முன்கதை சுருக்கம்:
திருமண தேதி குறித்த விபரத்தை ராஜாராமனிடம் கூறினார், சாம்பசிவம். கார்த்திகேயனை புவனா நேசிப்பதாகவும், தான் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப் போவதாகவும், நீங்கள் துணை நிற்க வேண்டும் என, ராஜாராமன் கேட்க, அவரும் சம்மதித்தார்-
மறுநாள் காலை, சீக்கிரமே எழுந்து வெளியில் புறப்பட தயாரானான், ராஜாராமன்.
கூடத்திற்கு வந்து, கார் சாவியை எடுத்தவனிடம், ''எங்கே இவ்வளவு சீக்கிரம் கிளம்பிட்ட...'' என்றார், சாம்பசிவம்.
''குருமூர்த்தி சிவாச்சாரியாரை பார்த்து பேசலாம்ன்னுப்பா.''
''ரொம்ப வேகமாக இருக்கியேப்பா.''
''கவலைப்படாதீங்க... விவேகத்தோடும் இருப்பேன்.''
''அது தெரியும் ராஜா... இருந்தாலும்...''
''ராத்திரி முழுசும் யோசிச்சுதாம்ப்பா முடிவெடுத்திருக்கேன். சில விஷயங்களில் ரொம்ப தெளிவாகவும் இருக்கேன். எதுவானாலும் நீங்க இதுக்குள்ள நுழையாதீங்க. தலையிடாமல் தள்ளியே நில்லுங்க. தெரியாத மாதிரியே நடந்துக்குங்க.
''யார் என்ன கேட்டாலும், தெரியாதுன்னே சொல்லுங்க. நீங்க ரொம்ப பெரிய மனிதர். கோவில் குருக்களாகவும், ஊர் தலைவராகவும் உங்க பொறுப்புகள் அதிகம். எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன்னு, நீங்க செயல்பட முடியாது.
''நீங்க தனி மனுஷனில்ல, ஆயிரம் பேருக்கு பதில் சொல்லியாகணும். ஆளாளுக்கு நிக்க வச்சு கேள்வி கேப்பா; சட்ட திட்டம் பேசுவா. சங்கம் வேற இருக்கு. அதனால, இதை நான் பார்த்துக்கறேன். தேவைப்பட்டா அவா ரெண்டு பேரையும் கூட்டிண்டு வந்து, மாந்தோப்பு வீட்டுல வச்சுக்கறேன்.
''நானும், அவாளுக்கு துணையா அங்க தங்கிக்கறேன். நம்ம கோவில்ல இல்லாம, வேற கோவில்ல வச்சு திருமணத்தை முடிச்சுக்கறேன். எந்த காரணத்தை முன்னிட்டும், உங்க பேர் இதுல சம்பந்தப்படாமல் பார்த்துக்கணும்,'' என்றான்.
அரண்டு போனார், சாம்பசிவம்.
எத்தனை தீவிரமாக யோசித்திருக்கிறான். எவ்வளவு முன்னேற்பாட்டுடன் சிந்தித்திருக்கிறான். தான் ராத்திரி நினைத்து சங்கடப்பட்டதற்கு, எவ்வளவு சுலபமாக வழி கண்டுபிடித்து விட்டான்.
''ரா... ஜா...'' என்று தழுதழுத்தார்.
''கவலைப்படாதீங்கப்பா... எல்லாம் நல்லபடியா முடியும். நாம ஒண்ணும் தப்பு பண்ணல. மனசு பூர்த்தியா நேசிக்கிற ரெண்டு பேரை சேர்த்து வைக்கப் போறோம். நல்லது தான் பண்றோம். நல்லதே நடக்கும்,'' என்றவன், துாணருகில் நின்று கொண்டிருந்த, ராஜாம்பாளை பார்த்து, ''வரேம்மா...'' என்றான்.
''ரா... ஜா...'' என்று நெகிழ்ந்து, கண் கலங்கினாள்.
''என்னம்மா?''
''உன்னை, மாலையும் கழுத்துமா பார்ப்பேன்னு நினைச்சுண்டிருந்தனேடா...''
''அதனால என்னம்மா... மாலையும், கழுத்துமா, புவனாவை பார்க்கலாம். அவளை, உன் பொண்ணா நினைச்சுக்கோ... பிள்ளைக்கு பதில் பொண்ணை, மாலையும், கழுத்துமா பார்க்கப் போற... அவ்வளவு தானே...''
எப்பேர்ப்பட்ட பதில், என்ன மனிதன் இவன். உருகிப் போய் அவன் தலையை வருடினாள். முகத்தை தடவிக் கொடுத்தாள்.
''ஜாக்கிரதையா போயிட்டு வாப்பா.''
கோவிலிலிருந்து வந்து புழுக்கம் தாங்காமல், கிணற்றடிக்கு போய் நீர் இறைத்து ஊற்றி, வேறு வேஷ்டி மாற்றி வந்தார், குருமூர்த்தி சிவாச்சாரியார்.
அதற்குள், கூடத்தில் இலை போட்டு தயாராக வைத்திருந்தாள், பர்வதம். இலைக்கு எதிரே பாத்திரங்களில் பரிமாற தயாராக எல்லாம் வைக்கப்பட்டிருந்தன.
''என்னம்மா தாயே, சர்வேஸ்வரீ...'' என்றபடியே உட்கார்ந்தார். அவருக்கு எதிரில் தானும் தரையில் அமர்ந்து பரிமாற ஆரம்பித்தாள், பர்வதம். இலையில், இரு கரண்டி சாதம் வைப்பதற்குள் போதும் என்று கை காட்டினார்.
''என்ன இது... ரெண்டு நாளா நீங்க சரியா சாப்பிடறதே இல்ல?'' கவலையோடு கேட்டாள்.
''என்னவோ சங்கடப்படுத்தறது. மனசே சரியில்ல பர்வதம்...'' என்றார்.
''என்ன ஆச்சு...'' பதறினாள்.
''என்னன்னு தெரியல... காரணமில்லாம மனசு கஷ்டப்படறது.''
''எல்லாத்தையும் அம்பாள் பார்த்துக்குவான்னு சொல்லுவேளே...''
''ஈஸ்வரி காப்பாத்துன்னு, அவகிட்ட தான் வேண்டிக்கிறேன். ஆனாலும் மனுஷ மனசோன்னோ... அலையறது...''
''வீணா மனசை போட்டு அலட்டிக்காதீங்கோ. ஏற்கனவே, பீ.பி., ஷுகர்ன்னு ஏகப்பட்ட பிரச்னை இருக்கு. இதோ பார்த்துண்டே இருக்கிறதுக்குள்ள பொண்ணு திருமணம் வேற நெருங்கிடும்... அதுக்கு வேற அலையணும்.''
''அந்த மனுஷர், நாள் பார்த்து சொல்றேன்னாரே?''
''சொல்லுவார்... கவலைப்படாம சாப்பிடுங்கோ.''
கையை குவித்து, நீர் ஊற்றி இலையை சுற்றி பரிசேஷணம் பண்ணியபோது, வாசலில், ''சார்...'' என்று கூப்பிடும் சத்தம் கேட்டது.
இருந்த இடத்தை விட்டு எழாமல், ''உள்ளே வாங்கோ...'' என்றார்.
கூடத்தில் வந்து நின்ற ராஜாராமனை கண்டதும், ''அடேடே...'' என்று, சடாரென்று எழுந்து கொண்டார். பர்வதமும் எழுந்து, புடவை தலைப்பால் தோளை போர்த்தி நின்றாள்.
''வாங்கோ மாப்பிள்ள... வாங்கோ.''
அவரது குரல் சுரீரென்றது, ராஜாராமனுக்கு.
'எவ்வளவு நம்பிக்கை. எத்தனை உரிமை. மென்மை இழையோடும் வாத்ஸல்யம். இவை அனைத்தும் சிறிது நேரத்தில் தவிடு பொடியாகுமே... எப்படி தாங்கப் போகிறார், இவர்... தாங்குவாரா?'
''என்ன மாப்பிள்ளை யோசனை... உட்காருங்கோ.''
இலையின் அருகில், தரையில் உட்கார்ந்ததும் பதறினார்.
''என்ன இது... தரையில் உட்கார்றீங்க... நாற்காலியில் உட்காருங்கோ.''
''உங்க கூட சாப்பிடலாம்ன்னு தான் உட்கார்ந்திருக்கேன்.''
''பர்வதம்... சீக்கிரம் இன்னொரு இலை போடு, மாப்பிள்ளைக்கு. தரையில் கோலமிட்டு, அதன் மேல் இலை போடு. முதல்ல, வாழைப்பழமும், சர்க்கரையும் வை.''
''அதெல்லாம் வேணாம்மா... வெறுமனே இலை போட்டு பரிமாறுங்கோ போறும்.''
''இல்ல மாப்ளே... முதல் முறையா சாப்பிடப் போறேள்...''
''தயவுசெய்து, நான் சொல்ற மாதிரி செய்யுங்களேன்.''
''சரி, பர்வதம்... வெறுமனே இலை போட்டு பரிமாறு.''
ராஜாராமனுக்கு நல்ல பசி. சாம்பாரும், ரசமும் சுவையாக இருந்தன. தன் வீட்டில் அம்மா சமைக்கிற மாதிரியே இருப்பதை உணர்ந்தான். 'ஒருவேளை, அனைத்து குருக்கள் வீட்டு சமையலும் ஒன்று போலவே இருக்குமோ...'
சாப்பிட்டு முடித்து, முற்றத்தில் கை கழுவி, கூடத்து நாற்காலிகளில் அமர்ந்தனர்.
சாப்பிட்ட இலைகளை எடுத்து, பாத்திரங்களை உள்ளே எடுத்து போனாள், பர்வதம். பின்னர் ஒரு தட்டில், வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பும், ஒரு செம்பு நிறைய தண்ணீரும் எடுத்து வந்து வைத்து, மரியாதையாக சமையல்கட்டு வாசலில் ஒதுங்கி நின்றாள்.
''வெற்றிலை போட்டுக்கோங்கோ.''
''ஊஹும் பழக்கமில்ல.''
''சொல்லுங்கோ மாப்ளே.''
''இனிமே நீங்க என்னை இப்படி மாப்ளேன்னு சொல்றதை விட்டுடணும். உங்களுக்கு மாப்பிள்ளையாகப் போறது நானில்லை... இன்னொருத்தர்.''
பட்டென்று போட்டு உடைப்பது தான் நல்லதென்று, போட்டு உடைத்து விட்டான். இதைவிட வேறு நல்ல ஆரம்பம் இருக்க முடியாதென்றும் நினைத்தான்.
அதைக் கேட்டு, அதிர்ந்து, ஆடிப் போனார், குருமூர்த்தி சிவாச்சாரியார்.
''என்ன மாப்...'' உதட்டை கடித்து, நிறுத்திக் கொண்டவர், ''என்ன சொல்றீங்க...'' என்று குரல் தழுதழுக்க கேட்டார்.
''உங்களுக்கு உண்மை தெரியணும். நிலமை புரியணும். புரிய வைக்கத்தான் நான் நேர்ல வந்திருக்கேன்.''
அவனை அப்படியே பார்த்துக் கொண்டிருந்தார்.
''உங்க பொண்ணு புவனேஸ்வரி, வேற ஒருத்தரை நேசிக்கிறா... அவா ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் உயிரா இருக்கா... அந்த மாதிரி ஒண்ணுபட்ட ரெண்டு மனசை பிரிக்கிறது பாவம். அதனால், உங்ககிட்ட பேசி, அவா ரெண்டு பேருக்கும் திருமணம் பண்ணி வைக்கணும்ன்னு, ஓடி வந்திருக்கேன்.''
தலையில் இடி விழுந்தா மாதிரி உட்கார்ந்திருந்தார், குருமூர்த்தி சிவாச்சாரியார்.
அடி வயிறு கலங்கியது.
'இதனால் தான் இரண்டு, மூன்று நாட்களாக மனசு சரியில்லையோ... மனசை போட்டு புரட்டி எடுத்ததோ... என்னம்மா ஈஸ்வரி... இது என்ன சோதனை...' என, நினைத்துக் கொண்டார்.
மனைவியை பார்த்தார். பயத்திலும், அவமானத்திலும், அவள் குறுகி நின்றிருப்பதை உணர்ந்தார். பின்னர், ராஜாராமனை ஏறிட்டார். மேலே பேச முடியாமல், நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக்கொண்டது. மெல்ல நாவை அசைத்து, உதட்டை ஈரப்படுத்தி, ''இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது?''
''புவனா, அவரோட வந்து என்கிட்ட பேசினா...''
''உங்க இடத்துக்கு வந்திருந்தாளா?''
''இல்ல, இங்க ஹோட்டல்ல வச்சு பேசினோம்.''
''அந்தப் பையன் யாரு... நம் குருக்கள் பரம்பரையா?''
''இல்ல... இங்க, ஐ.ஏ.எஸ்., அகாடமி வச்சு நடத்தறார். பார்க்க கம்பீரமா ரொம்ப நன்னா இருக்கார்.''
''பேரு?''
''கார்த்திகேயன்.''
சுரீரென்று உடம்பெல்லாம் சூடேறியது, குருமூர்த்தி சிவாச்சாரியாருக்கு.
அன்று, புவனாவுடன் கோவிலுக்கு வந்த அந்த இளைஞன், கண் முன் வந்து நின்றான்.
— தொடரும்
இந்துமதி