இன்றைக்கு இனிக்க, இனிக்க பொங்கல் எல்லாம் வைச்சு சாப்டாச்சு... அப்புறம் என்ன மக்களே நாளைக்கு தடபுடல் நான்வெஜ் அயிட்டங்களை சமைச்சு சாப்பிட்டு பட்டையை கிளப்பி நாக்கை நர்த்தனம் ஆட விட வேண்டியது தானே... இதோ உங்களுக்காகவே கிராமத்து நான்வெஜ் உணவுகளை சமைப்பது எப்படின்னு நகரத்து (மதுரை) பெண்கள் ஐந்து பேர் டிப்ஸ் கொடுக்குறாங்க.
மட்டன் தம் பிரியாணி - கவுசல்யா
கடாயில் சிறிது நெய், கடலெண்ணெய், ஏலக்காய் (1), பட்டை (2), பிரிஞ்சி இலை (1) வதக்கவும். இதில் லேசாக அரைத்த இஞ்சி (1), பூண்டு (10 பல்), பச்சை மிளகாய் (4) வதக்கவும். பின் பெரிய வெங்காயம் (2), தக்காளி (2), கீறிய பச்சை மிளகாய் (2), 3 விசிலில் வெந்த மட்டன் (1/2 கிலோ), கொத்தமல்லி (1 கை) சேர்க்கவும். வதங்கியதும் 1/2 கப் கட்டி தயிர், எலுமிச்சை சாறு, 1/2 கரண்டி சர்க்கரை சேர்க்கவும். இப்போது நீர் ஊற்றி ஊற வைத்த சீரக சம்பா அரிசி (1/2 கிலோ) முக்கால் பதம் சேர்த்து வேகவிட்டு கொதி வந்ததும்குழி கரண்டி நெய் ஊற்றி வாழை இலையால் மூடவும். சூடான தோசை கல் மீது பிரியாணி சட்டியை வைத்து மேலே கனமான பொருள் வைத்து 30 நிமிடம் காத்திருந்தால் மட்டன் தம் பிரியாணி ரெடி.
தயிர் மட்டன் கறி - உஷா
குக்கரில் தண்ணீர் ஊற்றி உப்பு, கழுவிய மட்டன் (250 கி) 2 விசில் வேக விடவும். கடாயில் எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம் (1/2 கப்), நறுக்கிய தக்காளி (1), கீறிய பச்சை மிளகாய் (4), புதினா வதக்கவும். அரைத்த சோம்பு, சீரகம், மிளகு, பெரிய வெங்காய (1) விழுது, 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வேக வைத்த மட்டன் கலந்து வதக்கி, ஒரு டம்ளர் நீரில் வேகவிடவும். உப்பு, 2 ஸ்பூன் கொத்தமல்லி, 1 ஸ்பூன் மிளகாய், கரம் மசாலா துாள் சேர்த்து வேகவிடவும். நீர் குறைந்து கொதிக்கும் போது தயிரில் (100 கி) கலந்த பொரிகடலை (50 கி), அரைத்த மல்லி தழை (1 கப்) போட்டு கிண்டவும். கொதித்ததும்1 பட்டை, ஏலம், கிராம்பு, 1/2 ஸ்பூன் சோம்பு, கறிவேப்பிலை தாளித்து ஊற்றினால் தயிர் மட்டன் கறி தயார். பூரி, இட்லி, சாதத்துடன் சப்பிட்டால் டேஸ்டாக இருக்கும்.
ஆந்திரா வில்லேஜ் சிக்கன் - மஞ்சுப்பிரியா
சிக்கனுடன் (1/2 கிலோ) இஞ்சி, பூண்டு விழுது (2 ஸ்பூன்) 1 ஸ்பூன் மிளகாய் துாள், கான்பிளார் மாவு, அரிசி மாவு, மைதா மாவு, வினிகர், கரம் மசாலா (1/2 ஸ்பூன்) முட்டை (1), சிறிது உப்பு சேர்த்து 2 மணி நேரம் ஊறவிட்டு கடலெண்ணெய்யில் பொரிக்கவும். தக்காளி (1), பெரிய வெங்காயம் (2) மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிது பட்டை, லவங்கம், சீரகம், தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம், அரைத்த விழுது சேர்த்து வதக்கி இஞ்சி, பூண்டு விழுது (1 ஸ்பூன்), உப்பு சேர்க்கவும்.
5 நிமிடம் வதங்கியதும் 1 ஸ்பூன் சில்லி, தக்காளி, சோயா சாஸ், சிறிது நீர் விட்டு கொதிக்க விடவும் பின் பொரித்த சிக்கன் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு கொத்தமல்லி துாவி இறக்கினால் ஆந்திரா வில்லேஜ் சிக்கன் ருசிக்கலாம்.
மிளகு வெண்ணெய் ஆம்லேட் - சவுமியா
ஒரு பாத்திரத்தில் முட்டை (4) உடைத்து ஊற்றி நன்றாக கலக்கி வைக்கவும். பின் அதில் 2 ஸ்பூன் பால், துருவிய கேரட் (1), நறுக்கிய பெரிய வெங்காயம் (1), பூண்டு (5), பச்சை மிளகாய் (1), சிறிது உப்பு, கொத்தமல்லி இலை, மிளகு பொடி சேர்த்து நன்றாக கலக்கவும். தோசை கல்லில் 1 ஸ்பூன் வெண்ணெய் தடவி முட்டை கலவையை ஊற்ற வேண்டும். மிதமான தீயில் வேக வைத்து எடுத்தால் 'பன்'பதத்தில் ருசியான மிளகு வெண்ணெய் ஆம்லேட் சாப்பிடலாம்.
நெய் மீன் வறுவல் - ஷர்மிளா
சுத்தம் செய்த நெய் மீன் (1/2 கிலோ) பாத்திரத்தில் போட்டு 1 ஸ்பூன் மிளகாய், சீரகம், தனியா, சோம்பு, உப்பு, புளி கரைசலில்(2 ஸ்பூன்) நன்றாக கலக்கி 40 நிமிடம் ஊற விடவும் அல்லது 20 நிமிடம் பிரிட்ஜில் வைக்கவும். சூடாக்கிய தோசை கல்லில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி கலக்கிய நெய் மீன் துண்டுகளை போட்டு முன்னும், பின்னும் பொன்னிறமாகும் வரை புரட்டினால் நெய் மீன் வறுவலை ஒரு பிடி பிடிக்கலாம். ரசம், சாம்பார் சாதத்திற்கு மிக பொருத்தமாக இருக்கும்.