங்களாம்,'' என்றான், மூச்சு விடாமல்.
வேங்கையம்மா திருமணமாகி வந்தபோதும் சரி, இப்போதும் சரி, அந்த தெருவிலேயே மிக மரியாதைக்குரிய குடும்பமாக இருந்து வருகிறது. வந்தவர்களுக்கு இல்லையென்று கூறாமல், வாரிக்கொடுத்த பெருமை உடையது.
திருமணமாகி, ஐந்து ஆண்டுகள் தவம் இருந்து பிறந்தவன், சின்னையா என்ற வீரகேசவன். அடுத்ததாக, ஒரு பெண், சென்னையில் மருத்துவம் படிக்கிறாள்.
தன் மகனை எப்படியெல்லாம் கற்பனை பண்ணி வைத்திருந்தாள். தன்னிடம் எதையும் மறைக்க மாட்டான் என்ற எண்ணம், குழி தோண்டி புதைக்கப்பட்டதாக உணர்ந்தாள்.
''ஆத்தா,'' என்று சின்னா அழைத்தபோது, திடுக்கிட்டு நினைவடைந்தாள்.
என்ன செய்வதென்று தீர்மானித்து, எழுந்து கொல்லைப்புற வாசல் வழியாக பல அறைகளை கடந்து, மகனின் அறைக்கு போனாள்.
கூடத்தில் அமர்ந்திருந்த கணவர், வீரபத்ரய்யா, ''என்னாத்தா, இவ்வளவு வேகமா போற,'' என்றவாறே, அவரும் பரபரப்பாக எழுந்து வந்தார். கூடவே, சின்னாவும் ஓடி வந்தான்.
நவநாகரிகமாக அலங்கரிக்கப்பட்ட அறையின் நடுவே போட்டிருந்த கட்டிலில், குப்புறப் படுத்துக்கிடந்த வீரகேசவன், காலடி சத்தம் கேட்டு எழுந்தான்.
இரவு முழுதும் அழுதிருப்பான் போலும். முகமெல்லாம் வீங்கியிருந்தது. ஒரு நிமிடம் அவனையே உற்றுப் பார்க்க, அதை தாங்க முடியாமல், ''அம்மா...'' என்று அரற்றினான்.
பதறியபடி, ''என்ன வேங்கையம்மா, என்ன நடக்குது... சின்னையா என்னப்பா, ஏன் இப்படி அழுதிட்டிருக்கே,'' என்று கேட்டார், வீரபத்ரய்யா.
''கேட்குறார்ல்ல சொல்லுடா, இப்பவாவது வாயத் திறந்து சொல்லு. ஊருல இருக்குற பிரச்னைக்கெல்லாம் பஞ்சாயத்து பண்ணுவாரு. நம் வீட்டு பிரச்னை என்னான்னு கூட, தெரியாம நிக்கிறோமே... இப்பவாவது சொல்லு,'' என்று பெருங்குரலில் கத்தினாள்.
''அம்மா... என்னை மன்னிச்சுரும்மா... உங்ககிட்ட சொல்ல தைரியமில்லாமதாம்மா சொல்லல...'' என்று, முகத்தை மூடி அழுதான்.
அவன் அப்படி அழுவதை காணச் சகிக்காமல், மகனை நெருங்கி, தலையை தன்னோடு அணைத்துக் கொண்ட வீரபத்ரய்யா, ''எதுவானாலும் சொல்லுய்யா... ஏன் இப்படி அம்மா கோபமாயிருக்கா... நீயேன் இப்படி அழுவுற,'' என்றார்.
விஷயத்தை சின்னா கூற, மவுனமாக கண்ணீர் விட்டான், வீரகேசவன்.
வேங்கையம்மா, யதேச்சையாக டேபிளின் மீது பார்க்க, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த விஷ பாட்டில் கண்ணில் பட்டது.
''ஓ... எல்லாத்துக்கும் தயாராத்தான் இருக்கியா. இத, எப்பப்பா குடிக்கப் போற. அதுக்கு முன்ன, ஊர்ல இருக்குற தங்கச்சிய வரச்சொல்லிடு. தவங்கிடந்து பெத்த எங்களுக்கு முதல்ல குடு, அப்புறம் அவளுக்கு குடு.
''கடைசியா நீ குடிப்பா... ஏன்னா, ஓங்கிட்ட இருக்கிற மன தைரியம், எங்களுக்கு இல்லேடா மகனே,'' என்று, தன்னை மீறிய அழுகையில் வெடித்தாள்.
''என்னால முடியலம்மா... அந்த பெண்ணையும் மறக்க முடியல; உன்கிட்டயும் சொல்லவும் முடியல; தங்கச்சியோட வாழ்க்கையும் வீணாகி போயிரும்ன்னுதாம்மா, விஷத்தை குடிக்க நினைச்சேன்,'' என்று அழுதான்.
''ச்சீ வாய மூடு. நெனைக்க கூடாதுடா; நெனைச்சுட்டா போராடணும்டா... கோழை மாதிரி செத்துட்டா பிரச்னை முடிஞ்சுருமா. இவ்வளவு உயிரா நீ நினைக்கிறியே, அந்தப் பிள்ள நாளைக்கு திருமணம் பண்ணிக்கப் போறாளே,'' என்றாள்.
''இல்லம்மா, அவளும் செத்துருவாம்மா,'' என்று விம்மினான்.
ஒரு நிமிடம் தன் மகனையே பார்த்தவள், தன் கணவரிடம் ஏதோ பேசினாள்.
''சின்னா, என் அண்ணன்களுக்கு போனை போட்டு வரச்சொல்,'' என்றாள்.
அடுத்த ஒரு மணி நேரத்தில், நான்கு கார்கள் வரிசையாக வர, தன் கணவன், மகன், அண்ணன்களோடு கம்பீரமாய் ராவுத்தர் வீட்டை நோக்கி நடந்தாள்.
திடுதிப்பென்று வாசலில் வந்து நின்றவர்களை பார்த்த, ராவுத்தரும், உறவினர்களும் திகைத்துப் போயினர்.
''வணக்கம் பாய்,'' என்று, வாசலில் நின்றபடியே கும்பிட்டனர்.
அவர்கள் பதிலின்றி நின்றனர்.
''என்னங்க பாய், வந்தவங்களை வாங்கன்னு கூட கூப்பிட மாட்டீங்களா,'' என்று, புன்னகையோடு கேட்டாள்.
''தயவுசெய்து எந்த பிரச்னையும் பண்ண வேண்டாம். நாங்க பொண்ண பெத்தவங்க. எங்க பொண்ணுக்கு எந்த கஷ்டமும் வந்துடக் கூடாது,'' என்றார், ராவுத்தர்.
''ராவுத்தரே, சத்தியமா நாங்க பிரச்னை பண்ண வரல. விஷயம் இப்பத்தான் தெரியும். ஒங்க பொண்ண கேட்டுதான் வந்திருக்கோம்,'' என்று அமைதியாய் கூறினார், வீரபத்ரய்யா.
''எப்படிங்க, எங்க பொண்ண ஒங்க பையனுக்கு கொடுப்போம். மதம் மாறி கொடுத்தா, எங்கள எங்க ஜமாத்துல இருந்தே ஒதுக்கிடுவாங்கய்யா... எங்களுக்கு ஒங்க சம்பந்தமே வேண்டாம்,'' என்றார், ஒரு பெரியவர்.
''எங்க பையன் வேண்டாம்ன்னு, உங்க பொண்ணு சொல்லட்டும். நாங்க போயிருவோம்,'' என்று கூறினாள், வேங்கையம்மா.
''நிஷா, ஒரு நிமிஷம் வாம்மா,'' என்று, குரல் கேட்ட மாத்திரத்தில் வெளியே வந்தாள், நிஷா.
''நீயேண்டி இங்கே வந்த...'' என்று, அவள் அம்மா அதட்ட, வேடன் கையிலகப்பட்ட புறா போல நடுங்கினாள்.
''வேங்கம்மா, ஒரு முஸ்லிம் பொண்ண முடிக்கவா, எங்கள அவ்வளவு அவசரமா வரச்சொன்ன,'' என்று கத்தினார், பெரியண்ணன்.
அவருக்கு விஷயம் இப்போது தான் விளங்கியது.
அவரை அலட்சியம் செய்த வேங்கையம்மா, ''நீங்களே உங்க பொண்ணோட முடிவ கேளுங்க,'' என்றாள்.
மெல்லிய குரலில், ''சம்மதம்,'' என்றாள், நிஷா.
''அவள் என்ன சொல்வது, நாங்க விரும்பல...'' என்று, ஆளாளுக்கு பேச, சத்தம் அதிகமாகிக் கொண்டே போனது.
''எல்லாரும் எங்கள மன்னிச்சுருங்க...'' என்ற வேங்கையம்மா, தடாலென்று அனைவரின் கால்களிலும் விழுந்து எழுந்தாள்.
கண்ணிமைக்கும் நேரத்தில், தன் கழுத்தில் தாம்புக் கயிறு போல கிடந்த தாலிச் செயினை கழற்றி, மகன் கையில் கொடுத்து, ''நிஷா கழுத்தில் போடுறா...'' எனக் கர்ஜித்தாள்.
அடுத்த நொடியே அதை நிஷாவின் கழுத்தில் போட, யாரும் எதிர்பாராத இந்த செயலில் கூட்டமே ஸ்தம்பித்தது.
''ராவுத்தரே, எங்களை மன்னிச்சுருங்க. உங்க மக, கையில என்ன வச்சிருக்கான்னு பாருங்க, விஷ பாட்டில். நாங்க போன மறு நிமிடமே, உங்க பொண்ணு, அத குடிச்சு சாகுற முடிவுல இருக்கா...
''பிள்ளைங்க மனசுதாய்யா முக்கியம். நம் விருப்பத்துக்காக, வாழ்க்கை பூரா அவுங்க ஏன் கஷ்டப்படணும். நிஷா, நீ மதம் மாற வேண்டாம்; தொழுகையை நிறுத்த வேண்டாம். ஆனா, நீங்க விரும்பினா, இதோ இவன் இனி, உங்க பிள்ள.
''நீங்க இவன் பேர மாத்துனாலும் சரி, உங்க மதப்படி சுன்னத்து பண்ணச் சொன்னாலும் சரி, நாங்க சம்மதிக்கிறோம். நீங்க, எங்களுக்கு என்ன தண்டனை குடுத்தாலும் சரி, நம் பிள்ளைங்கள மட்டும் வாழ விடுங்க,'' என்று கதறியவளை பார்த்து, ஜமாத்திலிருந்து வந்தவர்களும் மனமுருகிப் போயினர்.
அப்பாவின் கால்களில் விழுந்த நிஷா, ''அத்தா, என்னைய மன்னிச்சுருங்க. அவரை பார்த்தப்ப மதமோ, அந்தஸ்தோ எதுவுமே எனக்கு பெரிசா தெரியலேப்பா; அவரோட அன்பு உள்ளம் மட்டும் தான் தெரிஞ்சது.
''நிச்சயம் என்னய ரொம்ப நல்லா பார்த்துக்குவாருன்னு அல்லாவே சொன்னது போல உணர்ந்தேன்த்தா... எங்கள ஏத்துக்கங்கத்தா,'' என்று கதறினாள்.
எதுவும் பேச முடியாமல், ''அல்லாவின் விருப்பம் இதுதான்னா, நாம யாரு அதை மாத்த. யா அல்லா... நீ, இவுங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க,'' என்று முனகினார், ராவுத்தர்.
வானில் சுட்டெரித்த வெயில் குறைந்து, குளிர்ந்த காற்று வீசியது.
நாம் நினைத்தால், பாலைவனமும் சோலைவனமாகும்.
சுமதி நடராஜன்