காய்கறிகள், பழங்களை சமைக்காமல் சாப்பிடும் போது, அவற்றில் இருக்கும் உயிருள்ள சக்தி, சிதையாமல் கிடைக்கிறது. இவற்றில் உள்ள ஆன்டி - ஆக்சிடென்ட், 'விட்டமின்கள் - ஏ, பி2, பி6, சி, டி' போன்றவை எதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது.
அதிலும், 'விட்டமின் சி' தரும் நன்மைகள் பற்றி நாள் முழுதும் பேசலாம்.
பழங்கள் சாப்பிட்டால் சளி பிடிக்கும்; குழந்தைகளுக்கு, மழை, பனி காலங்களில் பழங்கள் தரக் கூடாது என்பது தவறான எண்ணம்; தினசரி ஒரு பழமாவது, உணவில் இடம் பெற வேண்டும்.
தென்னிந்திய உணவில், அதிகம் கார்போ ஹைட்ரேட் உள்ளது.
இதற்கு இணையாக காய்கறிகள் இருந்தால், அதை சிறந்த உணவாக கொள்ளலாம். அதைவிடவும், சாப்பிடும் அளவில், இரண்டு மடங்கு காய்கறி, ஒரு மடங்கு தானியம் இருந்தால், மிகச் சிறந்த உணவு அது தான்.
மஞ்சள்
சுவையை விடவும், இதிலுள்ள பலனை அறிந்த தால் தான், தென்னிந்திய உணவுகளில் மஞ்சள் இல்லாத உணவே இல்லை என்று, நம் முன்னோர் வைத்திருக்கின்றனர்.
இதில் உள்ள, 'குர்குமின்' என்ற வேதிப்பொருள், நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமல்ல, 'கேன்சர், ஆர்த்தரடீஸ், அல்சைமர்' என்று, பல நோய்களையும் தடுக்கும்.
குளியல்
வெதுவெதுப்பான நீரில், கல் உப்பு அல்லது வாசனை எண்ணெய் சில சொட்டுகள் கலந்து குளித்தால், உடல் சுறுசுறுப்பாவதோடு, எப்படிப்பட்ட மன அழுத்தத்தையும் குறைக்கும்; ஆழ்ந்த துாக்கம் வரும்.
மன அழுத்தம் அதிகம் இருந்தால் துாக்கம் வராது; துாக்கம் இல்லாவிட்டால், மன அழுத்தம் அதிகமாகும். போதுமான அளவு துாக்கம் இல்லாவிட்டால், எதிர்ப்பு சக்தி குறையும்.
சுத்தமான துணியில், சில சொட்டுகள் வாசனை எண்ணெய் விட்டு, அவ்வப்போது முகரலாம். இருக்கும் இடத்தில், சில சொட்டுகள் தெளிக்க லாம். துாங்கும் அறையில் தெளிக்கலாம்.
இதனால் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்ய முடியும்.
கார சுவையுள்ள இஞ்சி, பூண்டு, வெங்காயத்தை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக, பூண்டில் உள்ள, 'அலிசின்', இஞ்சியில் உள்ள, 'ஜின்சரால்' போன்ற வேதிப் பொருட்கள், நுண்ணுயிரிகளை அழிக்கும் தன்மை உடையவை.
டாக்டர் யோ.தீபா
தலைவர்,
கை நுட்பப் பிரிவு,
அரசு யோகா மற்றும் இயற்கை
மருத்துவ கல்லுாரி, சென்னை.
044 - 26222516