இவங்க படம் ரிலீஸாகும் தியேட்டர்களுக்கு எல்லம் ரன் எடுக்க ஓடுற கிரிக்கெட் வீரர்களை விட வேகமாக ஓடி, முட்டி மோதி, முதல் ஆளா டிக்கெட் வாங்கி, முதல் வரிசையில் உட்கார்ந்து அழகை ரசித்த ரசிகர்களிடம் சிம்ரன்னு சொல்லி பாருங்க... இப்பவும் ரன் எடுக்க ஓடுவாங்க... அந்த அளவு அழகால் நயன்டீஸ் கிட்ஸ்களை கட்டி போட்ட கட்டழகி சிம்ரன் பேசுகிறார்...
* 'வான் மகள்' குறும்படத்தில் நடிக்க காரணம் கதையா, கவுதம் மேனனா
கவுதம் பெரிய வெற்றி இயக்குனர், அவர் மேல் எனக்கு நம்பிக்கை இருந்தது. கதை சொன்னதுமே ரொம்ப பிடிச்சது. சமூக அக்கறை உள்ளதாக கதையை பார்த்தேன். 20 நாட்களில் கதையை முடிவு செய்து நடித்து முடித்தோம். மதுரையில் சில காட்சிகள் எடுத்தாங்க. முதன்முதலில் குறும்படத்தில் நடிப்பது பெரிய அனுபவமாக இருந்தது
* ஓ.டி.டி.யில் வெளிவரும் குறும்படத்தில் நடிக்கலாமா என்ற தயக்கம் இருந்ததா?
அப்படி ஒரு தயக்கம் எனக்குள் இல்லை. சமூகத்தில் நடக்கும் விஷயங்கள் தான் 'வான் மகள்' கதை. சமூக அக்கறையுள்ள படத்தில் நடிப்பது சந்தோஷமா இருந்துச்சு, பெரிய திரை, சின்னத்திரை ஓ.டி.டி., எதுவா இருந்தாலும் மக்களுக்கும் நமக்கும் தொடர்பு இருக்கு. ஓ.டி.டி., தான் எதிர்காலத்தில் பெரிய பங்கு வகிக்கும்னு நினைக்கிறேன்.
* உங்கள் இடம் அப்படியே இருக்கு; யாராலும் ரீச் பண்ண முடியலயே?
25 ஆண்டுகளாக சினிமாவில் இருக்குறது ஈஸி இல்லை. மக்கள் அவ்வளவு ஒத்துழைப்பு, அன்பு கொடுத்திருக்காங்க. நிறைய வித்தியாசமான கேரக்டர்கள் கிடைத்தது, வெற்றியை எப்போதும் தக்க வைத்திருக்க முடியாது.
* முதல் வெற்றி 'தேரே மேரே சப்னே' முதல்பாவ கதைகள்' வரை ?
சின்னத்திரை டான்ஸ் நிகழ்ச்சி மூலம் பெரிய திரைக்கு வந்தேன், நிறைய மொழிகளில் நடிச்சேன். என் திறமைகளை வெளிப்படுத்த, நிரூபிக்க கிடைத்த நிறைய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தியதால் திரை பயணம் நல்லாவே போகுது.
* ரஜினியுடன் 'பேட்ட' படத்தில ஒரு சின்ன வாய்ப்பு கிடைத்தது...?
ரஜினியுடன் முழு படத்திலும் கதாநாயகியா நடிக்க ஆசைப்பட்டேன். பேட்ட படத்தில் சில காட்சிகள், பாடல் காட்சிகளில் நடித்தாலும் மக்களிடம் நல்லா ரீச் ஆயிருக்கு.. வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் ரஜினியுடன் நடிக்கணும்னு ஆசையில் இருக்கேன்
* திருமணமான நீங்களும் வெற்றியின் உச்சத்தில் இருப்பது பற்றி?
திருமணமாகி 17 ஆண்டுகள் ஆயிடுச்சு, 2 பசங்க இருக்காங்க. எல்லாமே சரியான நேரத்தில் தான் நடந்திருக்கு. பொருத்தமான கணவர் கிடைக்கும் போது காலம் கடத்த கூடாதுனு நினைச்சேன், இப்போ கூட சினிமா வேலை பாத்துட்டு தான் இருக்கேன்,
* உங்களுடைய பெஸ்ட் 5 தமிழ் படங்கள் சொல்ல முடியுமா?
துள்ளாத மனமும் துள்ளும், வாலி, கன்னத்தில் முத்தமிட்டால், அரசு, கோவில்பட்டி வீரலட்சுமி.
* இன்றைய நடிகைகளில் உங்களுக்கு பிடித்தவர்கள்?
கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ்.
* குஷ்பு, நமீதா எல்லோரும் அரசியலில் இருக்கிறாங்க. நீங்க எப்போ வரப்போறீங்க
இது ரொம்ப பெரிய கேள்வி; இப்போது பதில் சொல்வது கஷ்டம்.