மாறினார், ஆர்யா!
திருமணத்திற்கு பின், நடிகையருடன் கடலை போடுவதை நிறுத்தி விட்ட, ஆர்யா, ரொம்ப பொறுப்புள்ள நடிகராகவும் மாறி விட்டார். அதன் காரணமாக, அடுத்த, 'லெவலுக்கு' செல்ல வேண்டும் என்று, வித்தியாசமான கதைகள் பக்கம் திரும்பியிருக்கிறார். 'ரொமான்டிக்' கதைகளுடன் தன்னை தேடி வரும் இயக்குனர்களிடம், 'இப்ப நான், 'ரொமான்டிக் பாய்' இல்லை; குடும்பஸ்தனா ஆகிட்டேன். அதனால், குடும்பம் அல்லது நாட்டுப் பிரச்னைகளை துாக்கி சுமக்கிற மாதிரி வேடம் கொடுங்க. அனுபவிச்சி நடிக்கிறேன், பாஸ்...' -என்று, பொறுப்போடு, வாய்ப்பு கேட்டு வருகிறார். இப்படி, ஆர்யா மாறியதன் பின்னணியில், அவரது காதல் மனைவி சாயிஷா இருப்பதாக சொல்கின்றனர்.
— சினிமா பொன்னையா
நயன்தாராவை சீண்டும், வாணிபோஜன்!
நயன்தாரா, 'மார்க்கெட் பீக்'கில் இருக்கும்போதே, 'நான் தான் அடுத்த நயன்தாரா...' என்று, 'பில்ட் - அப்' கொடுத்து வரும், வாணிபோஜன், அவரது, 'கெட் - அப்'புக்கு தன்னை மாற்றி, 'போஸ்' கொடுத்து வருகிறார். தற்போது அவர், 'ஸ்லீவ்லெஸ்' பனியனில், 'செக்ஸி'யாக மாறி, மூக்குத்தி அம்மன் படத்தில், நயன்தாரா அணிந்தது போன்ற ஒரு மூக்குத்தியை அணிந்து, 'போஸ்' கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், அச்சு அசலாக, நயன்தாராவையே நினைவுபடுத்துவது போல், வாணிபோஜன் ஜொலிப்பதால், 'இப்பத்தான் நிஜமாலுமே ஜூனியர் நயன்தாரா மாதிரி இருக்கீங்க...' என்று, ரசிகர்கள், 'சர்டிபிகேட்' கொடுக்க, செம குஷியடைந்துள்ளார், நடிகை. போலிக்கு ஒரு பொன்மணி கிடைத்ததாம்; அதைப் பொழுதுக்கும் தொட்டுத் தொட்டுப் பார்த்ததாம்!
— எலீசா
சரக்குடன், அமலாபால்!
'பாய்பிரண்டு'களுடன் கூத்தடிக்கும் ரகளையான புகைப்படங்களை வெளியிட்டு, 'சோஷியல் மீடியா'வை அலற விட்டு வரும், அமலாபால், 'பிட்' பட நடிகையர் போன்றும் அவ்வப்போது ஆபாச, 'போஸ்' கொடுத்து வந்தார். தற்போது அதையெல்லாம் துாக்கி சாப்பிடும் வகையில், வித்தியாசமான கோணத்தில் அமர்ந்தபடி, சரக்குடன், 'போஸ்' கொடுக்கிறார். அதைப்பார்த்து, 'இது, ரொம்ப ஓவரா இருக்கே...' என்று சிலர், 'கமென்ட்' கொடுக்க, 'ஊருக்குள்ள யாரு சரக்கு அடிக்கல. எல்லாரும் ஒளிந்து, மறைந்து அடிக்கிறாங்க. நான் ஓப்பனா அடிக்கிறேன், அவ்ளோதான்...' -என்று நறுக்கென்று சொல்லி, 'கமென்ட்' கொடுத்தவர்களை, 'ஆப்' பண்ணி விட்டார்.சொன்னால் வெட்கக் கேடு; அழுதால் துக்கக் கேடு!
— எலீசா
அரசியல் பேசும், அண்ணாத்த!
கடந்த, 1996ல், ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட மோதலில் இருந்தே, ரஜினி நடிக்கும் படங்களில் அரசியல், 'பஞ்ச்' வசனங்கள் இடம்பெற்று வருகிறது. இப்போது நடித்து வரும், அண்ணாத்த படத்தில், அரசியல் காட்சிகள் மற்றும் 'பஞ்ச்' வசனங்கள் அதிகமாக இடம்பெறுகிறது. அதோடு, தன் படங்களில் அவ்வப்போது தனக்கான, 'பஞ்ச்' வசனங்களை தானே எழுதி, நடித்து வந்துள்ள ரஜினி, அண்ணாத்த படத்திற்காகவும், சில வசனங்களை எழுதி, அனல் பறக்க பேசி, நடிக்கிறார். இப்படம், சட்டசபை தேர்தலுக்கு முன்பே வெளியாவதால், இந்த வசனங்கள், அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்கின்றனர்.
— சி.பொ.,
அடுத்த, 'ரூட்'டை பிடித்த, பிரகாஷ்ராஜ்!
வில்லன் மார்க்கெட் சரிந்ததும், கேரக்டர் நடிகராக அடுத்த, 'ரூட்'டை பிடித்து விட்டார், பிரகாஷ்ராஜ். இந்நிலையில், 'வில்லன் வேடங்களில், படத்துக்குப் படம், கெட்டவனாகவே நடித்து, போரடித்து விட்டது. இப்போது, கேரக்டர் நடிகரான பின், ஒவ்வொரு விதமான, 'கெட் - அப்'பில் நடிப்பது, புது அனுபவமாக உள்ளது. அந்த வகையில், வில்லனை விட, குணசித்ர பிரகாஷ்ராஜ் தான் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது...' என்கிறார்.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
புயல் காமெடியன் செய்து வந்த அலம்பல் காரணமாக அனைத்து இயக்குனர்களுமே, அவரை கழட்டி விட்டனர். ஆனபோதும், 'ஹீரோ'களின் சிபாரிசோடு மீண்டும் சினிமாவில், 'என்ட்ரி' கொடுத்து விட நினைக்கும் புயல் காமெடியன், சில மேல்தட்டு நடிகர்களின் படங்களைப் பார்த்து, அவர்களுக்கு போன் செய்து, நடிப்பு குறித்து, 'ஆகா... ஓகோ...' என்று புகழ்ந்து தள்ளி வருகிறார்.
இப்படி மெல்ல அவர்களிடம் பேச்சை ஆரம்பித்து, காமெடி செய்வதற்கு வாய்ப்பு பிடித்து தருமாறும் நுால் விடுகிறார். ஆனால், இப்படி மெகா, 'ஹீரோ'களின் மேலான சிபாரிசோடு சென்றபோதும், 'இனிமேல், இந்த நடிகர், காமெடி செய்தால், அது ரசிக்காது. தேவையில்லாமல், 'ரிஸ்க்' எடுக்க வேண்டாம்...' என்று சொல்லி, இயக்குனர்கள் தவிர்த்து விடுகின்றனர். இதனால், கைக்கு எட்டுவது வாய்க்கு எட்டாமல் தடுமாறி நிற்கிறார், புயல் காமெடியன்.
'டேய்... நம் கிரிக்கெட் குழுவில் இருந்தானே, வடிவேலு... ஒழுங்கா இருந்திருந்தா, நல்லா, 'பார்ம்'க்கு வந்திருப்பான். வாய் கொழுப்புல, நம்ம குழுவை குறை கூறி விலகி போனானே... அவன் என்ன செய்தான் தெரியுமா?'
'என்ன செய்தான்?'
'இங்கிருந்து போனதும், எதிர் குழுவில் சேர்ந்துக்கப் பார்த்தான். ஆனா, அவன அங்கேயும் சேர்த்துக்கல. திரும்பவும் இங்கே வரணும்ன்னு நினைக்கிறான். அதற்காக, குழு கேப்டனிடமும், பயிற்சியாளர்களிடமும் சிபாரிசு செய்ய கேட்கிறான். நான் இதை கேப்டனிடம் சொன்னதற்கு, ஒரே வார்த்தையில், முடியாதுன்னு சொல்லிட்டார்...' என, நண்பர்கள் இருவர் பேசிக்கொண்டனர்.
சினி துளிகள்!
* சினிமாவில் வாய்ப்புகள் இல்லாத வடிவேலுவை, சிலர், 'வெப்சீரியலில்' நடிக்க அழைப்பு விடுத்து வருகின்றனர். ஆனபோதும், கண்டிப்பாக சினிமா வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், அவர்களுக்கு சம்மதம் சொல்லாமல் இழுத்தடித்து வருகிறார், வடிவேலு.
அவ்ளோதான்!