தோட்ட செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி கொண்டிருந்தான், கேசவ்.
''இன்றைக்கு கலெக்டர் ஆபிஸ், 'மீட்டிங்' இருக்கு... எங்க அலுவலகம் சார்பாக, நான் போகணும்... எளிமையா சமையலை முடிச்சுட்டேன். மேற்கொண்டு வேலையை நீங்க பாத்துக்கறீங்களா?'' என, புன்னகையுடன், அவனிடம் கூறினாள், வசந்தி.
''இவ்வளவு அழகான சிரிப்புக்கு, நான் சம்மதம் சொல்லாமல் இருக்க முடியுமா?''
அவள் நாணப்பட்டது, இன்னும் அழகாக இருந்தது.
''இன்னிக்கு கன்னிமரா வரைக்கும் போகணும்ன்னு சொன்னான், நரேன். முக்கியமா ஒரு கட்டுரை எழுதணுமாம்; அதுக்கு சில புத்தகங்கள் தேவையாம். உங்களுக்கு மதியம் தானே வேலை, கேசவ்?''
''ஆமாம், வசா... கவலைப்படாதே, நானே அவனை அழைத்துப் போறேன்... நீ நிம்மதியாக உன் வேலையைக் கவனி.''
''தாங்க் யூ கேசவ்,'' என்று, அவன் கையை மென்மையாக அழுத்தி விட்டு, கிளம்பினாள்.
அதற்குள், காலை வேலைகளை முடித்து பாட புத்தகங்களுடன் உட்கார்ந்திருந்தான், ௯ம் வகுப்பு படிக்கும் நரேன். கேசவைப் போல நல்ல உயரம். வசந்தியைப் போல வசீகர முகம். கூடுதலாக கனிவு சுரக்கும் கண்கள். கிரேக்க இளவரசன் போன்ற தோற்றத்தில் மாறி வருகிற மகனை, மகிழ்ச்சியுடன் பார்த்தான்.
''நீங்க சொல்லிக் கொடுத்த, 'பாலினாமினல்ஸ்' ரொம்ப சுவாரஸ்யமா இருக்குப்பா... நானே, என் நண்பர்களுக்கு, சொல்லி கொடுக்க முடிஞ்சது... 'கிரேட்'ப்பா நீங்க,'' என்றான், நரேன்.
''அப்படியா... 'லீனியர் ஈக்வேஷன்ஸ்' பத்தியும் சொல்லித் தரேன், கண்ணா... அருமையா இருக்கும்.''
''தாங்க்ஸ்பா... கட்டுரைப் போட்டிக்காக, இன்னிக்கு, 'லைப்ரரி'க்கு போகணும். சைக்கிளில் போய் வரட்டுமா?''
''நானே கூட்டிண்டு போறேன், நரேன். கட்டுரைக்கு, என்ன தலைப்பு?''
''என்னைக் கவர்ந்த உயர்ந்த மனிதர். எடிசன், எனக்கு ரொம்பப் பிடிக்கும். அப்புறம், கலிலியோ; முடிந்தால், ஆர்க்கிமிடீஸ். பிறகு, ஐன்ஸ்ட்டீன்...'' என்று, அவன் சொல்லிக் கொண்டே போனான்.
வாசலில் மணி அடிப்பது கேட்டது.
''சரி கண்ணு... நீ, உன் வேலையை கவனி. யார்ன்னு பார்க்கிறேன்,'' என்று கதவைத் திறந்தான், கேசவ்.
ஐம்பது வயது தோற்றத்தில் ஒருவர் நின்றிருந்தார். முகத்தில் மெல்லிய ஒளி. முறுவல், மென்மை, மெல்லிய உடல்வாகு என்ற அந்த கிராமத்துத் தோற்றம், கேசவுக்கு ஏதேதோ நினைவலைகளை ஏற்படுத்தியது.
''கேசவா... என்னைத் தெரியலையா... அதியமான், செம்மாறு கிராமம்.''
மகிழ்ச்சிப் பெருக்கெடுத்தது. கேசவின் சிறு வயது உயிர்த் தோழன், அதியமான். செம்மாறு கிராமத்தின் அஞ்சல் அலுவலக அதிகாரியாக அப்பா இருந்தபோது, அங்கேதான், 10 ஆண்டுகள் இருந்தோம்.
கேசவின் பால்யத்தை அழகாக்கிய ஊர். சிறு வயது காலத்தை வசந்த காலமாக்கிய நண்பர்கள். அதிலும் இந்த அதியமான், அவன் உள்ளத்தின் ஆழமான பகுதியில் என்றும் நிலைத்திருப்பவன்.
''அதியா... உள்ளே வா.''
பரவசத்தில் என்ன செய்வது என்றே தெரியவில்லை. 30 ஆண்டு பிரிவு இல்லையா...
''உட்கார், காபி எடுத்து வருகிறேன். இல்லையில்லை, மோர்... அதுதானே பிடிக்கும் உனக்கு,'' என்று பரபரத்தான், கேசவ்.
அதியமானின் முகமும் மகிழ்ச்சிப் பரவசத்தில் இருந்தது. பெரிய பைகளைக் கீழே வைத்தான். முகத்தை துடைத்தபடியே சுற்றிலும் பார்த்தான். பிறகு பைகளில் இருந்து வேர்க்கடலை, வாழை, பப்பாளி, பூசணி, பரங்கி என்று, நிறைய எடுத்து வைத்தான்.
மண்ணின் மணம், காய்கறிகளின் மணம், வேரின் மணம் என்று, வீடே கிராமத்து வாசனையில் திளைத்தது.
''என்னப்பா இதெல்லாம், இவ்வளவு துாக்கிட்டு வந்திருக்கே... ஏன் இளைச்சுட்ட, முகம் ஒட்டி இருக்கு. என்ன பேசறதுன்னே தெரியலே; ஆனா, கோடி விஷயங்கள் பேசணும்ன்னு இருக்கு,'' என்று, அவன் கைகளில் மோரை திணித்தான்.
''மிக சிரமப்பட்டுதான் உன் வீட்டைக் கண்டுபிடிச்சு வந்தேன், கேசவா... என்னவோ உன்னை ஒருமுறை பார்க்கணும்ன்னு, அவ்வளவு ஏக்கம்... ஊரை விட்டுத் தள்ளி, ஓலைக் குடிசையில, கஞ்சிக்கும், கூழுக்கும் பத்தாம இழுத்தடிச்ச என் வாழ்க்கையில, புத்தபிரான் மாதிரி வந்தவன் நீ. எந்த பேதமும் பார்க்காத மேன்மையான மனது உனக்கு,'' என்று கரகரக்க, சட்டென்று கேசவ் விரல்களைப் பற்றினான்.
''உன்னை, எனக்கு ரொம்பப் பிடிக்கும் அதியா... அமைதியான பேச்சு, விட்டுக் கொடுக்கிற குணம். தெரியாததை கேட்டு தெரிஞ்சுக்கற பண்பு. உன் வீட்டு கேப்பைக் கஞ்சி அவ்வளவு ருசியா இருக்கும்.
''உன் தங்கைகள் ரெண்டு பேர் மேலேயும் அவ்வளவு பாசம்... கிராமத்து பள்ளிக் கூடத்துல, உன் தங்கைகள், பறவைகள் போல சுத்தி சுத்தி வருகிற காட்சி, எப்பவும் என் கண்ணுலயே இருக்கும், அதியா.''
நரேனை அறிமுகம் செய்தான். வசந்திக்கு தகவல் அனுப்பினான். வற்புறுத்தி, டிபன் சாப்பிட வைத்தான். வீட்டை சுற்றிக் காண்பித்தான். மனது பரபரப்பாகவே இருந்தது.
அன்று, அவன் செய்த தியாகம்!
அது, கேசவின் அடி மனதில் ஒரு மழைமேகம் போல தங்கியிருந்தது. எப்படிப் பேச்சை எடுப்பது என்று தெரியவில்லை.
அவனே ஆரம்பித்தான்.
''இந்தா கேசவ்... முதல் அழைப்பிதழ் உனக்கு தான்,'' என்று, மூவர் பெயரையும் எழுதி நீட்டினான்.
''அட... உனக்கு கல்யாணமா... எனக்கு முதல் அழைப்பா? அதியா... ரொம்ப சந்தோஷம்ப்பா.''
''அதில்லேப்பா,'' என்று, வாய்விட்டு சிரித்தான்.
''பின்னே?''
''அதுக்கு எந்த அவசியமும் ஏற்படலே, கேசவா... இப்பவும் எப்பவும் மகிழ்ச்சியாத்தான் இருக்கேன். இது, ஊர்ல துவங்கப் போகிற சங்கம். மரபணு விதைகளைக் காப்பாற்ற, இயற்கை விவசாயம், சூழல் பாதுகாப்பு, உழவர் மேம்பாடுன்னு அம்சங்களை வலியுறுத்துகிற சங்கம்... 10 ஆயிரம் விவசாயிகள் இப்பவே உறுப்பினராக இருக்காங்க...
''இதை பெரிய அளவுல எடுத்து போவதற்கான முதல் படி... துவங்கி வைக்கப் போகிறவர்கள், இரண்டு பெண்கள்... கலெக்டரானாலும் விவசாயத்தை விடாத இளம் பெண்கள். ஒருவர், ஆந்திர மாநிலம், விஜயவாடா கலெக்டர், செவ்வந்தி. இன்னொருவர், அட்டப்பாடி தமயந்தி.''
அவன் நிறுத்தினான்.
கேசவுக்கு மூச்சு இரைத்தது. நெஞ்சு மத்தள அடியாக அடித்தது.
''அதியா... என்ன சொல்கிறாய், கலெக்டர்களா... நம் தங்கைகளா?'' என்றான்.
''ஆமாம் கேசவா... அவர்களே தான். பட்டாம்பூச்சி போல, நம் செம்மாறு பள்ளியைச் சுற்றி வந்தனரே, அந்த கருவாச்சிகள் தான், இப்போதைய கலெக்டர்கள்,'' என்றான், அதியமான்.
கண்கள் இரண்டும் தாமரை போல மலர்ந்திருந்தன.
''நீ... உன் தியாகம்?'' என்றான், கேசவ்; விழிகள் பொத்துக் கொண்டன.
அந்த நாட்கள், பசுமை மாறாமல் கண் முன் வந்தன.
ஏற்கனவே ஏழை குடும்பம். அப்பா - அம்மா துப்புரவுத் தொழிலாளர்கள். காணி நிலம் என்று, ஏதோ உள்ளங்கை அளவில் இருந்தது. அவ்வளவு தான். திடீரென்று, அவன் அப்பா, நச்சுக்காற்றை சுவாசித்த விபத்தில் இறந்து போனார். அம்மா சுவாசப் பிரச்னையில் நிரந்தர நோயாளியானார். இவன் தலை மேல் இறங்கின சுமைகள்.
'அதியா... இனி, எனக்கு பலமில்லை. ஆண் பிள்ளை நீ மட்டும் பள்ளிக்கூடம் போனால் போதும். பொட்டைப் பிள்ளைகள் இரண்டும் வீட்டு வேலை, காட்டு வேலை செய்யட்டும். இல்லையானால் துப்புரவு வேலையே செய்யட்டும்.
'அதுகளை, 16 வயசுல, கட்டிக் கொடுத்து, கடனைக் கழிச்சுடலாம். நாளை முதல் இஸ்கோல் வேண்டாம்...' அவன் அம்மா, தெளிவாக சொல்லி விட்டார்.
தங்கைகள், மறு வார்த்தை பேசவில்லை. ஏழை வீட்டுப் பெண் பிள்ளைகள், பிறக்கும்போதே கஷ்ட நஷ்டங்களை தெரிந்து தான் பிறப்பர் போல. அண்ணன் மட்டும் படிக்கட்டும் என்று, மனதார ஒப்புக் கொண்டனர்.
ஆனால், வேறு முடிவை எடுத்தான், அதியமான்.
அம்மாவையும், தங்கைகளையும் உட்கார வைத்து, தன் மனதில் உள்ளதை தெளிவாக எடுத்துச் சொன்னான்.
'அம்மா... எனக்கு அனுபவ அறிவு இல்லை. ஆனால், எது சரியானது என்று யோசிக்கும் மனது இருக்கிறது. ஒரு ஆண் படிப்பது, அவனுக்கானது மட்டுமே... நல்ல வேலை, சம்பளம், மனைவி, குழந்தை, வீடு, வாசல் என்று முடிந்து விடும்.
'ஆனால், பெண்ணின் கல்வி அப்படியல்ல, அது சமூகத்தை மேம்படுத்துகிற, சந்ததிகளைக் காக்கிற, வாரிசுகளைக் கரையேற்றுகிற கல்வி... தன்னுடன் மட்டும் நின்று விடாமல், தன்னைச் சேர்ந்த சமுதாயம், நட்பு, உறவு என்று மேலே ஏற்றி விடுகிற கல்வி அம்மா, பெண்ணின் கல்வி...
'நீ சொன்னது போல், ஆண் பிள்ளையான நான், எப்படியும் பிழைத்துக் கொள்வேன். ஆனால், பெண்ணுக்கு படிப்பு தான் பாதுகாப்பு, மதிப்பு, மரியாதை. தங்கைகள் படிக்கட்டும்; நான் வேலை செய்து, படிக்க வைக்கிறேன்... இந்த வாய்ப்பை எனக்கு கொடுங்கள்...' என்றான், அதியமான்.
அவர்களால் வேறொன்றும் சொல்ல முடியவில்லை. பள்ளியை விட்டு நின்றான், அதியன். தங்கைகள் தொடர்ந்து படித்தனர். 10ம் வகுப்புடன், அந்த ஊர், கேசவின் தொடர்பை விட்டு நின்று விட்டது.
இப்போது... அவர்கள் கலெக்டர்கள்.
''கிளம்புகிறேன் கேசவா... குடும்பத்துடன் வந்து விடு. ஊர், நிலம், உழவு, வீடு என்று எல்லாமே வளமையாக இருக்கும் அழகைப் பார். உனக்காகக் காத்திருப்பேன்,'' என்று பிரியாவிடை பெற்று கிளம்பினான், அதியமான்.
கேசவுக்கு ஏதேதோ தோன்றியது. உலகின் அதிசயம் ஒன்றைப் பார்க்கிறேனா... பனித்துளிக்குள் சூரியனை உணர்கிறேனா?
''நீங்கள் கிளம்புங்கள், அப்பா... நான் விளையாடப் போகிறேன்,'' என்றான், நரேன்.
''ஏன் கண்ணா... நுாலகம் போக வேண்டும், உன் கட்டுரைப் போட்டிக்கு புத்தகங்கள் வேண்டும் என்றாயே...''
அவன் நிமிர்ந்து புன்னகைத்தபடி, ''உன்னைக் கவர்ந்த உயர்ந்த மனிதர் என்பது தான் தலைப்பு அப்பா... என்னவோ பெரிய விஞ்ஞானிகளும், தலைவர்களும், நோபல் பரிசு வாங்கியவர்களும் தான் உயர்ந்தவர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்...
''அதியமான் அய்யாவைப் பார்த்த பிறகு, என் பார்வை சரியான கோணத்தில் திரும்பி விட்டது. இவரைப் போல, பெயர் தெரியாத, புகழ் அடையாத நல்லவர்கள் உலகில் இருக்கின்றனர். அவர்கள், நம்மிடையே காற்றைப்போல உலவிக் கொண்டிருக்கின்றனர். நம் இருப்பை அழகாக்குகின்றனர்.
''அன்பு ஆள்கிற இடத்தில் அதிகாரத்திற்கு இடமில்லை என்று உணர்த்துகின்றனர். எதைச் செய்தாலும் விரும்பிச் செய்கின்றனர். அறிவு, அன்பு இரண்டை மட்டுமே வைத்து, விடுதலை அடைந்து, மற்றவரையும் பறக்க வைக்கின்றனர். என் கட்டுரையின் நாயகன், அதியமான் அய்யா,'' என்றான்.
அவனை, வியந்து பார்த்தான், கேசவ்; இதயம் நெகிழ்ந்து விம்மியது.
சாய் நேயா