'பழையன கழிதலும், புதியன புகுதலும்'என்பது பொங்கலுக்கு முன்பு வரும் போகியை குறிப்பிடுவதாக உள்ளது. உழவனின் உற்ற தோழனான காளைக்கு கால்குளம்புகளுக்கு லாடம் பொருத்துவதில் துவங்கி, கொம்பு அணிகலன்கள், மூங்கணாங்கயிறு, கால்மணி, சதங்கை, கழுத்தில் மணிகள், சங்குகள், தாயத்துகள் என மனிதன் தன்னை அழகுபடுத்திக்கொள்வது போல கால்நடைகளையும் அழகுபடுத்தி பேணியுள்ளான். அத்தகைய ஆபரணங்கள் எல்லாமே இன்று வழக்கொழிந்து வருகின்றன.
திருநெல்வேலியை சேர்ந்த வள்ளிநாயகம் அத்தகைய பழையனவற்றை சேகரித்து வீட்டையே அருங்காட்சியகமாக மாற்றியுள்ளார்.
வக்கீலான இவரது வீட்டில் பல அறைகளில் இத்தகைய பொருட்களை சேகரித்துள்ளார். அறுவடைக்கு பயன்படும் பன்னரிவாள் முதல் கத்தி, ஈட்டி, வாள் என ஆயுதங்களை பாதுகாத்து வருகிறார். பண்டைய காலத்தில் தானியங்களை பாதுகாக்கும் குதில் முதல் சாப்பிட பயன்படுத்தும் வெண்கல கும்பா வரையிலும் சேகரித்து வைத்துள்ளார். எடைக் கருவிகளான உலோகத் தராசு, பண்டத்தராசு, மரக்கம்பாலான துலாக்கருவிகள், அளவை சாதனங்களான உழக்கு, நாளி, மரைக்கா போன்றவையும் இவரது சேகரத்தில் உள்ளன.
காரைக்குடி செட்டிநாடுகளில் பயன்படுத்தப்பட்ட அரியவகை மரப்பெட்டிகள் வைத்துள்ளார். தமிழர்களின் பண்பாட்டில் விளக்கு வழிபாடு தொன்று தொட்டு இருந்துள்ளது. கிராமங்களில் வீட்டு முகப்பில் இன்றளவும் விளக்கு மாடங்கள் உள்ளன. காமாட்சி விளக்கு, குத்துவிளக்கு, பாவை விளக்கு, துாக்குவிளக்கு, நந்தா விளக்கு என துவங்கி மண்ணெண்ணெய் பயன்பாடு வந்த பிறகு லாந்தர் விளக்கு போன்றவை வழக்கில் இல்லாமல் போய்விட்டன. விளக்குகளுக்காக தனி கேலரியே வைத்துள்ளார்.
இந்தியாவில் முதன்முறையாக புழக்கத்தில் வந்த கடிகாரங்கள், ேகமராக்கள், ரெக்கார்டு பிளேயர் அடங்கிய செட்டையும் சேகரித்துள்ளார். வீட்டில் மாட்டுவண்டி ஒன்றையும் பாதுகாக்கிறார்.
வள்ளிநாயகம் கூறுகையில், 'சிறுவயதில் தாத்தா வீட்டிற்கு செல்லும்போது பார்த்த உபகரணங்கள் இன்று ஒன்றுகூட இல்லை. நமது பாரம்பரியம், தொன்மையை வருங்கால சந்ததி அறிந்து கொள்ள இந்த முயற்சி. அவர்களுக்கு இதுவெல்லாம் புதுசாக தெரியும், 'என்றார்.
வள்ளிநாயகம் சினிமா நடிகரும் கூட. 'பரியேறும்பெருமாள்' படத்தில் நடித்துள்ளார். தற்போது மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் 'கர்ணன்' படத்திலும் நடித்துள்ளார். தொன்மையை பாதுகாப்பதில் நாட்டம் காட்டும் வள்ளிநாயகத்தை பாராட்டலாம்.