இளமை பொங்கல் பொங்க இளசுகளை கிறங்கடிக்கும் மங்கை... செங்கரும்பின் சிரிப்பால் இனிக்கும் இதழ்களின் நங்கை... அந்தி மாலை சூரியனின் மெல்லிய சிகப்பு தேகம், நிலவில் இருந்து உடைந்து விழுந்த இடை எனும் பாகம்... என 'பூமி', 'ஈஸ்வரன்' படங்களில் கிராமத்து நாயகியாக கலக்க வரும் 'அழகிய நதி' நிதி அகர்வால் தினமலர் பொங்கல் மலருக்காக மனம் திறக்கிறார்...
* நிதி அகர்வாலின் அழகான குடும்பம் பற்றி சொல்லுங்க?
பிறந்தது ஐதராபாத்.... அப்பா, அம்மா, சகோதரி, 2 நாய் குட்டிகள் தான் என் குடும்பம். டிகிரி முடித்த பின் என்ன வேணும்னாலும் முடிவெடுன்னு அப்பா, அம்மா சுதந்திரம் கொடுத்தாங்க, மும்பை போயி சில விஷயங்கள் கற்றேன். பின் ஹிந்தி படத்தில் அறிமுகம்.
* கேமரா முன் நின்ற அனுபவங்கள்?
முதல் படம் 'முன்னா மைக்கேல்'லில் இயக்குனர் ஷார்ட் சொன்னதும் பயந்தேன். ஒரு டான்ஸர் என்பதால் அந்த படத்தில் டான்ஸரா நடிச்சேன். முதல் நாள் ஷூட்டிங் மறக்க முடியாத அனுபவம்.
* 'முன்னா மைக்கேல்' ஆடிஷனில் 300 நடிகைகளில் நீங்கள் எப்படி தேர்வானீர்கள்?
கடவுளை அதிகம் நம்புகிறவள் நான். அதனைப் போல் வேஷம் கிடைக்கும் என்று நம்பினேன். நடிகை, மாடல் எதுவும் இல்லாத போதும் மும்பை சித்தி விநாயகர் கோயில் போன போது நிறைய பேர் என்கூட போட்டோ எடுத்தாங்க. அப்போ என் மேல் நம்பிக்கை வந்தது. கடவுள் ஆசிர்வாதம் கிடைத்தது. அப்புறம் நடிக்க வந்தேன்.
* மாடலிங் துறையில் எப்படி?
சினிமாவின் முதல் படி மாடலிங்னு முடிவு பண்ணி அதில் ஜெயிச்சேன். எனக்கு மாடல் மாதிரி ஸ்டைலா நடக்க தெரியாது. சினிமாவுக்கு வர அதை பயன்படுத்தினேன், அவ்வளவு தான்.
* தமிழில் முதல் படமாக 'பூமி' வாய்ப்பு எப்படி கிடைத்தது?
'பூமி' தயாரிப்பாளர், இயக்குனர் லக்ஷ்மன் என்னிடம் பேசினாங்க. என் படங்கள் பற்றி நான் பேசியதை பார்த்து ஆடிஷன் வேண்டாம்னு சொல்லி செலக்ட் பண்ணிட்டாங்க. படத்தில் ஒரு காமெடி கேரக்டர்ல நடிச்சிருக்கேன்.
* இணையதளங்களில் உங்கள் கிளாமர் போட்டோக்கள் வலம் வருதே ?
கிளாமரில் இருந்து வெளியில வர முயற்சி பண்றேன். வெறும் கிளாமர் கேரக்டர் மட்டும் நிதி பண்ண மாட்டாங்கன்னு நிரூபிக்கும் அளவு தமிழில் 'பூமி', 'ஈஸ்வரன்' கிராமத்து படங்கள் வந்தது ஹேப்பி.
* ஈஸ்வரன் பட வாய்ப்பு எப்படி வந்தது?
கொரோனா நேரம் வாய்ப்பு கிடைத்தது. இயக்குனர் சுசீந்திரன் மானிட்டர் பார்க்காமல் நடிப்பை தான் பாப்பாரு. திட்டமிட்டு ஷூட் செய்ததால் மொத்த படமும் 25 நாளில் முடிச்சாங்க. இந்த படம் எனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு பொங்கலுக்கு இரண்டு படங்கள் ரிலீஸில் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் ரசிகர்களுக்கு ஹேப்பி பொங்கல் கூறினார் நிதி.
* உங்களுக்கு பிடித்த ஹீரோ, இயக்குனர்கள் பட்டியல் ?
அஜித், சூர்யானு பட்டியல் இருக்கு. இயக்குனர்கள் மணிரத்னம், சங்கர், வெற்றிமாறன் படத்தில் நடிக்கணும்னு ஆசை.