'சபாஷ்' சரியான போட்டி!
போட்டி, எல்லாத் தொழிலிலும் உண்டு. போட்டியிருந்தால் தான் வளர்ச்சி.
சினிமாவில், போட்டி, பொறாமைக்கு பஞ்சமில்லை. அன்றைய திரையுலகில், ஆரோக்கியமான போட்டியிருந்தன. அதனால், சிறந்த படங்கள் கிடைத்தன.
வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில், பத்மினி, வைஜெயந்திமாலா இருவரிடையே ஒரு நடனப் போட்டி.
'சபாஷ்... சரியான போட்டி...' என்று, பி.எஸ்.வீரப்பா சொல்லும் அளவுக்கு, அசத்தலான நடன போட்டி. நிஜத்தில், இரு நடிகையரும், சிறந்த நடனமணிகள். எனவே, நாட்டியம் ஆடி, மிரட்டியிருப்பர்.
இந்த நடன காட்சியால், இயக்குனர் வாசனுக்கு, புதிய தலைவலி ஏற்பட்டது.
'போட்டியில் நான் தோல்வியடைவதாக காட்டாதீர்கள்...' என்று, வைஜெயந்தி மாலாவின் அம்மாவும், பத்மினி தரப்பும் கோரிக்கை வைத்தது. அப்போது, ஒரு யுக்தி செய்தார், வாசன்.
போட்டியின் உச்சகட்டத்தின் போது, ஜெமினிகணேசனை குறுக்கே நுழைய விட்டு, நடனத்தை, 'ட்ரா'வில் முடித்தார்.
இதே போல ஒரு நடிப்புப் போட்டி, அன்னை படத்தில். பானுமதி-, சவுகார் ஜானகியிடையே உருவாகியது. யதார்த்தமாக நடந்த இந்த போட்டியை, இயக்குனர், கிருஷ்ணன் பஞ்சு எப்படி சமாளித்தனர்?
அம்மாவின் இரு மகள்களில், அக்கா பானுமதி, தங்கை சவுகார்ஜானகி. வசதிமிக்க வழக்கறிஞரின் மனைவியாகிறாள், அக்கா; வசதியை கொடுத்த இறைவன், வாரிசு கொடுக்கவில்லை. ஏழையை காதலித்தாள், தங்கை; அவளுக்கு, அழகான குழந்தை பிறக்கிறது. அவள் கணவன், ஒரு விபத்தில் கால் இழக்கிறான்.
தங்கையின் குழந்தையை தத்து எடுக்கிறாள், அக்கா. தங்குவதற்கு வீடு, வசதிகளை செய்து கொடுத்து, 'இந்த குழந்தைக்கு, அம்மா நீ தான் என்பதை, இனி எந்த நிலையிலும் அவன் அறியும்படி நடந்து கொள்ளக்கூடாது...' என்று, தங்கையிடம் சத்தியம் வாங்கிக் கொள்கிறாள்.
அக்கா, மாடியில்; தங்கை, கீழே. கண் முன்னே குழந்தை வளர்கிறது. பெற்ற அம்மா, குழந்தையை நெருங்க விடாமல் கண்காணிக்கிறாள், வளர்ப்பு அம்மா. பெற்ற அம்மா, வளர்ப்பு அம்மா இருவருக்குமிடையே மனப் போராட்டம்.
குழந்தை, இளைஞனாகிறான். ஒருநாள், கடும் காய்ச்சலில் மாடியில் கிடக்கிறான். பெற்ற மகனை காணவும், அவன் நெற்றியில் திருநீறு பூசவும், இரவில், பின்பக்க வழியாக, யாரும் பார்க்காதவாறு மாடிக்கு போய், பூசும்போது, பார்த்து விடுகிறாள், அக்கா.
'செய்து கொடுத்த சத்தியத்தை மீறி, பிள்ளையை என்னிடமிருந்து பிரிக்கப் பார்க்கிறாயா, துரோகி...' என்று, தங்கையை திட்டி, இழுத்து போய் வெளியே விடுகிறாள்.
'பத்து மாதம் சுமந்தவள். கண் எதிரில் மகன் உணர்வற்று கிடப்பதை எப்படி பார்த்துக் கொண்டிருக்க முடியும்...' என்று கதறுகிறாள், தங்கை.
இப்படி உணர்ச்சிமயமான காட்சியில் நடிக்கும்போது, பெற்ற அம்மா பாசத்தில் கதறும் காட்சியில், சவுகார் ஜானகி நடிப்பு பிரமாதமாக இருந்தது; பானுமதியும் சிறப்பாக நடித்திருந்தார்.
பெற்ற அம்மாவின் கதறலுக்கு தான் ரசிகர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால், தன் நடிப்புத் திறன் எடுபடாமல் போய் விடுமோ என்று அஞ்சினார், பானுமதி.
சவுகார்ஜானகி உணர்வுபொங்க நடித்துக் கொண்டிருந்த போது, தனக்கு இருமல் வந்துவிட்டது போல இரும ஆரம்பித்து விட்டார், பானுமதி. உடனே, இயக்குனர், 'கட்' சொல்ல வேண்டிய சூழல்.
அந்தக் காலத்தில், இன்று போல், 'டப்பிங்' செய்வது கிடையாது. படப்பிடிப்பின்போதே, 'லைவ்'வாக வசனத்தை பதிவு செய்வர். அதனால், அந்த காட்சியை மறுபடியும் எடுக்கும்போது, முதல், 'டேக்'கில் நடித்த அளவுக்கு, சவுகார்ஜானகியால் செய்ய முடியவில்லை.
நடிப்பில் போட்டி வந்து விட்டதை புரிந்து கொண்ட இயக்குனர்கள், ஒரு ஐடியா செய்தனர்.
பானுமதி, சவுகார்ஜானகி, இருவரின் உணர்வுப்பூர்வமான நடிப்பையும், தனித் தனி, 'ஷாட்'டாக எடுத்து இணைத்து, அவர்களின் திறமையான நடிப்பைப் பதிவு செய்தனர்.
அன்னை படம் பற்றி குறிப்பிடும்போது, 'எனக்கு ஒதுக்கப்பட்ட கதாபாத்திரம், கொஞ்சம் அசட்டுத்தனமாகவும், வில்லி போலவும் இருந்தது. அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு, நான் மிகவும் போராட வேண்டியிருந்தது. நான் ஒரு எழுத்தாளர் என்பதால், திரைக்கதையில் உள்ள குறைகள் கண்ணில் பட்டன.
'அதையெல்லாம் சரி செய்து, கொஞ்சம், 'பாலிஷ்' பண்ணி எழுத வேண்டி வந்தது. இதை தயாரிப்பாளரின் நல்லதுக்குத் தான் செய்கிறோம் என்று நினைத்துக் கொண்டேன்...' என்று, தஞ்சாவூர் கவிராயருக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார், பானுமதி.
'அன்னை படத்தை, ஹிந்தியில் எடுக்க விரும்பினோம். பானுமதி போல, 'பர்பார்ம்' பண்ணக் கூடிய நடிகையைத் தேடினோம். நர்கீஸ், மறுத்து விட்டார். நிருபா ராய் என்ற நடிகையை, பானுமதி வேடத்தில் நடிக்க வைத்து, லாட்லா என்ற பெயரில் எடுத்தோம்.
'பானுமதியை போல, நிருபா ராயால் நடிக்க முடியவில்லை என்பது நிரூபணமானது. நடிகர் - நடிகையர் தேர்வு எந்தளவுக்கு முக்கியம் என்பது புரிந்தது. ஹிந்தியில், லாட்லா படம் தோல்வி...' என்று, 'ஏவி.எம்.60 சினிமா' என்ற தொகுப்பு நுால் சொல்கிறது.
பாடகியாக விரும்பிய பானுமதி, திரை நட்சத்திரம் ஆனது ஏன், எதனால்?
* சினிமா நட்சத்திரங்களின் சோப்பு என்பரே, அந்தச் சோப்பின் விளம்பரத்தில் நடிப்பதற்காக, ஒருமுறை பானுமதியை அணுகினர்.
'நான் அந்த சோப்பில் குளிப்பதில்லை. எனக்கு அந்த சோப்பு பிடிக்காது. நான் வாங்காத சோப்பை, வாங்குங்கள் என்று எப்படி சொல்ல முடியும்...' என்று கேட்டு, திருப்பி அனுப்பி விட்டார்.
— தொடரும்
சபீதா ஜோசப்