ஆங்காங்கே குடில்கள், மயில்கள், மெல்லியதாக ஒலித்து கொண்டே இருக்கும் ஓம் எனும் பிரணவ மந்திரம், சுவர்க்கோழிகளின் பக்கவாத்திய பின்னணியில் மயில்கள், செவிகளில் ரீங்காரமிடும் குயில்களின் சங்கீதம், புல் வெளியில் தாவித் தாவி ஓடும் காட்டு முயல்கள்... உடலை ஜில்லென தாலாட்டும் வெண் பனி மேக கூட்டங்கள், மரங்களில் ஊடுருவி மின்னல் கீற்றுகளாய் படர்ந்து ஒளி சிதற்களை முத்து முத்தாக வெளிப்படுத்தும் சூரிய கதிர்கள்.
இப்படி இயற்கை அன்னையின் அரவணைப்பில் அதிகாலையில் எழுந்து சூரிய ஒளி உடலில் படும்படி நடைபயிற்சி மேற்கொள்ளும்போது உடலை பற்றி கொண்டுள்ள நோய்கள் இயற்கையின் வீரியத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மெல்ல நடையை கட்டும்.
இப்படி ஓர் இடம் இருக்கிறதா...!
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே சிவசைலம் எனும் வனத்தில் உள்ளது உலக நல்வாழ்வு ஆசிரமம். இங்கு சமைத்த உணவுக்கு வேலையே இல்லை. முற்றிலும் இயற்கை உணவு. நோய்களுக்கு இயற்கை வாழ்வியல் சிகிச்சை அளிக்கிறார்கள்.
இயற்கை வாழ்வியல் என்பது இயற்கை அளித்த கனிகளையும், காய்களையும் இயற்கையாக உண்பது. துாய நீர், பஞ்ச பூத ஆற்றல்களோடு இயைந்து வாழ்தல். இத்தகையை எளிய வாழ்வியலுக்கு திரும்பும்போது நோய்கள் இயற்கையாவே நீங்குவதை உணரலாம்.
இயற்கை மருத்துவம் என்பது நமது உடலில் உள்ள குணப்படுத்தக்கூடிய உயிராற்றலை மிகைபடுத்தி நோயை நீக்கும் முறையாகும் 'என்கிறார் ஆசிரம நிர்வாகி டாக்டர் ஆர்.நல்வாழ்வு.
இவரது தந்தையும் தமிழறிஞருமான மூ.ராமகிருஷ்ணன் தனது குருவான ம.கி.பாண்டுரங்கனார் வழிகாட்டுதல்படி 1969ல் ஆசிரமத்தை நிறுவினார்.
தந்தையின் சேவையை மகன் நல்வாழ்வு மேற்கொண்டு வருகிறார்.
'கழிவுகளின் தேக்கமே நோய்! கழிவு நீக்கமே சிகிச்சை'எனும் தத்துவத்துடன் செயல்படும் ஆசிரமம். இயற்கை உணவு, யோகா, தியானம் மற்றும் இயற்கை சிகிச்சை முறைகளால் நோய்கள் துண்டை காணோம்; துணியை காணோம் என ஓட்டம் பிடிக்கிறது என்கிறார்கள் இங்கு தங்கியவர்கள். வெளிநாட்டினர் இங்கு வந்து பயிற்சி எடுத்து கொண்டு செல்வதும் நடக்கிறது. இயற்கையுடன் இணைந்து வாழ 93608 69867ல் ஹலோ சொல்லலாம்.