அன்பு சகோதரிக்கு —
எனக்கு வயது 57; இல்லத்தரசி. அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்று, ஓய்வூதியம் பெறுகிறார், கணவர். எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். இருவருக்குமே திருமணமாகி, அவரவர் துணையுடன் வெளியூர்களில் வசிக்கின்றனர். நானும், கணவரும் தனிக்குடித்தன வாழ்க்கை வாழ்கிறோம்.
எங்களின் பக்கத்து வீட்டில், தம்பதி ஒருவர் குடியிருக்கின்றனர். கணவர், அரசுக் கல்லுாரி விரிவுரையாளர்; மனைவி, இல்லத்தரசி. கணவனுக்கு, 38 வயது; மனைவிக்கு, 33 வயது இருக்கலாம்.
நாங்கள் குடியிருக்கும் நகரில், மொத்தமே ஐந்து வீடுகள் தான் இருந்தன. அதனால், நானும், மகள் வயதுள்ள பக்கத்து வீட்டு பெண்ணும், தினமும் ஒரு மணி நேரமாவது ஊர் கதை, உலகத்து கதை பேசுவோம்.
பக்கத்து வீட்டு தம்பதிக்கு திருமணமாகி, எட்டு ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. குழந்தை பிறக்க, எனக்கு தெரிந்த யோசனைகளை, அந்த பெண்ணுக்கு கூறுவேன்.
குழந்தையின்மை பிரச்னையை போக்க இருவரும், கருத்தரிப்பு மையத்துக்கு சென்று வந்தனர். இருவரில் யாருக்கு குறை என, பக்கத்து வீட்டு பெண் கூறியதில்லை.
ஆனால், அவளுக்கு தான் குறை என, யூகித்தேன்.
ஒருநாள், பக்கத்து வீட்டு பெண், தனியாக அமர்ந்து, அழுது கொண்டிருந்தாள். அவளுக்கு ஆறுதல் கூறும் போது, ஒரு உண்மையை போட்டு உடைத்தாள்.
'என் கணவருக்கு, பல பெண்களுடன் பழக்கம் உள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில், நான்குக்கும் மேற்பட்ட பெண்களுடன், தொடர்பு வைத்திருக்கிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன் அவருக்கும், ஒரு மாணவிக்கும் தொடர்பு ஏற்பட்டது. விஷயம் தெரிந்து கண்டித்தேன்.
'அந்த மாணவி, என் கணவர் தவிர, இரண்டு, மூன்று விரிவுரையாளர்களுடன் தொடர்பு வைத்திருந்திருக்கிறாள். கர்ப்பமாகி விட்டாள், மாணவி. கர்ப்பத்துக்கு காரணம் இன்னொரு விரிவுரையாளர் என, கை காட்டியிருக்கிறாள். பிரச்னை பெரிதாகி, வேலையிலிருந்து நீக்கப்பட்டார், அந்த விரிவுரையாளர்.
'கர்ப்பத்தை கலைத்து சொந்த ஊருக்கு போய் விட்டாள், மாணவி. அந்த பிரச்னை, அதோடு ஓய்ந்தது அம்மா...' என்றவள், தொடர்ந்தாள்...
'அடுத்து, எங்களுக்கு நெருக்கமான குடும்பத்தைச் சேர்ந்த கணவர், வெளிநாட்டில் பணிபுரிகிறார். இரு குழந்தைகளுடன், எங்கள் பக்கத்து ஊரில் இருக்கிறாள், மனைவி. எங்கள் வீட்டிற்கு அவள், அடிக்கடி வந்து போவாள். ஒரு கட்டத்தில் அவளுக்கும், என் கணவருக்கும் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது.
'தினமும், 10 - 15 முறை, அந்த பெண்ணுடன், மொபைல்போனில் என் கணவர் பேசுவதாக தெரிவித்தான், எங்கள் கார் டிரைவர். அத்துடன், தெரிந்த ஒருவர், என் கணவரிடம், 'உங்களுக்கு எத்தனை குழந்தைகள்...' என கேட்டிருக்கிறார். அதற்கு, 'இரண்டு குழந்தைகள்...' என்றிருக்கிறார், கணவர்.
'வெறியாகி, அந்த பெண்ணை சந்தித்து, சரமாரியாக திட்டினேன். வாக்குவாதத்தின் உச்சத்தில் அந்த பெண், 'என்னுடைய இரண்டாவது பெண் குழந்தைக்கு அப்பா, உன் கணவர் தான்...' என்றாள். கணவரிடம் கேட்டதற்கு, 'இல்லவே இல்லை...' என, சத்தியம் செய்கிறார்.
'அந்த பெண், மீண்டும் மீண்டும் எனக்கு போன் செய்து, 'இனி உன் புருஷன் தான், எனக்கும் புருஷன்; உன் வீட்டுக்கு வந்து நிரந்தரமாய் தங்க போகிறேன்...' என, மிரட்டுகிறாள். அவளது, இரண்டாவது பெண் குழந்தை, கணவர் சாயலாய் இருப்பதாக தான் தோன்றுகிறது.
'அதை ஊர்ஜிதப்படுத்த, நீங்களும், நானும் அந்த பெண் வீட்டிற்கு போவோம். அந்த பெண்ணிடம் நான், சமாதானமாக பேசி கொண்டிருக்கிறேன். நீங்கள் நைச்சியமாக குழந்தையின் தலைமுடியை வெட்டி எடுத்துக்கங்க. டி.என்.ஏ., பரிசோதனை செய்து, அந்த குழந்தை என் கணவனுக்கு பிறந்ததா என, உறுதிப்படுத்திக்கலாம்...' என்கிறாள்.
பக்கத்து வீட்டு பெண்ணுக்கு உதவ போய், எதாவது பிரச்னையில் சிக்கிக் கொள்வேனோ என, பயமாய் இருக்கிறது. என்ன செய்யலாம் சகோதரி?
— இப்படிக்கு,
உங்கள் சகோதரி.
அன்பு சகோதரிக்கு —
குழந்தையை ஏமாற்றி முடியை வெட்டி எடுக்கும் போது, நீ மாட்டி கொண்டால் என்ன செய்வாய்...
அப்படி நீ பிடிபட்டால், கள்ள உறவில் ஈடுபட்ட பெண், உன்னை நேரடியாகவோ அல்லது ஆள் வைத்தோ தாக்குவாள். வீட்டிற்குள் வேறு எதையோ திருட வந்ததாக, குற்றம் சாட்டவும் கூடும்.
பிரச்னை இல்லாது நீயும், கணவரும் வாழ்ந்து வருவது, உனக்கு பிடிக்கவில்லையா... பக்கத்து வீட்டு பெண், பிரச்னையில் நீ ஏன், மூக்கை நீட்டுகிறாய்?
டி.என்.ஏ., பரிசோதனை மூலம், அந்த குழந்தை, கணவருக்கு பிறந்ததாக உறுதியானால், பக்கத்து வீட்டுக்காரி என்ன செய்வாள்?
கள்ள உறவை அங்கீகரித்து, அந்த பெண்ணை தன் வீட்டோடு கூட்டி
வைத்து கொள்வாளா அல்லது பஞ்சாயத்து பேசி, அதை, தன் குழந்தையாக
தத்தெடுத்துக் கொள்வாளா?
கள்ள உறவு பெண் கேட்கும் பணத்தை நஷ்டஈடாய் கொடுத்து, அவளை தன் வாழ்க்கையிலிருந்து ஒதுங்கிக் கொள்ள சொல்வாளா... நம்பிக்கை துரோகம் செய்த கணவனை, இரவோடு இரவாக கொல்வாளா?
கள்ள உறவு பெண்ணின், அப்பாவி கணவன், வெளிநாட்டில் வேலை செய்கிறானே... அவனுக்கு என்ன பதில் கூறுவாள்?
இனி, பக்கத்து வீட்டுக்கார பெண், என்ன செய்ய வேண்டும் தெரியுமா...
அவள், தன் கணவனை கெஞ்சியோ, மிரட்டியோ தன் கட்டுபாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். கணவனின் கைபேசி எண்ணை மாற்ற வேண்டும். வெளியூரில் இருக்கும் கல்லுாரிக்கு, அவள் கணவன் பணிமாற்றம் பெற வேண்டும்.
கள்ள உறவுக்காரியின் கணவனை தொடர்பு கொண்டு, விஷயத்தை நாசுக்காக கூறி, எச்சரிக்கைப்படுத்த வேண்டும்.
பக்கத்து வீட்டுக்காரியின் கணவன், குழந்தை இல்லாத ஏக்கத்தால், கள்ள உறவுகளில் ஈடுபடுகிறானோ என்னவோ?
கருத்தரிப்பு மையம் மூலம், குழந்தை பெறும் வாய்ப்பு மிகக் குறைவாக இருந்தால், பக்கத்து வீட்டுக்காரியை, எதாவது ஒரு குழந்தையை தத்தெடுக்க சொல்.
'உன் குழந்தை, உனக்கும், கணவனுக்கும் பிறந்தது. வீணாக பொய் கூறி, உன் வாழ்க்கையையும், என் வாழ்க்கையையும் சீரழிக்க முயலாதே. வெளிநாட்டிலிருந்து திரும்பும் உன் கணவனின் தலை மீது, இடியை போடாதே.
'என் கணவனுடன் பழகியதற்கு நஷ்டஈடாய், தேவையான பணம் தருகிறேன். கண்ணியமாக விலகிக்கொள். இனி, அவரவர் பாதையில் போவோம்...' எனக் கூறி, கள்ள உறவு பெண்ணிடம் சமாதானம் பேச சொல்.
பக்கத்து வீட்டுக்காரியுடன் பேச்சை குறைத்து, மாதம் ஒருமுறை, மகன் அல்லது மகள் வீட்டுக்கு சென்று வா சகோதரி!
— என்றென்றும் பாசத்துடன்
சகுந்தலா கோபிநாத்.