கொரோனா காலத்தில் மாணவர்களின் இயற்கை விவசாயம்
நாற்பது ஆண்டுகளாக தரிசாக முட்புதர் மண்டிய நிலத்தை கொரோனா ஊரடங்கு காலத்தில் சீர் படுத்தி, 5 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து நெல் விளைவித்த மாணவர்கள் குழு புது நெல்லில் பொங்கலிட தயாராகி வருகின்றது.
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் அருகே குண்டேந்தல்பட்டியை சேர்ந்த மதிவாணன் சிங்கப்பூரில் பணிபுரிகிறார். இவரது மகள் பிளஸ் 2 படிக்கும் அதிதியா, மகன் 10ம் வகுப்பு படிக்கும் அவந்தியன், இவர்களின் உறவினரான சக்கரைவீரப்பன் மகன் 10ம் வகுப்பு படிக்கும் வைனேஷ், மகள் 7 ம் வகுப்பு படிக்கும் தியா , சரவணன் மகன் 8ம் வகுப்பு படிக்கும் சஷ்வந்த் ஆகியோர் கொண்ட மாணவர் படை தான் இந்த சாதனை படைத்துள்ளது.
கொரோனா தடைக்காலத்தில் பள்ளிகள் திறக்கப்படாததால் வீணாக பொழுதை கழிக்காமல் ஆக்கபூர்வமாக சிந்தித்தனர். பெற்றோர்களிடம் விவசாயம் செய்ய அனுமதி கேட்டனர்.
பெற்றோர்களுக்கு
விவசாயத்தில் பெரிய அளவில் ஈடுபாடு இல்லாததால் அனுமதிக்கவில்லை. அதிதியா தனது தாய்வழி தாத்தா தென் ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள சேவுகப்பெருமாளை தொடர்பு கொண்டார். அவர் விவசாயம் செய்ய அனுமதி வழங்கினார். அத்துடன் அதே கிராமத்தை சேர்ந்த கனகராஜ் என்ற விவசாயியை தொடர்பு கொண்டு தனது பேரக்குழந்தைகளுக்கு விவசாயம் சார்பான ஆலோசனை வழங்கி உதவிட கேட்டுக்கொண்டார்.
விவசாயத்திற்கு தேவையான பண முதலீடும் செய்தார்.
களத்தில் இறங்கிய மாணவர்கள் குழு இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கருத்துக்களில் ஈர்க்கப்பட்டு அவரது இயற்கை விவசாயத்தினை பின்பற்றி விவசாயம் செய்ய முடிவு செய்தனர்.
தாத்தா சேவுகப்பெருமாள் இடமான 5 ஏக்கர் நிலம் 40 ஆண்டுகளாக விவசாயம் செய்யாமல் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து புதராக இருந்தது. அதனை அப்புறப்படுத்தி நிலத்தை விவசாயத்திற்கு தயார் செய்தனர். ஆகஸ்டில் விவசாயத்தை துவக்கினர். இயற்கை உரங்களை தாங்களே தயாரித்தனர். 5 ஏக்கரில் ஜே.சி.எல்., நெல் ரகமும், தட்டைப்பயிறு, பாசிப்பயறு, காய்கறிகளில் சுரைக்காய், பூசணிக்காய் பயிரிட்டனர்.
நிலத்தில் குட்டை அமைத்து அதில் கட்லா, நெய்வாழை, குறவை, ஜிலேபி கெண்டை போன்ற மீன்களும் வளர்த்தனர். இவர்களுக்கு இயற்கையாக மழையும் கை கொடுத்தது. கண்மாய் பாசனத்தில் கிடைத்த நீரை மீன் குட்டைகளில் சேகரித்து மீன் வளர்ப்பதற்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்தினர். முதல் அறுவடையாக காய்கறிகள், தட்டைப்பயிறு, பாசிப்பயிறு அறுவடை செய்துள்ளனர்.
மீன் ஒரு முறை பிடித்து விற்பனை செய்துள்ளனர். தற்போது நெல் விளைச்சல் அடைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. அந்த புது நெல்லை எடுத்து அதில் பொங்கல் வைத்து கொண்டாட உள்ளனர்.
அதிதியா தெரிவித்ததாவது: நாங்கள் இப்படி சாதிப்போம் என நினைக்கவில்லை.
4.5 ஏக்கரில் நெல் பயிரும், 40 சென்டில் தட்டைப்பயிறு, பாசிப்பயிறு, 10 சென்டில் காய்கறி பயிரிட்டுள்ளோம். அனுபவம் வாய்ந்த கனகராஜ் ஆலோசனை வழங்கினார்.
நெல் அறுவடை செய்யும் நிலைக்கு கொண்டு வந்தது பெருமையாக உள்ளது. இயற்கை விவசாயம் என்பதால் குறைந்த பட்ஜெட்டில் விளைவித்து விட்டோம். அடுத்த பருவத்தில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக எள் பயிரிட தயாராகி வருகிறோம்.
பள்ளிகள் திறந்தாலும் மாலை நேரங்களில், விடுமுறை தினங்களில் விவசாயத்தை தொடர உள்ளோம், என்றார்.