கருமந்தக்குடியில் ஒற்றுமை பொங்கல்
சிவகங்கை அருகே கருமந்தக்குடியில் நெற்பயிர்களை விளைவிக்கும் புற மடை நீரை புனித நீராக சேகரித்து வணங்கி மக்கள் பொங்கல் கொண்டாடும் ஆச்சர்யம் நடக்கிறது.
முன்னோர்கள் இயற்கையை தெய்வமாக வணங்கி வந்துள்ளனர். அந்த மரபினை தொன்று தொட்டுதொடர்ந்து, வழிபாடு செய்து பொங்கல் கொண்டாடி வருகின்றனர் இந்த கிராம மக்கள்.
கருமந்தக்குடி கிராமத்தில் வீடுகள் முன்பு மண்ணை தோண்டி அதில் அடுப்பு போல் செய்து பொங்கல் வைக்கின்றனர். பின்பு ஊரில் உள்ள இளைஞர்கள் தங்கள் வீடுகளில் இருந்து செம்புகளை எடுத்துக்கொண்டு நெற்பயிர்களை விளைவித்த கண்மாய் புற மடைப்பகுதிக்கு சென்று மடையில் இருந்து நீரை எடுக்கின்றனர். அதில் நெற்பயிர்களை இட்டு, அதில் இத்தி இலை, மாவிலை போன்றவையும் போட்டு பிள்ளையார் கோயிலுக்கு எடுத்து சென்று செம்புகளை வைத்து வணங்குகின்றனர். பூஜை முடிந்து ஊர் பூஜாரி செம்புகளை இளைஞர்கள் கையில் வழங்குவார்.
இதனை கீழே வைக்காமல் எடுத்து சென்று வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் புனித நீராக தெளிக்கின்றனர். நெற்பயிர்களை விளைவித்தது போல் வீட்டில் உள்ள காளைகள், செல்வங்களையும் இந்த புனித நீர் பெருக்கெடுக்க செய்யும் என நம்புகின்றனர்.
செம்பில் உள்ள நீருடன் மாட்டு தொழுவத்திற்கு சென்று அங்கு கால்நடைகளை வணங்கி சுதந்திரமாக திரிய அதன் கயிறுகளை அவிழ்த்து விடுகின்றனர்.
அந்த கால்நடைகள் ஊர் சுற்றி வருவதற்குள் செம்பில் இருக்கும் புனித நீரை ஊற்றிவிட்டு இத்திஇலை, மாவிலை போன்றவற்றை தீயை வைத்து எரித்து, பின் வீடுகளுக்கு சென்று தாங்கள் வைத்துள்ள பொங்கலை சாப்பிட தொடங்குகின்றனர். ஆண்டு தோறும் இந்த நிகழ்வு பாரம்பரியமாக நடந்து வருகிறது. கண்மாயில் தண்ணீர் தேங்காமல் வறண்டிருந்தால், ஊரணியில் உள்ள நீரை சேமித்து புனித நீராக வழிபடுவர்.
அப்பகுதியை சேர்ந்த முரளிகண்ணன் தெரிவித்த தாவது: அனைத்து வீடுகளிலும் ஒரே நேரத்தில் ஒற்றுமையாக பொங்கல் வைப்பது பரம்பரை, பரம்பரையாக நடந்து வருகிறது என்றார்.